தோழர் ஜீவாவின் நோக்கில் - மகாகவி பாரதியின் "கம்பன் ஒரு மானிடன்'!

தோழர் ஜீவாவின் நோக்கில் பாரதியின் வாழ்க்கைக் கண்ணோட்டம் - இதுவே பாரதியை "கம்பன் ஒரு மானிடன்' என்று நிர்ணயித்தது. 
தோழர் ஜீவாவின் நோக்கில் - மகாகவி பாரதியின் "கம்பன் ஒரு மானிடன்'!

தோழர் ஜீவாவின் நோக்கில் பாரதியின் வாழ்க்கைக் கண்ணோட்டம் - இதுவே பாரதியை "கம்பன் ஒரு மானிடன்' என்று நிர்ணயித்தது. 
"பாரதியின் வரையறுப்பில் கம்பன் கவிச்சக்கரவர்த்தி - கம்பன் ஒரு மானிடன் (KAMBAN THE GREATEST POET AND THE MAN) ஆனால், "கம்பன் ஒரு மானிடன்' என்ற வரையறுப்பைத்தான் நான் எனது பேச்சுக்கு மிக முக்கியமான வரையறுப்பாக எடுத்துக் கொள்கிறேன். 
கிரேக்க நாட்டில் ஒரு ஞானி, பண்டு. பட்டப்பகலில் கையில் ஒரு விளக்கைப் பிடித்துக் கொண்டு, ஏதன்ஸ் நகரின் நடுத்தெருக்களில் "ஒரு மனிதன் தேவை' (WANTED A MAN) என்று அலைந்து திரிந்தான். நமது பாரதியோ கம்பனில் "ஒரு மானிடனைக்' கண்டான்.
பாரதி, கம்பனை கவிச்சக்கரவர்த்திகளில் முதல்வன் என்று அழைத்ததற்கும் மேலாக "ஒரு மானிடன்' என்று ஏன் பாராட்டுகிறான்? "பாம்பின் கால் பாம்பறியும்' என்பது போல், மகா கவியாகிய பாரதி, கம்பனுடைய மகா காவியத்தில் முங்கி மூழ்கிய மகா கவியாகிய பாரதி, கம்ப காவியம் "பார்க்குமிடம் எங்குமொரு நீக்கமற' மானிடமயமாகப் பொங்கி வழிவதைக் காண்கிறான். கம்ப சித்திரங்கள் "மானிடத்தை' ஆழமாகவும், விரிவாகவும், நுட்பமாகவும், அழகெனும் அழகும் ஓர் அழகு பெறச் சித்தரித்துக் காட்டுவதைப் பார்க்கிறான் "கம்பன் ஒரு மானிடன்' என்று நிர்ணயித்து, அந்த நிர்ணயிப்பை உலகறிய முழங்குகிறான்.
கடந்த ஆயிரம் ஆண்டுகளில் கம்பனைப் பற்றி யாரும் நிர்ணயிக்காத "கம்பன் ஒரு மானிடன் என்ற புதிய நிர்ணயிப்புக்கு பாரதி வருகிறானல்லவா? இதையறிய, பாரதியின் வாழ்க்கை கண்ணோட்டம் என்ன என்பதை ஊன்றிக் கவனித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் அவ்வாறு தெரிந்துகொள்ள பாரதி இலக்கிய முழுவதிலும் தேசியப் பாடல்கள், தோத்திரப் பாடல்கள், வேதாந்தப் பாடல்கள், இதர இலக்கியங்கள் முழுவதிலும் சில சொற்கள் அடிக்கடி பயிலப்படுகின்றன. அவை, எந்த இடத்தில் என்ன பொருளில் வழங்கப்படுகின்றன என்பதைக் கண்டு பிடிக்க முயல வேண்டும்.
