பட்டினத்தாரும் அபூபென் ஆடமும்!

திருவெண்காடர் என்ற பட்டினத்தாரின் பாடல்களுக்கு நாட்டில் பிரசாரம் போதாது. பட்டினத்தார் பாடல் என்றாலே, அவர் தம் அன்னையை இழந்து அலறிய சில பாடல்களை நினைவில் கொள்வர்.
பட்டினத்தாரும் அபூபென் ஆடமும்!


திருவெண்காடர் என்ற பட்டினத்தாரின் பாடல்களுக்கு நாட்டில் பிரசாரம் போதாது. பட்டினத்தார் பாடல் என்றாலே, அவர் தம் அன்னையை இழந்து அலறிய சில பாடல்களை நினைவில் கொள்வர். பட்டினத்தாரின் பாடல்கள் கருத்தாழமும், பக்திச் சுவையும் கொண்டவை. தத்துவங்கள் நிரம்பியவை. இவருடைய பாடல் தொகுப்புகளில் சில, சைவத் திருமுறையான பதினோராம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளன.

"அபூபென் ஆடம்' என்ற ஒருவரைப் பற்றி ஆங்கிலத்தில் ஒரு கதை உண்டு. ஒருநாள் இரவில் அவன் நல்ல தூக்கத்தில் இருந்தான். பக்கத்து அறையிலிருந்து பிரகாசமான ஒளி வந்துகொண்டிருந்தது. எழுந்து அங்கு சென்றான். தேவதூதன் ஒருவன் ஏதோ ஓலையில் எழுதிக் கொண்டிருந்தான்.

"அபூபென் ஆடம்' தூதன் முன்னால் வந்து நின்று, ""இரவு நேரத்தில் இங்கிருந்து என்ன எழுதிக்கொண்டிருக்கிறாய்?''  என்று கேட்டான்.

""நான் இறைவனால் விரும்பப்படுகின்ற சிறந்த அடியார்களின் பெயரை வரிசையாகத் தொகுத்து எழுதுகிறேன்'' என்றான் தூதன்.     ""எல்லோர் பெயரையும் எழுதிய பிறகு கடைசிப் பெயராக என் பெயரை எழுதிக் கொள்வாயா?'' என்று ஆடம் கேட்டான். தேவ தூதன் பதில் கூறாமல் மறைந்தான்.
மறுநாள் அதே தேவதூதன் அங்கு தோன்றினான். ""இறைவனால் விரும்பப்படும் அடியார்களின் பெயர்கள் இந்த ஓலையில் எழுதப்பட்டுள்ளன, படித்துப் பார்!'' என்று கூறி ஓர் ஓலையை ஆடமிடம் கொடுத்தான். ஆடமும் வாங்கிப் படித்துப் பார்த்தான். அவனால் நம்பமுடியவில்லை.  மிகுந்த மகிழ்ச்சி. "அபூபென் ஆடம் என்ற பெயர் முதற் பெயராக எழுதப்பட்டிருந்தது' எனக் கூறி ஆடம் என்பவனின் தெய்வீக பக்தியைக் காட்டினான் அந்த ஆங்கிலேய ஆசிரியன்.
பட்டினத்தார் அதே கருத்தை 
""சிவபெருமானே!  நீ எம் அன்னையான பார்வதி தேவியைத் திருமணம் செய்து கொண்டபோது, உன்னைக் காண வந்த அடியார்கள் பெயரெல்லாம் குறிக்கப்பட்ட நெடும் புத்தகத்தில் எளியவனான என் பெயரும் குறிக்கப் பெற்றால் உன் அருள் நோக்கத்திற்குப் பாத்திரமானேன். உன் கருணைக்குப் பாத்திரமாகும் அணுவும் மலையாகிவிடும். கொசுவும் கருடனாகிவிடும்'' என்றார்.
...    ..... ..... ....   ....  நின்
தமர்பெயர் எழுதிய வரிநெடும் புத்தகத்து
என்னையும் எழுத வேண்டுவன் நின்னருள்
ஆணை வைப்பிற் காணொணா அணுவும்
வானுற நிமிர்ந்து காட்டும் 
கானில்வால் நுளம்பும் கருடனா தலினே.   
(கோயில் நான்மணிமாலை)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com