தமிழியல் ஆய்வு வளர்ச்சிக்கு தனிநாயக அடிகளாரின் பங்களிப்பு

இருபதாம் நூற்றாண்டு கண்ட தகைசால் தமிழறிஞர்களுள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர் தவத்திரு தனிநாயக அடிகளார்.
தமிழியல் ஆய்வு வளர்ச்சிக்கு தனிநாயக அடிகளாரின் பங்களிப்பு

இருபதாம் நூற்றாண்டு கண்ட தகைசால் தமிழறிஞர்களுள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர் தவத்திரு தனிநாயக அடிகளார். இலங்கைத் தீவில் உள்ள யாழ்ப்பாணத் தமிழ் மண்ணினை அடுத்த கரம்பொன் என்னும் ஊரில் 2.8.1913 அன்று பிறந்தவர் சேவியர் ஸ்பினிஸ்லாஸ் தனிநாயகம் என்னும் தனிநாயக அடிகளார். 
தமிழ், ஆங்கிலம், இலத்தீன், இத்தாலியம், பிரெஞ்சு, செருமன், மலாய், சிங்களம் முதலான பன்னிரு மொழிகளில் பழுத்த புலமையும், உளவியல், ஒப்பியல், மக்கள் இயல், கல்வி இயல், அரசியல், அறவியல், இறையியல் முதலான பல்வேறு அறிவுத் துறைகளில் ஆழ்ந்த பயிற்சியும் கைவரப் பெற்றவர் அவர். 
உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தை (IATR: International Association of Tamil Reseaerch) நிறுவி, அதன் வழியாக உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகளைச் செவ்வனே நடத்திக் காட்டி, உலகத் தமிழர்களை ஒருங்கிணைத்ததிலும். "Tamil Culture', "Journal of Tamil Studies' என்னும் சீரிய ஆங்கில ஆய்விதழ்கள் வாயிலாக உலக அரங்கில் தமிழின் சால்பினைப் பரவச் செய்ததிலும் அடிகளாரின் பங்களிப்பு முதன்மையானது. 
தனிநாயக அடிகளார் "சங்க இலக்கியத்தின் சிறப்பியல்பு' என்னும் தலைப்பில் எழுதியுள்ள 16 பக்க அளவிலான ஆய்வுக்கட்டுரை "தமிழ்த் தூது' என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது. இக் கட்டுரையில் சங்க இலக்கியத்தின் சிறப்பியல்புகளாக அடிகளார் சுட்டுவன வருமாறு: 
1. ஒன்றே உலகம் என்ற உயரிய மனப்பான்மை, 2. தற்காலத் தன்மை 3. கண்ணோட்டம், 4. நீதிநெறிக் கருத்துக்களின் செறிவு, 5. அவலச் சுவையின் ஆட்சி, 6. அகத்துறை இலக்கியங்களின் மாட்சி, 7. பழந்தமிழ்ப் புலவர்களின் இயற்கை ஈடுபாடு, 
8. அழகொடு இரண்டறக் கலக்கும் இயல்பு, 9. உளநூற் பயிற்சி, 10. உள்ளதை உள்ளவாறே கூறும் பான்மை, 11. வாழ்க்கையின் மேலான குறிக்கோள்கள் மற்றும் தூய கொள்கைகள், 12. உயர்ந்த அரசியல் அமைப்பு. இவற்றின் அடிப்படையில் சங்க இலக்கியங்களை விரிவாக ஆராய்வதற்கு இடமுண்டு.
