Enable Javscript for better performance
இந்த வாரம் கலாரசிகன்- Dinamani

சுடச்சுட

  
  tm1

  சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது மிகுந்த மன நிறைவையும், மகிழ்ச்சியையும் அளிக்கும். அப்படியொரு நிகழ்ச்சியாக இருந்தது கடந்த வியாழனன்று கலந்துகொண்ட குரோம்பேட்டை மாணவர் கம்பர் கழக நிகழ்ச்சி. நமக்கு அடுத்த தலைமுறையினர் மூன்றாவது தலைமுறையினரை வழிநடத்துவதைக் காண்பதில் யாருக்குத்தான் ஆனந்தம் இருக்காது?
   ஒன்பது ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் குரோம்பேட்டை மாணவர் கம்பர் கழகம் ஏனைய கம்பன் கழகங்களிலிருந்து சற்று வேறுபடுகிறது. ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு, கம்பனிலும் தமிழிலும் தாளாப்பற்று கொண்ட கல்லூரி மாணவ, மாணவியர் சிலர் ஒன்றுகூடிக் கம்பன் விழா நடத்துவது என்று முடிவெடுத்தார்கள். "எண்ணிய எண்ணியாங்கு எய்துப - எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்' என்பது அவர்கள் விஷயத்தில் மெய்ப்பிக்கப்பட்டது.
   கல்லூரி மாணவியாக பத்மா மோகன் குரோம்பேட்டை மாணவர் கம்பர் விழாவுக்கு என்னை அழைப்பதற்கு வந்தது இப்போதும் கண்முன் தெரிகிறது. அப்போது கலந்துகொள்ள இயலவில்லை. ஒவ்வோராண்டும் அழைப்பிதழுடன் என்னை சந்திப்பார்.
   ஆண்டுகள் ஒன்பது ஓடிவிட்டன. திருமணமாகித் தாயாகிவிட்டபோதும், அன்று இருந்த அதே உற்சாகத்துடனும், உத்வேகத்துடனும் மாணவர் கம்பர் விழாவை அவர் முனைப்புடன் நடத்துவதற்கு அவருடைய கணவரும், புகுந்த வீட்டினரும் அவருக்குத் தருகின்ற ஆதரவுதான் என்பதைச் சொல்லியா தெரிய வேண்டும்?
   குரோம்பேட்டை மாணவர் கம்பர் விழா ஏனைய கம்பன் விழாக்களிலிருந்து எப்படி வேறுபடுகிறது என்று நீங்கள் கேட்கக்கூடும். இவர்கள் ஆண்டுதோறும் நிகழ்ச்சிகளை நடத்துவதுடன் நின்றுவிடுவதில்லை. சென்னையையும் அதைச் சுற்றியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களிலுள்ள பள்ளி மாணவர்களுக்குக் கம்பனில் கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டிகள் நடத்துகிறார்கள். விநாடி-வினாப் போட்டிகூட நடத்துகிறார்கள். அடுத்த தலைமுறைக்குக் கம்ப காதையை எடுத்துச் செல்லும் பெரும் பணியை, ஆர்ப்பாட்டமே இல்லாமல் சிரமேற்கொண்டு செய்து வருகிறார்கள்.
   திருமதி பத்மா மோகனுக்கும், குழுவினருக்கும் உறுதுணையாக வை.தா.ர.மூர்த்தியும், எஸ். ஆர்.வெங்கடேஸ்வரனும் புரவலர்களாகக் கிடைத்தது மிகப்பெரிய ஆதரவு. அவர்களுக்கு வழிகாட்டவும், ஆதரவும், உற்சாகமும் தருவதற்கு செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவர் முனைவர் தெ.ஞானசுந்தரம் கிடைத்திருப்பது, அவர்களுக்குக் கிடைத்திருக்கும் யானை பலம்.
   அம்பத்தூர் கம்பன் கழகம், புதுச்சேரி கம்பன் கழகம், நாமக்கல் கம்பன் கழகம், புதுக்கோட்டை கம்பன் கழகம், கோவை கம்பன் கழகம் என்று ஏனைய கம்பன் கழகத்தினர் இந்த இளைஞர் பட்டாளம் நடத்தும் விழாவில் கலந்துகொண்டு உற்சாகப்படுத்துவது அதைவிட மகிழ்ச்சி அளிக்கிறது. "கம்பன் புகழ்பாடிக் கன்னித் தமிழ் வளர்க்க' அடுத்த தலைமுறை தயாராகியிருப்பதையும், தங்களுக்கு அடுத்த தலைமுறையையும் அவர்கள் தயார் செய்வதையும் கண்டு நெகிழ்ந்து போயிருக்கிறேன்.
   
   இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக உலகம் அண்ணாந்து பார்த்து வியப்பது மட்டுமல்லாமல், முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாமல் அதே நேரத்தில் புரிந்துகொள்ள விழைவது கெளதம புத்தரைத்தான். 1879-இல் சர்.எட்வின் அர்னால்டு எழுதிய "தி லைட் ஆஃப் ஏஷியா' (ஆசியாவின் ஜோதி) என்கிற கவிதை நூல் லண்டனில் வெளியானது முதல், புத்தர் குறித்தும், பெளத்தம் குறித்தும் எண்ணிலடங்காத புத்தகங்கள் உலகில் அனைத்து மொழிகளிலும் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.
   "ஞான பீடம்' விருதுக்குத் தகுதியான சிந்தனையாளர், எழுத்தாளர் என்று ஜெயகாந்தனால் மதிக்கப்பட்ட தமிழ் எழுத்து ஆளுமை ப.ராமஸ்வாமி. அவர் எழுதியிருக்கும் புத்தகம் "புத்தரின் தவமும் தத்துவங்களும்'. புத்தர் குறித்தும் பெளத்தம் குறித்தும் முழுமையான புரிதல் வேண்டும் என்று விழைபவர்களுக்கு "புத்தரின் தவமும் தத்துவங்களும்' நிஜமாகவே ஒரு போதிமரம்.
   கெளதம புத்தரின் வரலாறு, தம்ம பதம் என்றால் என்ன, புத்த ஞாயிறு, புத்தரின் போதனைகள், பெளத்த தருமம் என்று ஐந்து பகுதிகளாகத் தந்திருக்கிறார் ப.ராமஸ்வாமி.
   ""பெருமானைப் பற்றிய சரித்திர ஆதாரங்கள் குறைவு; கற்பனைக் கதைகளே அதிகம். பெளத்த திருமுறைகளிலிருந்து சில குறிப்பிட்ட சரித்திர ஆதாரங்களே கிடைக்கின்றன. அவைகளில் புத்தர் தனது சுயசரிதையாகத் தாமே எழுதியுள்ள பகுதிகள் மேலும் சுருக்கமானவை. சரித்திரக் குறிப்புகளை மட்டும் ஆதாரமாய்க் கொண்டு எழுதினால், நூல் சதையற்ற எலும்புக்கூடு போலிருக்கும். கதைகளையே ஆதாரமாகக் கொண்டு எழுதினால், புதிய புராணமாகிவிடும். எனவே, சரித்திரம், புராண வரலாறு ஆகிய இரண்டையும் துணைகொண்டு இந்நூலை எழுதியுள்ளேன்'' என்று கூறுகிறார் ப.ராமஸ்வாமி.
   ""புத்தரிடம் சொர்க்கமும் இல்லை, நரகமும் இல்லை. பழைய புராணங்களும், சாத்திரங்களும் அவரிடம் இல்லை. பிரார்த்தனை செய்வதால் பாவங்கள் ஒழியுமென்றோ, உயிர்களின் துக்கம் ஒழியுமென்றோ அவர் நம்பவில்லை. மக்களின் துயரம் நீங்க வேண்டுமானால், அவரவர் முயற்சியாலேயே ஆக வேண்டும். புறத்திலிருந்து எந்த உதவியும் வாராது. கருமம், காரியமெல்லாம் அகத்திலேதான் நிகழ வேண்டும். ஒவ்வொருவர் விதிக்கும் அவரவரே பொறுப்பு'' - இதுதான் பெளத்தம் சொல்லும் உபதேசம்.
   தம்ம பதம் என்ன சொல்கிறது, புத்தரின் போதனைகள் என்னென்ன, பெளத்த தருமம் என்றால் என்ன என்பதையெல்லாம் ப.ராமஸ்வாமியைவிடத் தெளிவாகவும், புரியும்படியும் ஆங்கிலப் புத்தகங்கள்கூடச் சொன்னதில்லை.
   பெளத்தம் கடவுளை நம்புகிறதா? ""ஓ, பிக்குக்களே! பிறப்பற்ற, ஆரம்பமற்ற, சிருஷ்டிக்கப்படாத, உருவாகாத ஒன்று இருக்கிறது. அப்படி ஒன்றில்லையானால், பிறப்புள்ள, ஆரம்பமுள்ள, சிருஷ்டிக்கப்பட்ட, உருவுள்ள உலகிலிருந்து தப்பித்துக் கொள்ளவே முடியாமல் போகும்'' - இதுதான் பெருமானுடைய உபதேச மொழி.
   இறைமறுப்புக் கொள்கையாளர்கள் தெளிவு பெறுவார்களாக...
   
   விமர்சனத்துக்கு வந்திருந்தது "அம்மா என்றொரு அம்மா!' என்கிற கவிஞர் சோமலூர் செந்திருவின் கவிதை தொகுப்பு. அதில் ஒரு கவிதை. எத்தனை எத்தனை அர்த்தங்கள். எத்தனை எத்தனை உணர்வுகள்.
   
   அறுபடாமலே
   இருந்திருக்கலாம்
   கொப்பூழ்!
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai