Enable Javscript for better performance
பண்பாட்டுப் பாதுகாப்பு!- Dinamani

சுடச்சுட

  
  tm5

  கட்டழகைப் பார்த்துக் கொள்வது காதலன்று; அது விரைந்து அற்றுப் போகின்ற ஆசை! காதலென்பது கணவன் மனைவியான பெண்ணும் ஆணும் கடைசி வரையில் ஈருடல் ஓருயிராய் வாழ்வது காதல்! ஆண்-பெண் ஒரு வீட்டில் வசிப்பது காதலாகாது; வாழ்ந்து முடிப்பதுதான் காதலாகும்.
   பாவேந்தர் பாரதிதாசன் "குடும்ப விளக்கு' - முதியோர் காதலில் உள்ளத்தை நெகிழ வைக்கும் ஒப்பில்லாத அறுசீர் விருத்தமாகப் பாடியுள்ளார். முதியவர் தன் பெயரனை அணைத்துக்கொண்டு "எது எனக் கின்பம் நல்கும்?; இருக்கின்றாள் என்பது ஒன்றே!' என்கிறார். மனித வாழ்வின் மாண்பு இதுவல்லவோ?
   சாகாத இந்த மனித மேம்பாட்டுத் தத்துவம் சங்க காலத்திலேயே - கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கிறது. தன் உயிரான தலைவியைக் காதலனிடம் ஒப்படைக்கும்போது, தோழி தலைவனுக்குக் கூறுவதாக அமைந்த நயமிகு நற்றிணைப் பாடல் (பாலைத் திணை) இது.
   அண்ணந்து ஏந்திய வனமுலை தளரினும்
   பொன்னேர் மேனி மணியின் தாழ்ந்த
   நன்னெடுங் கூந்தல் நரையொரு முடிப்பினும்,
   நீத்தல் ஓம்புமதி பூக்கேழ் ஊர!
   இன்கடுங் கள்ளின் இழையணி நெடுந்தேர்
   கொற்றச் சோழர் கொங்கர்ப் பணீஇயர்
   வெண்கோட்டு யானைப் போஒர் கிழவோன்
   பழையன் வேல்வாய்த் தன்னநின்
   பிழையா நன்மொழி தேறிய இவட்கே (பா.10)
   இப்பாடலைப் பாடிய புலவர் பெயர் தெரியவில்லை. ஒவ்வொரு பாடலிலும் ஒரு வரலாற்றுச் செய்தியைச் சொல்வது வண்டமிழ்ப் புலவர் பரணரது வழக்கம்!
   இப்பாடலிலும் ஒரு வரலாற்றுச் செய்தி வந்துள்ளதால், பாடலைப் பாடிய புலவர் பரணராக இருப்பாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.
   "பூமணம் கமழும் புகழூர்த் தலைவரே! நான் சொல்லும் கருத்தினை நன்றாகக் கேட்பீராக. இனிப்பும் புளிப்புமான கள்ளருந்திக் களிப்பவர்கள் சோழ மன்னர்கள். அவர்கள் அணிகலன்களால் அழகு செய்யப்பெற்ற நீண்ட தேர்களில் உலா வந்து ஊர்கள் நிறைந்த நாடாள்கின்ற நல்வேந்தர்கள். அவர்களுக்குத் திறை செலுத்தி வந்த சிற்றரசன் போரூர்ப் பழையன். அந்தக் குறுநில மன்னனைப் படையுடன் அனுப்பி, கொங்கு நாட்டுச் சேரரைச் சோழர் வென்று வரச் செய்தனர். பழையன் வேற்றுபடை அவனிட்ட ஆணையிலே தவறாது, தப்பாது போரிட்டுத் தலைசிறந்த வெற்றிவாகையைப் பெற்றுத்தந்தது. அதுபோல நீயுரைத்த வாக்குறுதிகளை நெஞ்சிலே கொண்டுள்ளாள் என் தலைவி. அவள் வெற்றி வாழ்வை உம்மோடு வாழ்ந்து வழங்கும் உள்ளத்தில் உறுதி பூண்டுள்ளாள். அவளழகு எளிதில் அகன்று போகாத எழிலாகும். தலைசிறந்த அவளின் மதர்த்த மார்பகம் நிலை தளர்ந்து போனாலும், கைவிடாமல் அவளைக் காத்திட வேண்டுகிறேன்' என்கிறாள்.
   இளமையில் ஏற்படும் இந்த உறவு முதுமையிலும் முல்லைப் பூவாக மணக்க வேண்டும். அதுதான் உண்மையான காதல். "எந்தத் தலைவியின் இளமை நலம் நோக்கிக் காதலிக்கும் நீ, முதுமையிலும் அவளைக் கைவிடாமல் காக்க வேண்டும்' என்பதே பாடலின் பொதுக்கருத்தாகும். இவ்வாறு உயர்திணைக்குரிய பண்பாடு வேரூன்றி நிற்கும் நாடு நம் இந்திய நாடு.
   - எம்.வெங்கடேசபாரதி
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai