இந்த வார கலாரசிகன்

அனைவருக்கும் எனது தீபாவளி வாழ்த்துகள்.  ஒவ்வோர் ஆண்டு தீபாவளியின் போதும் "தினமணி' வெளிக்கொணரும் "தீபாவளி மலர்' மூலம் நான் விடுக்கும் வேண்டுகோள் ஒன்று உண்டு. இன்று தீபாவளி என்பதால், அந்த
இந்த வார கலாரசிகன்

அனைவருக்கும் எனது தீபாவளி வாழ்த்துகள்.  ஒவ்வோர் ஆண்டு தீபாவளியின் போதும் "தினமணி' வெளிக்கொணரும் "தீபாவளி மலர்' மூலம் நான் விடுக்கும் வேண்டுகோள் ஒன்று உண்டு. இன்று தீபாவளி என்பதால், அந்த வேண்டுகோளை இதன் மூலம் விடுக்கிறேன்.

நாம் விமரிசையாக தீபாவளி கொண்டாடும் இவ்வேளையில், ஒருவேளை உணவுக்குக்கூட வழியில்லாமல், மாற்று உடையில்லாமல் நம்மிடையே எத்தனை எத்தனையோ குடும்பங்கள் இருக்கின்றன. அவர்களுக்கும் ஆசை இருக்கிறது. கூடவே வறுமையும் இருக்கிறது. தெருவோரமோ, ஓலைக் குடிசையோ அங்கேயும் குழந்தைகள் இருக்கிறார்கள். தங்கள் பெற்றோருடன் தீபாவளி கொண்டாடும் வாய்ப்பிழந்து அநாதை இல்லங்களில் பல பிஞ்சு உள்ளங்கள் தவிக்கின்றன. முதியோர் இல்லங்களில் பாசத்திற்காக ஏங்கித் தவிக்கும் பலர் இருக்கிறார்கள்.

நமது தீபாவளிக் கொண்டாட்டத்தில் அவர்களையும் இணைத்துக் கொள்ள வேண்டாமா? அவர்களும் புத்தாடை உடுத்தி,  வயிறார உண்டு, மகிழ்ச்சியாகப் பட்டாசு வெடித்துக் களிப்பதை நமது தீபாவளிக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக்குங்கள் என்பதுதான்  எனது வேண்டுகோள்.   

பதிப்பாளர் ஒருவருடைய படைப்பை இன்னொரு பதிப்பகம் வெளியிட முற்படுகிறது என்றால், அந்தப் பதிப்பாளர் எப்பேர்ப்பட்டவராக இருக்க வேண்டும்?  விஜயா பதிப்பகம் மு.வேலாயுதம் எழுதிய  "இதயம் தொட்ட இலக்கியவாதிகள்' என்கிற புத்தகம் வானதி பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டிருக்கிறது.  

கவியரசர் கண்ணதாசன்  "பொன் மழை'  என்கிற நூலை எழுதுகிறார். அதன் கையெழுத்துப் பிரதியை விஜயா பதிப்பகம் வேலாயுதத்திடம் கொடுத்துப் புத்தகமாக வெளியிடச் சொல்கிறார்.  கவிஞரின் புத்தகத்தை வெளியிடமாட்டோமா என்று  எல்லா பதிப்பாளர்களும் தவம் இருப்பார்கள். ஆனால், வேலாயுதம், ""இதை நீங்கள் வானதி பதிப்பகத்திலேயே கொடுத்துவிடுங்கள். அவர்கள்தான் உங்கள் நூல்களைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்கள். அதுதான் தொழில் தர்மம்'' என்று திருப்பிக் கொடுத்து விடுகிறார். தன் தந்தை வானதி திருநாவுக்கரசின் சார்பில்  அவர் மகன் வானதி ராமநாதன், விஜயா மு.வேலாயுதம் எழுதிய "இதயம் தொட்ட இலக்கியவாதிகள்' புத்தகத்தை வெளியிட்டிருப்பது நட்பின் ஆழத்தை நிரூபிக்கிறது. 

அன்று முதல் இன்றுவரை  தமிழகத்திலுள்ள இலக்கிய ஆளுமைகள் அனைவருடனும் நெருங்கிப் பழகிய வேலாயுதம் அண்ணாச்சி, அவர்கள் குறித்த தனது அனுபவங்களை எழுத்தில் வடிக்க வேண்டுமென்று நானேகூட அவரிடம் பலமுறை கேட்டுக் கொண்டிருக்கிறேன். இந்தப் புத்தகத்தில் மு.வ.வில் தொடங்கி,  கு.அழகிரிசாமி, கவிஞர் கண்ணதாசன், ஜெயகாந்தன், நா.பா., கவிஞர் மீரா, சுஜாதா, அப்துல் ரகுமான், வ.விஜயபாஸ்கரன், "வானதி' திருநாவுக்கரசு, அருட்செல்வர் நா.மகாலிங்கம், பழனியப்ப செட்டியார், சக்தி வை. கோவிந்தன் என்று 13 ஆளுமைகளுடனான தனது சுவாரசியமான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார் விஜயா பதிப்பகம் மு. வேலாயுதம். 

ஒவ்வொரு ஆளுமைகளுடனான அவரது தனிப்பட்ட அனுபவங்கள்  ஒருபுறம் என்றால், அந்த ஆளுமைகளின்  தனிப்பட்ட குணாதிசயங்களை வெளிக்கொணர்ந்திருக்கும் விதம்  அவருக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் அற்புதமான எழுத்தாளரை அடையாளம் காட்டுகிறது. வேலாயுதம் அண்ணாச்சியின் அந்த எழுத்தாற்றலை அடையாளம் கண்டு, "அமுதசுரபி' இதழில் தொடர் எழுதவைத்த அதன் ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணனுக்கு முதலில் நன்றி கூற வேண்டும். 

"அமுதசுரபி'யில் வெளிவந்தபோது,  அந்தக் கட்டுரைகளைப் படித்ததற்கும் இப்போது புத்தகமாகப் படிப்பதற்கும் ஒரு வித்தியாசம் இருக்கிறது. தொடராக வரும்போது பல கட்டுரைகளுக்கு இடையே  படித்துவிட்டு நகர்ந்து விடுகிறோம். "இதயம் தொட்ட இலக்கியவாதிகள்' புத்தக வடிவம் பெற்ற பிறகு படிக்கும்போது, வேலாயுதம் அண்ணாச்சியுடன் ஒருவர் பின் ஒருவராக 13 இலக்கியவாதிகளுடனும் நடைப்பயணம் செல்லும் வித்தியாசமான அனுபவம் ஏற்படுகிறது.  

இந்தப் புத்தகத்தில் உள்ள ஆளுமைகளில் 12 பேருடன் அவருக்கு நேரடித் தொடர்பு  இருந்திருக்கிறது. 

13-ஆவது ஆளுமையான சக்தி வை. 

கோவிந்தனை அவர் நேரில் சந்தித்ததில்லை. ஆனால்,   சக்தி வை. கோவிந்தனை தனது பதிப்புத்துறை குருவாக ஏற்றுக் கொண்டவர் வேலாயுதம். அவர் குறித்து இந்தப் புத்தகத்தில்  வேலாயுதம் அண்ணாச்சி ஒரு சுவாரசியமான சம்பவத்தை எழுதியிருக்கிறார்.

சுதந்திர இந்தியாவின் கவர்னர் ஜெனரலாகப் பதவி ஏற்ற ராஜாஜி ஒருமுறை சக்தி காரியாலயத்திற்கு வருகிறார். அவரைக் கண்டதும் பதைபதைத்து அவருக்கு ஏதாவது வாங்கிவர வேண்டுமென்று ஓடுகிறார் சக்தி வை. கோவிந்தன். உடனே, அவரைத் தடுத்து நிறுத்திய ராஜாஜி சொல்கிறார் - ""நான் கவர்னர் ஜெனரலாக இங்கு வரவில்லை. சக்தி காரியாலயத்தின் வாசகன் ராஜகோபாலாசாரியாக வந்திருக்கிறேன்.''  

மு.வ., கவிஞர் கண்ணதாசன், ஜெயகாந்தன், நா.பா. ஆகியோருடனான அவருடைய தொடர்பும், அனுபவங்களும் மெய்சிலிர்க்க வைக்கின்றன.  விஜயா பதிப்பகம் வேலாயுதம் அண்ணாச்சியின் "இதயம் தொட்ட இலக்கியவாதிகள்' குறித்த அடுத்த புத்தகத்திற்காகக் காத்திருக்கிறேன். 

தமிழின் பல்வேறு சிறப்புகள் குறித்துப் பெருமிதம் அடையும் நாம் ஒரு முக்கியமான சிறப்பை உணராமல் இருக்கிறோம். இந்தியாவில் எத்தனை எத்தனையோ மொழிகள் இருந்தாலும், அச்சு வாகனம் ஏறிய முதல் மொழி தமிழ்தான். 

தமிழகத்தின் தரங்கம்பாடியில் 1705-இல் வந்திறங்கிய டென்மார்க்கைச் சேர்ந்த பிராடஸ்டென்ட் பாதிரிமார்கள் "பைபிள்' அச்சிடுவதற்காக அங்கே ஓர் அச்சுக்கூடம் நிறுவினார்கள். சீகன்பால்கு என்கிற பாதிரியார் விவிலியத்தின் பழைய, புதிய ஏற்பாடுகளைத் தமிழ்ப்படுத்தினார். 1714-இல்  தமிழில் எழுதப்பட்ட "புதிய ஏற்பாடு' அங்கே அச்சிடப்பட்டது. அதனால்தான் சொன்னேன், அச்சு வாகனம் ஏறிய முதல் மொழி தமிழ் என்று. கோ. மன்றவாணன் "கொத்திச் செல்வேன் வானத்தை' என்கிற கவிதைத் தொகுப்பில் "இணை (த)யத்தில் வாழும் எம் தமிழ்' என்கிற கவிதையிலிருந்து ஐந்து வரிகள்.

நிலவில் கால்பதித்த
நீல்ஆம்ஸ்ட்ராங் போல்
முதன்முதலில் இந்தியாவில்
அச்சுப் பொறியில்
அரசநடை போட்டது தமிழ்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com