"இயற்கைத்தானும், தமிழ்ப் புலவர் கையாண்ட முறையில், வேறு எம்மொழிப் புலவரும் கையாண்டிலர். தமிழரின் இயற்கை ஈடுபாட்டைப் பற்றி ஆராயுந்தோறும், எந்நாளும் புதிய கருத்துக்களையும் வியத்தற்குரிய உண்மைகளையும் கண்டு வருகின்றேன்'' எனப் பெருமிதம் பொங்க மொழிவதுடன் நில்லாமல்; "Landscape and Poetry; A Study of Nature in Classical Tamil Poetry' என்னும் ஆங்கில நூலில் அடிகளார் தம் ஆய்வின் பயனாகக் கண்டுணர்ந்த புதிய கருத்துக்களையும், வியத்தற்குரிய உண்மைகளையும் பதிவு செய்துள்ளார். 
பேராசிரியர் ரைடர் என்பவர் காளிதாசரின் மேகதூதத்தைப் பற்றி ஆராயும் பொழுது, அச்செய்யுளில் தோன்றும் இயற்கை ஈடுபாட்டின் தன்மை பிற இலக்கியங்கள் எவற்றிலும் இல்லை என வியந்து வற்புறுத்துகின்றனர். அன்னார் கபில பரணர் முதலானோர் இலக்கியங்களைக் கண்ணுற்றிருப்பரேல், அதனினும் சால வியத்தற்குப் பல காரணங்களைக் கண்டிருப்பர். ஏனெனில், தமிழ் மக்கள் வரலாற்று முறைமை எட்டாத காலந்தொட்டு நிலத்தை ஐந்திணையாகப் பிரித்து, அதன் இயற்கையே பண்பாட்டின் அடிப்படை என உணர்ந்திருந்தனர்.
குறிஞ்சிச் செடி மலைநாட்டில் மிக்க சிறப்புடையது. மலைநாட்டில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் ஒரு பூ. 
தேவகுலத்தார் என்னும் புலவர் பாடும் பாடல் (குறுந். பா.3)., குறிஞ்சிப் பூக்கள் மலரும் ஆண்டில் தேன் மிகுதியாகக் கிடைக்கும் என்பதையும், அதனைப் பெருந்தேன் என்று கூறுவது பற்றியும் குறிப்பிடுகிறார். குறிஞ்சிப் பூவே சிறப்புப் பூ ஆதலால், மலையையும் மலை சார்ந்த இடத்தையும் குறிஞ்சி எனக் குறித்தனர். அவ்வாறே, பிற நிலங்கட்கும் முல்லை, பாலை, மருதம், நெய்தல் எனப் பெயர் வைத்ததற்கும் மலர்களும், மரங்களும்தான் காரணமாக உள்ளன.
பாலை மரம் இன்று தென் இந்தியாவில் காண்பது அரிது. உரையாசிரியர் இளம்பூரணர் ஒருவரே பாலை மரம் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்: ""பாலை என்பதற்கு நிலம் இன்றேனும், வேனிற் காலம் பற்றி வருதலின், அக்காலத்துத் தளிரும் சினையும் ஊடுதலின்றி நிற்பதாம் பாலை என்பதொரு மரமுண்டாகலின் அச்சிறப்பு நோக்கிப் பாலை என்று குறிப்பிட்டார்'' என்பது அவர் கூற்று. பாலை மரத்தின் காய்கள் குறட்டின் வாய் போன்று இருக்கும் என்கிறது நற்றிணைப் பாடல் ஒன்று: "கொடிறு போல் காய வாலிணர்ப் பாலை' (நற்றிணை, 107).
"மலராயினும், இலையாயினும், மரம், செடி, கொடி எதுவாயினும், தமிழர்தம் வாழ்க்கையில் பயன்படுத்திய முறையை நுணுகி ஆராயுமிடத்து, வேறு எந்த மக்கட் குழுவினரும் இவ்வாறு அமைத்துப் பயன்படுத்தியுள்ளனர் எனத் தோன்றவில்லை'' என்னும் பேருண்மையைத் தக்க சான்றுகளுடன் அந்நூலில் தெளிவுபடுத்தியுள்ளார்.
