Enable Javscript for better performance
இந்த வாரம் கலாரசிகன்- Dinamani

சுடச்சுட

  
  tm4

  புது தில்லி "இந்தியா கேட்'டிலிருந்து குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் செல்லும் பாதைக்கு "ராஜ்பத்' (ராஜபாதை) என்று பெயர். அதன் இருபுறமும் புல்வெளியும், படகுக் குழாமும், நீரூற்றுமாக ரம்மியமாக இருக்கும். நமது சென்னைவாசிகளுக்கு "மெரீனா' கடற்கரை எப்படியோ, அதேபோல தலைநகர்வாசிகளுக்கு இந்தியா கேட்.
   "ராஜ்பத்' வழியாக நள்ளிரவு நேரத்தில் யாருமில்லாத சாலையில் காலாற நடந்து கொண்டிருந்தேன். எனது சிந்தனை முழுவதும் "தினமணி' நிறைந்திருந்தது.
   செப்டம்பர் 11-ஆம் தேதி நமது "தினமணி' தனது இதழியல் சேவையில் 85 ஆண்டுகளை முடித்து, 86-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
   85 ஆண்டுகளில் "தினமணி' கடந்து வந்த பாதை எத்தகையது என்று யோசித்துப் பார்த்தேன். ஒருவகையில் பார்த்தால், அதுவும் ராஜபாதையாகத் தெரிந்தது. இன்னொரு வகையில் பார்த்தால், "தினமணி' எதிர்கொண்ட சோதனைகளும், போராட்டங்களும் கரடுமுரடான மலைப்பாதையாக நீண்டு நிற்கிறது.
   சிறப்பு மலர் தயாரிக்கும் பணி ஒருபுறம் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. "தினமணி 85' சிறப்பு மலருக்கு வந்திருந்த கட்டுரைகளில், ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான வாசிப்பு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். சிலர் பதிவு செய்திருக்கும் "தினமணி' தொடர்பான செய்திகளும், சம்பவங்களும், அவர்களுடைய "தினமணி' தொடர்புகளும் மலைப்பை ஏற்படுத்துகிறது. காட்டாற்று வெள்ளம்போல எண்ணப் பிரவாகம் பொங்கிப் பெருகி வருவதைப் படித்துப் பிரம்மித்தே போய்விட்டேன்.
   கடந்த 85 ஆண்டுகளில் "தினமணி'யில் எழுதப்பட்டிருக்கும் முக்கியமான தலையங்கங்கள், கட்டுரைகள் போன்றவற்றைப் படித்துப் பார்க்கும்போது, ஒன்று மட்டும் தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது. மொழி நடையும், வார்த்தைப் பிரயோகங்களும் மாறியிருக்கின்றனவே தவிர, "தினமணி' நாளிதழின் பார்வையில் மாற்றமே இல்லை. அது தேசியப் பிரச்னையாக இருந்தாலும், மாநிலம் எதிர்கொள்ளும் சோதனையானாலும் ஆசிரியர்கள் மாறியிருக்கிறார்களே தவிர, "தினமணி' நாளிதழின் பார்வை மாறாமலே இருந்து வந்திருக்கிறது என்பதை உணர்ந்தபோது மெய்சிலிர்த்துப் போகிறது.
   ராஜ்பத்தின் நடுவில் நின்றுகொண்டு முன்னாலே இருக்கும் குடியரசுத் தலைவர் மாளிகையையும், பின்னாலே இருக்கும் "இந்தியா கேட்' நினைவுச் சின்னத்தையும் பார்த்து மனதுக்குள் சிரித்துக் கொண்டேன். உள்மனது உரக்கச் சொன்னது, "தினமணியின் இதழியல் பயணம் என்றைக்குமே ராஜபாதை'யில்தான் என்று!
   
   நேற்று தலைநகர் தில்லியில் இருந்தபோது, அதிர்ச்சி அளிக்கும் செய்தி புதுவையிலிருந்து வந்தது. புதுவைக் கம்பன் கழகத்தின் தலைவர் "தமிழ் மாமணி' கோவிந்தசாமி ஐயா இயற்கை எய்தினார் என்கிற செய்திதான் அது. அகவை நூறு கடந்தும்கூட, கம்பன் என்று சொன்னால், உற்சாகத்துடன் நிமிர்ந்து உட்கார்ந்துவிடும் தாளாப் பற்றாளர்.
   புதுவைக் கம்பன் கழகத்தை உச்சத்துக்குக் கொண்டுபோய், பார் மெச்சும் அளவுக்கு உயர்த்திய பெருமைக்குரியவர்கள், தலைவராக இருந்த கோவிந்தசாமி ஐயாவும், செயலாளராக இருந்த முருகேசனும்தான். அதற்கு உறுதுணையாக இருந்தவர் அன்றைய புதுவை முதல்வர் வெங்கடசுப்பா ரெட்டியார் என்பதையும் குறிப்பிட வேண்டும்.
   அந்த இரட்டையர்களின் தலைமையில் தமிழாய்ந்த பேரறிஞர்கள் யாராக இருந்தாலும் புதுவைக் கம்பன் கழகத்தின் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால்தான் மரியாதை என்று கருதும் அளவுக்குப் புதுவைக் கம்பன் கழகம் செயல்பட்டது. பெரியவர் கோவிந்தசாமி ஐயா கம்பராமாயணப் பாடல்களைப் பாடிக் கேட்டவர்கள் அதிருஷ்டசாலிகள். அவரது குரல் வளமும், இசை ஞானமும், கம்பனில் இருந்து ஆழங்காற்பட்ட புலமையும் சபையை மெய்மறக்கச் செய்துவிடும்.
   அவரிடம் பேசிப் பழகும் வாய்ப்பு கிட்டியது கம்பன் எனக்குத் தந்த கொடை. அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள இயலாதது மிகப்பெரிய மனக்குறை.
   
   இளவழகனிடமிருந்து எப்போதாவதுதான் செல்லிடப்பேசி அழைப்பு வரும். அப்படி அழைப்பு வந்தால், அவர் புதிதாக ஏதாவது அரிய புத்தகம் வெளிக்கொணர்கிறார் என்று அர்த்தம். அறிஞர் அண்ணாவின் 110-ஆவது பிறந்த நாள் வருகிறது. அவருடைய படைப்புகளை எல்லாம் தொகுத்து 110 புத்தகங்களைக் கொண்ட தொகுதியை வெளியிடப் போவதாகத் தெரிவித்தார் அவர்.
   அவரது "தமிழ்மண்' பதிப்பகத்தில் அமர்ந்திருந்தபோது, கண்ணில்பட்டது, 1935-இல் முதலில் வெளியிடப்பட்டு, இப்போது மறுபதிப்பாகியிருக்கும் "வெள்ளிவிழா தமிழ்ப் பேரகராதி'. நெல்லை எஸ். சங்கரலிங்க முதலியாரால் தொகுக்கப்பட்ட இந்த "வெள்ளிவிழா' தமிழ்ப் பேரகராதிக்கு நூன்முகம் வழங்கி இருப்பவர் சென்னைப் பல்கலைக்கழக தமிழ் லெக்சிகன் பதிப்பாசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளை அவர்கள்.
   இத்தாலியிலிருந்து கிறிஸ்தவ சமயத்தைப் பரப்ப வந்த, "வீரமாமுனிவர்' என்று அறியப்படும், பெஸ்கி என்கிற பாதிரியார்தான் 1732-ஆம் ஆண்டில் "சதுரகராதி' என்று பெயரிட்டு முதலாவது அகராதியைத் தமிழுக்குத் தொகுத்துத் தந்தவர். 1842-ஆம் ஆண்டில், யாழ்ப்பாணம் சந்திரசேகர பண்டிதர், சரவண முத்துப்பிள்ளை ஆகியோரால் தொகுக்கப்பட்டது யாழ்ப்பாண அகராதி.
   நெல்லை எஸ். சங்கரலிங்க முதலியார் தொகுத்திருக்கும் "வெள்ளிவிழா தமிழ்ப் பேரகராதி', சதுரகராதியின் அமைப்பை அடியொற்றியும், யாழ்ப்பாண அகராதியைப் பின்பற்றியும் தொகுக்கப்பட்டிருக்கிறது.
   
   பள்ளிப் பருவத்திலிருந்து "இலக்கியச் செல்வர்' குமரி அனந்தனின் பேச்சைக் கேட்டு வளர்ந்தவன் நான். காமராஜரின் அணுக்கத் தொண்டரான குமரியாருக்கு ஆளுநர் பதவி வழங்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர்கள் ஐ.கே. குஜ்ராலிடமும், மன்மோகன் சிங்கிடமும் பலமுறை வலியுறுத்தி இருக்கிறேன்.
   அவருக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டிய நியாயமான மரியாதையை அவருடைய மகள் டாக்டர் தமிழிசை செளந்தரராஜனுக்கு வழங்கி பாரதிய ஜனதா கட்சி கெளரவித்திருக்கிறது. அதுவும் 58 வயதில் ஆளுநர் பதவி என்பது இதுவரை யாருக்கும் தரப்படாத வாய்ப்பு.
   ஆளுநராக அறிவிக்கப்பட்டிருக்கும் டாக்டர் தமிழிசை செளந்தரராஜனின் பேட்டியொன்றை தொலைக்காட்சி நிகழ்ச்சியில், பார்த்தேன். அதில் அவர் சொன்ன கவிதை இது. அவரே எழுதியதா, வேறு யாரோ எழுதியதா தெரியவில்லை. கவிதை வரிகளைப் பொருத்தவரை நானும் தமிழிசையின் கட்சி...
   அலைகள் இல்லாத கடலில் எனக்கு நீந்தப் பிடிக்காது!

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai