கம்ப காவியத்தில் விநாயகர்!

கம்ப காவியத்தில் விநாயகர்!

கம்பராமாயணம் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை உடையது. அதில் ஓரிடத்தில் மட்டும் விநாயகரைக் கம்பர் குறிப்பிட்டுள்ளார்.

கம்பராமாயணம் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை உடையது. அதில் ஓரிடத்தில் மட்டும் விநாயகரைக் கம்பர் குறிப்பிட்டுள்ளார்.
 அறுவகை சமயங்களுள், விநாயகரை முதற் கடவுளாகப் போற்றி வணங்கும் சமயம் "காணாபத்தியம்' எனப்படும். கம்ப காவியத்தில் முருகனைப் போற்றும் இடங்கள் பல உள்ளன. ஆனால், "விநாயகரை' ஓரிடத்தில் மட்டுமே பாடியிருக்கிறார்.
 இராவணன் மகனான அதிகாயனுக்கும் இலக்குவனுக்கும் போர் தொடங்கியது. அன்றைய போரில் முதலில் 56 ஆயிரம் யானைகளை இலக்குவன் அழித்தான் (செய்.138). மீண்டும் 100 ஆயிரம் யானைகளை இராவணன் அனுப்ப, அவற்றையும் இளையோன் அழித்தான். மீண்டும் இராவணன் கோடி யானைகளை ஏவினான். அவற்றையும் இலக்குவன் அழித்தான். இலக்குவனுக்குத் துணையாக அனுமனும் பல யானைகளைஅழித்தான்.
 இவ்வாறு ஒரு கோடியே, ஒரு லட்சத்து 56 ஆயிரம் யானைகள் அன்றைய போரில் அழிய, இலக்குவன் யானைகளைத் தேடிக் கொல்வது கண்டு, "யானை போல் வடிவுடைய மலைகள் அஞ்சின; மேகங்கள் அஞ்சின; யானை போல் கறுத்துள்ள வனங்களும் அஞ்சின; எண்திசை யானைகளும் அஞ்சின; கடல் அலைகளும் அஞ்சின. இவ்வாறு அஞ்சிய சிலவற்றைப் பற்றி வேறாகக் கூற வேண்டியதில்லை. ஏனெனில், ஒப்பற்ற ஐங்கரம் கொண்ட வேழமும் (விநாயகக் கடவுளும்) தான் யானையின் வடிவைக் கொண்டிருத்தலால் தன்னையும் இலக்குவன் எங்குக் கொல்வானோ? என்ற அச்சத்தை அடைகின்றது' என்று ஓரிடத்தில் விநாயகரைக் கம்பர் குறிப்பிடுகிறார். (அதிகாயன் வ.ப-153)
 "மலைஅஞ்சின; மழைஅஞ்சின; வனமஞ்சின; பிறவும்
 நிலைஅஞ்சின; திசை வெங்கரி நிமிர்கின்றன கடலின்
 அலைஅஞ்சின; பிறிதென் சிலதனி ஐங்கர கரியும்
 கொலை யஞ்சுதல் புரிகின்றது கரியின்படி கொளலால்'
 -முனைவர் இரா.வ.கமலக்கண்ணன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com