"திருவள்ளுவர்' என்ற நூலில் அடிகளார் ""வள்ளுவரின் ஒழுக்க இயலை கிரேக்க, உரோமிய நாட்டு அறிஞர்களின் ஒழுக்க இயலுடனும், புத்தரின் ஒழுக்க இயலுடனும் நுண்ணிதின் ஒப்புநோக்கி ஆராய்ந்துள்ளார். முடிவுரையில், "வள்ளுவரின் ஒழுக்க இயலை எபிரேயருடைய ஒழுக்க இயலுடனும், இஸ்லாமிய ஒழுக்க இயலுடனும், தர்ம சாஸ்திரங்களின் ஒழுக்க இயலுடனும், சீன ஒழுக்க இயலுடனும் ஒப்பிட்டுப் பயில எண்ணி உள்ளேன்'' என்றும் குறிப்பிட்டுள்ளார். 
வள்ளுவரோ எல்லா உலகிற்கும், எல்லா மக்களுக்கும் பயன்படும் முறையில் தமிழோ, தமிழ்நாடோ என்ற குறிப்பேதும் இல்லாமல் உலகெலாம் தழுவுதற்குரிய பான்மையில் தம் நூலை யாத்துள்ளார் என்றும், வள்ளுவருடைய ஒழுக்க இயலோ "Optimism' என்னும் இன்ப இயற்பண்பினை அடிப்படையாகக் கொண்டது என்னும் நூலில் ஒப்பியல் நோக்கில் தக்க சான்றுகள் காட்டி அடிகளார் நிறுவியுள்ள கருத்துகள் திருக்குறள் ஆய்வில் புதுவெளிச்சம் பாய்ச்சுவனவாகும்.
""ஆங்கிலம் வணிகத்தின் மொழி என்றும், இலத்தீன் சட்டத்தின் மொழி என்றும், கிரேக்கம் இசையின் மொழி என்றும், ஜெர்மன் தத்துவத்தின் மொழி என்றும், இத்தாலியம் காதலின் மொழி என்றும் கூறுவது, ஒரு புடை ஒக்குமெனின், தமிழ் இரக்கத்தின் மொழி எனக் கூறுவது இனிது பொருந்தும். பக்தியின் மொழி எனலுமாம்'' என்னும் கருத்தியலை முதன்முதலாக ஆய்வுலகிற்கு உணர்த்தியவர் தனிநாயக அடிகளாரே ஆவார். 
உலகின் பல்வேறு நாடுகளுக்குத் தூதுவராகச் சென்றதன் பயனாகவும், பிற மொழிகளையும் அவற்றின் இலக்கியங்களையும் கற்றறிந்ததன் பயனாகவும் தனிநாயக அடிகளார் வலியுறுத்தும் முப்பெருங் கருத்துகள் வருமாறு:
"1. உலக இலக்கியத் திரட்டு (World Classics)என்னும் பெருந்தொகை நூல்களில் நம் இலக்கிய நூல்களும் இடம்பெறும் பெருமை அடைவித்தல் வேண்டும்.
2. இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தை, திருவள்ளுவர் அருளிய திருக்குறளை, சங்கச் சான்றோரின் அகத்துறை இலக்கியங்களை உலக மாந்தர் படித்து இன்புறுமாறு செய்வித்தல் வேண்டும். 
3. தமிழ் இலக்கியம், தமிழ்ப் பண்பு, தமிழ்க் கலை, தமிழ் வரலாறு முதலியவற்றின் மாண்பினை உலகிற்கு உணர்த்த வேண்டும்''.
இம் முப்பெரும் பணிகளும் செவ்வனே நிறைவேறுவதற்கு இன்று நம் நாட்டிற்குத் தேவைப்படுவோர் தனிநாயக அடிகளார் போன்ற ஆன்றமைந்தடங்கிய கொள்கைச் சான்றோராகிய ஆராய்ச்சியாளர் பலரே ஆவர்.
- முனைவர் நிர்மலா மோகன்
இன்று: ( 1.9.1980 ) 
தனிநாயக அடிகளார் நினைவு நாள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com