"கிருதயுகம்' "அமர நிலை', "இங்கு' ஆகிய சொற்கள் பலவிடங்களிலும் பயிலப்படுவதை ஊன்றி நோக்கி, அவற்றின் கருத்துக்களைப் பொருத்திப் பார்ப்போமானால், பாரதியின் தத்துவ தரிசனத்தை - வாழ்க்கைக் கண்ணோட்டத்தைக் காண முடியும் என்று நான் கருதுகிறேன். இவ்வுலகிலேயே நல்வாழ்வு முதன் முதலில் "இங்கு' என்ற சொல்லை " இந்த உலகத்தில்' "இந்த ஜென்மத்தில்' "இம்மையில்' என்ற பொருள்பட பாரதி எவ்வாறு உபயோகப்படுத்துகிறான் என்பதை உன்னிந்து நோக்குங்கள். "தமிழ்' என்ற பாட்டில்,
"தெள்ளற்ற தமிழமுதின் சுவை கண்டார்
இங்கு அமரர் சிறப்புக் கண்டார்'' 
என்று பாடுகிறான். "வேண்டும்' என்ற கவிதையில்,
"மண் பயனுற வேண்டும் வானகம்
இங்குத் தென்படவேண்டும்'' என்கிறான். "அறிவே தெய்வம்' என்ற பாட்டில், 
"கவலை துறந்து இங்கு வாழ்வதே
வீடு எனக் காட்டும் மறைகளெல்லாம்'' 
என்று பாடுகிறான். "ஜீவன் முக்தி' என்ற பாட்டில்,
"ஜயமுண்டு பயமில்லை மனமே - இந்த ஜன்மத்திலே
விடுதலையுண்டு நிலையுண்டு'' 
என்று பாடுகிறான். "சொர்க்கமோ' "மோட்சமோ' "கைலாசமோ' "வைகுண்டமோ' இந்த வாழ்நாளில், இந்த உலகத்தில் கண்கூடாக, அனுபவ சாத்தியமாகக் கிடைக்கப் பெற வேண்டும் என்பது பாரதியின் அசைக்க முடியாத கோரிக்கை, ஆகவே, கற்பனையில் எங்கோ இயங்குகிற "வானகம்' இங்கு முளைக்க வேண்டும் என்று வேண்டுகிறான். கவலையற்று இந்நிலை உலகில் வாழ்வதுதான் "மோட்சம்' என்று வேத சாட்சியாகக் கூறுகிறான். இந்த ஜன்மத்தில் விடுதலையும், நிலையான வாழ்வும் உண்டு என்ற முற்ற முடிந்த முழுநம்பிக்கையை அள்ளி வீசுகிறான். இதுமட்டுமல்ல, இந்த வாழ்வுக்கு அப்பால் மறுமையில் நம்பிக்கை வைப்பதையும் வேறோடு பிடுங்கி எறிகிறான். 
செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம்
சேர்ந்திடலா மென்று எண்ணியிருப்பார்
பித்த மனிதர் அவர் சொலும் சாத்திரம்
பேயுரையாம் என்று ஊதேடா சங்கம்
செத்த பிறகு நம்பிக்கை வைக்கும் மனிதரை பித்தர் என்றும், அவர் பேசும் சாத்திரம் பேயுரை என்றும், கண்டனக் கணை பாய்ச்சுகிறான். இதைவிட மறு உலக நம்பிக்கையை, மறு பிறப்பு எண்ணத்தைத் தாக்கித் தகர்ப்பது எப்படி? நீங்கள் உடன்படுகிறீர்களோ, முரண்படுகிறீர்களோ, பாரதியின் ஐயந்திரிபுக்கு இடமற்ற கருத்து இது.செத்த பிறகு எந்த வாழ்வும் இல்லை என்கிறார். இங்கேயே "வாகை' வாழ்வு வேண்டும் என்கிறான். சான்றோர்களின் லட்சிய வாழ்வான முழுநிறை இன்ப நல்வாழ்வு இந்தப் பிறப்பிலேயே மனித வர்க்கம் முழுமைக்கும் கைகூட வேண்டும் என்பதுதான் பாரதியின் தனி விருப்பம்.
சமதர்ம அமரநிலை

இரண்டாவதாக "அமரநிலை' என்ற சொல்லை எடுத்துக் கொள்வோம். உயர் மனிதன், அப்பழுக்கற்ற, பண்பட்ட மனிதன், வாழ்வாங்கு வாழும் மனிதன், மானிடம் கைவந்த மனிதன் - இத்தகைய மனிதனின் தரத்தை அமரநிலை என்று அழைக்கிறான் பாரதி. அங்கே இக்கருத்தை அவன் வெளியிடும் விந்தையைப் பாருங்கள். "விநாயகர் நான் மணி மாலை' என்ற நூலில், 
"விடத்தையும் நோவையும் வெம்பகை யதனையும் 
துச்சமென் றெண்ணத் துயரிலாதிங்கு 
நிச்சலும் வாழ்ந்து நிலை பெற்றோங் கலாம்;
அச்சம் தீரும்; அமுதம் விளையும்;
வித்தை வளரும்; வேள்வி ஓங்கும்;
அமரத் தன்மை எய்தவும் 
இங்கு நாம் பெறலாம்; இஃதுணர்வீரே!' 
என்று பாடுகிறான். "கண்ணன் திருவடி' என்ற பாட்டில், 
இங்கே அமரர் / சங்கம் தோன்றும்
மங்கும் தீமை / பொங்கும் நலமே 
என்று பாடுகிறான்.
"முப்பது கோடி ஜனங்களின் சங்க
முழுமைக்கும் பொது உடைமை
ஒப்பிலாத சமுதாயம்
உலகத்துக் கொரு புதுமை'
என்று பாடுகிறானே "பாரத 
சமுதாயப் பாட்டு' அந்தப் பாட்டில், 
"எல்லோரும் அமரநிலை எய்தும் நன்முறையை 
இந்தியா உலகிற்கு அளிக்கும் - ஆம் 
இந்தியா உலகிற்கு அளிக்கும்'' 
என்று பாடும்பொழுது "அமர நிலைக்கு அர்த்தமென்ன என்று ஆழ்ந்து சிந்தியுங்கள்.
எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம்
எல்லாரும் இந்திய மக்கள்
எல்லாரும் ஓர் நிறை எல்லாரும் ஓர் விலை 
எல்லாரும் இந்நாட்டு மன்னர் - நாம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர் - ஆம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர்''
எனப் பெருமிதத்தோடு பாடுகிறானே, அந்த நிலையைத்தானா, அந்த சமதர்ம ஜனநாயக நிலையைத்தானா "அமரநிலை' என்கிறான்? அந்த "அமரநிலை'யைத்தானா இந்தியா உலகிற்கு அளிக்கும் என்கிறான் என்பதையும் தீர்க்கமாகச் சிந்தித்துப் பாருங்கள்.
பாரதி காணும் கிருதயுகம்
மூன்றாவதாக "கிருதயுகம்' என்ற சொல்லை எடுத்துக் கொள்வோம். மானிட வர்க்கத்தின் லட்சிய வாழ்க்கையை புதிய சமுதாய வாழ்க்கையை, "கிருதயுகம்' என்ற சொல்லால் பாரதி அழைக்கிறான் என்று, அவனுடைய இந்த சொற்பிரயோகத்தை பரக்கப் படிக்கும்பொழுது எனக்குப் படுகிறது, பாரதி "கிருதயுகம்' என்ற சொல்லைப் பல இடங்களில் உபயோகித்திருக்கிறான். "அமர யுகம்', "சத்ய யுகம்' என்ற சொற்களையும் அதே பொருளில் இரண்டொரு இடங்களில் உபயோகித்திருக்கிறார். அவன் "கிருதயுகம்' என்ற சொல்லை எந்தப் பொருளில் உபயோகித் திருக்கிறான் என்பதற்கு ஒன்றிரண்டு எடுத்துக் காட்டுகளைத் தருகிறேன். விநாயகர் நான்மணி மாலையில் ஓரிடத்தில், 
"பொய்க்கும் கலியை நான் கொன்று 
பூலோகத்தார் கண்முன்னே 
மெய்க்கும் கிருத யுகத்தினையே 
கொணர்வேன் தெய்வ விதி இஃதே'
என்று கூறுகிறான். மற்றோரிடத்தில், 
"நல்ல குணங்களே நம்மிடை அமரர் 
பதங்களாம், கண்டீர், பாரிடை மக்களே! 
கிருதயுகத்தினைக் கேடின்றி நிறுத்த 
விரதம் நான் கொண்டனன்' 
என்று பாடுகிறார். இங்கே பாரதி மனித குலத்தை, கலியுகம் முடியும் வரை காத்திருக்கச் சொல்லவில்லை. கிருதயுகம் மலரும் வரை பொறுத்திருக்கச் சொல்லவில்லை. பொய் வாழ்வை, போலி வாழ்வை, ஆதாரமாகக் கொண்ட கலியுகத்தை ஒழித்துக்கட்டி, மானிடத்தின் வெற்றியான கிருதயுகத்தினை "பூலோகத்தார் கண்முன்னே' நிலை நாட்டுவேன் என்று உறுதி கூறுகிறான். "இது தான் கேட்டு வந்த வரம்' என்கிறான். தனது குறிக்கோள் என்கிறான்.
"ஜார் வீழ்ச்சி' என்ற பாட்டில், "இடிபட்ட சுவர்போல 
கலிவிழுந்தான் / கிருதயுகம் எழுகமாதோ'' என்று பாடுகிறார்.
இங்கே ஜாரின் வீழ்ச்சியை கலியுகத்தின் வீழ்ச்சியாகவும், சோவியத் மலர்ச்சியை கிருதயுகத்தின் எழுச்சியாகவும், பாரதி பார்க்கிறான். பழைய பஞ்சாங்கப்படி, கலியுகம் மறைய கிருதயுகம் பிறக்க பாரதி காத்திருக்கவில்லை. இப்பொழுது நீங்கள் உணரமுடியும், நான் பாரதியின் வாழ்க்கைக் கண்ணோட்டத்தை எவ்வாறு பார்க்கிறேன் என்பதை. மனிதர்கள் "இங்கு' "அமர நிலை' எய்தும் "கிருதயுகம்' பாரதியின் வாழ்க்கைக் கண்ணோட்டம். இந்தக் கண்ணோட்டத்தோடு பாரதி கம்பனைப் பார்க்கிறான். "கம்பன் - ஒரு மானிடன்' என்று நிர்ணயிக்கிறான்.
(1955-ஆம் ஆண்டில் காரைக்குடி கம்பன் திருநாளில் தோழர் ஜீவா பேசிய பேச்சு)
------------------------------
தகவல்: என். சுப்பிரமணியன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com