Enable Javscript for better performance
இந்த வார கலாரசிகன்- Dinamani

சுடச்சுட

  
  tm5


  "அந்திமழை' இதழின் நிர்வாக ஆசிரியர் அசோகனிடமிருந்து செல்லிடப்பேசி அழைப்பு வந்தது. எழுத்தாளர் மாலனின் இலக்கியப் பணி குறித்து  புத்தகம் ஒன்று வெளிக்கொணர்வதாகவும்,  அவரது  இலக்கியப் பங்களிப்பின் பொன்விழாவைக் கொண்டாட இருப்பதாகவும் அவர் தெரிவித்தபோது, எனது மகிழ்ச்சி எல்லை கடந்தது.

  மாலனும் நானும் ஒருசாலை மாணாக்கர்களாகத் தொடர்பவர்கள். எழுத்தாளர் மாலன் சாவியால் அறிமுகப்படுத்தப்பட்டவர் என்றுதான் பலராலும் அறியப்படுகிறார். ஆனால், ஆசிரியர் சாவிக்கும் முன்பே அவர் கவியரசு கண்ணதாசனால் அடையாளம் காணப்பட்டவர். "கணையாழி' இலக்கிய இதழால் பரவலாகவே அறிமுகமானவர். 
  சிறிது காலம்தான் வெளிவந்தது என்றாலும், வரலாற்றில் இளைஞர்களுக்கான அவரது "திசைகள்' இதழுக்குத் தனிச் சிறப்பு உண்டு. அரை நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக எழுத்தாளர் மாலன் இலக்கியப் பங்களிப்பு ஆற்றியிருக்கிறார் என்பதைவிட,  கடந்த அரை நூற்றாண்டில் பல இளம் இலக்கியவாதிகளை அறிமுகப்படுத்தி, அடையாளம் காட்டியிருக்கிறார் என்பதுதான்  அவரது பெரும் பங்களிப்பு. மாலனின் எழுத்துப் பணியும், இலக்கியப் பணியும் நூறாண்டு காண வேண்டும்.  வாழ்த்துகள்!

  இறப்புகள் குறித்து  பதிவு செய்வதைத் தவிர்க்க முடியவில்லை.  அறிமுகமான ஆளுமைகள் அகன்றுவிடும்போது, இதயத்தில் ஏற்படும் துயரத்தைப் பகிர்ந்து கொள்வதுதான் அந்த ரணத்துக்குப் போடப்படும் மருந்து.


  பரவலாக "ஜி.என்.சார்' என்று அறியப்படும் ஆடிட்டர் ஜி.நாராயணசுவாமியின் மறைவுக்கு வயோதிகம்தான் காரணம் என்றாலும்கூட, அதை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது. பட்டயக் கணக்காளர்கள் மத்தியில் சர்வதேச அளவில் மிகப்பெரிய ஆளுமையாக அறியப்பட்ட ஒருவர், மிகவும் அமைதியாக விடைபெற்றிருக்கிறார். அவரது இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளக்கூட முடியாமல் போனது மிகப்பெரிய  வருத்தத்தை அளிக்கிறது.

  வரும் வெள்ளிக்கிழமை மயிலாப்பூர் பி.எஸ்.உயர்நிலைப் பள்ளியில் உள்ள தட்சிணாமூர்த்தி அரங்கில் அவருக்கு இரங்கல் கூட்டம் நடக்கப் போவதாக நண்பர் வெங்கடகிரி தெரிவித்தார். பிரம்ம கான சபா சார்பில் இரங்கல் கூட்டம் நடத்த வேண்டும் என்று நல்லி குப்புசாமி செட்டியாரும்கூட  அபிப்ராயப்பட்டார்.

  மூதறிஞர் ராஜாஜியின் பட்டயக் கணக்காளராக இருந்தவர்  ஜி.நாராயணசுவாமி. ராஜாஜியுடனான அவரது அனுபவங்கள் குறித்தும், அவர் தொடர்பான நிகழ்வுகள் குறித்தும் என்னிடம்  அடிக்கடி பகிர்ந்து கொள்வார். "அதையே ஒரு புத்தகமாக  எழுதுங்களேன்' என்று வற்புறுத்தியதை மிகுந்த தயக்கத்துடன்  ஏற்றுக்கொண்டார். ஆங்கிலத்தில் அவர் எழுதிய புத்தகத்தைத் தமிழாக்கம் செய்ய வேண்டும் என்கிற எனது வேண்டுகோளையும் அவர் நிறைவேற்றினார். ஒரு காலகட்டத்தின் வரலாற்றுப் பதிவாக அமைந்தது "ஏணிப்படிகள்' என்கிற ஜி.என்.சாரின் தன் வரலாறு.

  தனது அகவை 60-இன்போது ஆசிபெற ஐந்து பேர்களைத் தேர்ந்தெடுத்தார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. ஆசிரியர் "சோ' ராமசாமி, தயாரிப்பாளர் கே.பாலாஜி, நடிகர் எம்.என்.நம்பியார், இயக்குநர் பி.மாதவன் ஆகியோருடன் ஜி.என். சாரும் அவர்களில் ஒருவர். பல முக்கிய நிதித்துறை தொடர்பான பிரச்னைகளில் ஜெயலலிதா மட்டுமல்ல,  மன்மோகன் சிங், பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட தலைவர்களும்கூட அவரது ஆலோசனைகளைப் பெறுவார்கள்.

  "தினமணி' நாளிதழின் மீதும், தனிப்பட்ட முறையில் என்னிடமும் ஜி.என். சாருக்கு இருந்த பிணைப்பு அலாதியானது. "தினமணி' நடத்தும் எந்தவொரு நிகழ்வாக இருந்தாலும் அதில் கலந்துகொண்டு என்னை உற்சாகப்படுத்த அவர் தவறியதில்லை. இப்போது "தினமணி 85' மலர் வெளிக்கொணரும்போது, ஜி.என்.சார் இல்லை;அவரது பதிவும் இல்லை;அந்தக் குறை தீரப்போவதில்லை.
  1975-ஆம் ஆண்டு முதல்  ஏறத்தாழ 40 ஆண்டுகளில் நாஞ்சில்நாடன் எழுதியிருக்கும் சிறுகதைகளிலிருந்து  தனக்குப் பிடித்த கதைகளைத் தேர்ந்தெடுத்து புத்தக வடிவமாக்கியிருக்கிறார் நா.முருகேச பாண்டியன். சுண்டக் காய்ச்சிய பால்; பொறுக்கி எடுத்த முந்திரிப் பருப்பு - எழுத்தாளர் நாஞ்சில்நாடனின் இந்தச் சிறுகதைத் தொகுப்பை இப்படித்தான் கூறவேண்டும்.

  ""நாஞ்சில்நாடனின் கதைகள் பண்பாட்டுப் பதிவுகளாக விளங்குகின்றன. தமிழ்ச் சமூகத்தின் குறுக்குவெட்டுத் தோற்றமாக விளங்குகின்றன'' என்கிற முருகேச பாண்டியனின் கருத்தை நானும் வழிமொழிகிறேன். 

  1975-ஆம் ஆண்டு ஜூலை மாதம் "தீபம்' இதழில் வெளியாகி இலக்கியச் சிந்தனை விருது பெற்ற "விரதம்' என்கிற சிறுகதையுடன் தொடங்குகிறது இந்தத் தொகுப்பு.  தேர்ந்தெடுத்துத் தொகுக்கப்பட்டிருக்கும் 14 சிறுகதைகளும் தமிழில் குறிப்பிடத்தக்க இதழ்களான தீபம், கணையாழி, தினமணி கதிர், காலச்சுவடு,  ஆனந்த விகடன், உயிர்மை, தினமணி, ஆனந்த விகடன் தீபாவளி மலர்கள் ஆகியவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன.

  நாஞ்சில்நாடனின் படைப்பிலக்கிய உத்தி சற்று வித்தியாசமானது. செயற்கைத்தனம் இல்லாமல் இயல்பாக அவர் கதை சொல்லிக்கொண்டு போனாலும்,  இன்னொரு புறம் கதை மாந்தர்களின் தனித்துவமான இயல்புகளையும், கதை நிகழும் இடத்தின் சூழலையும் அவர் இணைத்துக்கொள்வது அவருக்கே உரித்தான பாணி. முருகேச பாண்டியன் கூறுவதுபோல, நாஞ்சில்நாடனின் புனை கதைகளுக்குள் பொதிந்துள்ள நுட்பங்கள், நிலமும் வெளியும் எனப் பொதுவாக அடையாளப்படுத்தலாம்.  நல்லதொரு சிறுகதைத் தொகுப்பு.

  "சிகரம்' காலாண்டிதழில் வெளியாகியிருக்கும் சாலைப் புதூர் பொன்.ராஜாவின் கவிதை இது. மிகவும் எளிமையான வார்த்தைகளில் மிகச்சாதாரணமான எதார்த்தத்தைத் துள்ளித் திரியும் அணில் பிள்ளைபோல, சொல்லிச் செல்கிறார்.

  மரக்கிளையிலும்
  கோவில் மதில் சுவரிலும்
  துள்ளித்திரியும்
  அணில்பிள்ளை
  சொல்லிச் சென்றது
  மனிதர்களுக்கு
  சந்தோஷமாய் வாழ்வது
  எப்படி என்று!
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai