Enable Javscript for better performance
இந்த வார கலாரசிகன்- Dinamani

சுடச்சுட

  
  tm3

   

  இந்தியா சர்வதேச மையம் (இன்டியா இண்டர்நேஷனல் சென்டர்) என்கிற அமைப்பு தில்லியில் இருக்கிறது. மூத்த அரசியல்வாதிகள், நீதிபதிகள், அரசு உயர் அதிகாரிகள், ஊடகவியலாளர்கள்,  கல்வியாளர்கள், சர்வதேசப் பொருளாதார, அரசியல் ஆய்வாளர்கள் என்று பலரும் இதில் உறுப்பினர்கள். தில்லியில் நான் விரும்பி ஆர்வத்துடன் செல்லும் இடங்களில் அதுவும் ஒன்று.

  கடந்த வாரம் எனக்குத் தொலைபேசி அழைப்பொன்று வந்தது. வனிதா என்பவர் அழைத்தார். அவர் சென்னை சர்வதேச மையத்திலிருந்து அழைப்பதாகச் சொன்னபோது, எனக்கு ஒரே வியப்பு. "சென்னை சர்வதேச மையம்' என்கிற அமைப்பு இங்கே இயங்குகிறது என்கிற தகவல் எனக்கு இப்போதுதான் தெரியும். என்னைத் தொடர்பு கொள்ளும்படி வனிதாவிடம் பரிந்துரைத்தது தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வைத்திய சுப்பிரமணியம்.

  மத்திய நிதியமைச்சகத்தின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக இருப்பவர் சஞ்சீவ் சன்யால். பகத்சிங், சந்திரசேகர ஆசாத் போன்ற விடுதலைப் போராட்டகாலப் புரட்சியாளர்களின் ஆதர்ச புருஷராக விளங்கிய சச்சீந்திரநாத் சன்யாலின் குடும்பத்தைச் சேர்ந்தவர் இவர்.

  விஷயத்துக்கு வருகிறேன். "சென்னை சர்வதேச மையம்' சார்பில் "இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு - ஓர் மீள் பார்வை' என்கிற தலைப்பில் சஞ்சீவ் சன்யால்  உரையாற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்தக் கூட்டத்தில் அவருக்கும் பார்வையாளர்களுக்கும் இடையில் நடுவராக இருந்து கலந்துரையாடலை முறைப்படுத்த என்னை அழைத்தார் வனிதா. நான் அந்த வாய்ப்பை நழுவவிடாமல் உடனடியாக ஏற்றுக்கொண்டேன். அதற்கு ஒரு காரணம் இருக்கிறது.

  காந்தியடிகளின் தலைமையில் அகிம்சையின் அடிப்படையில் ஒருபுறம் விடுதலைப் போராட்டம் நடந்தது என்றாலும், இன்னொருபுறம் ராஷ்பிகாரி போஸ், சச்சீந்திரநாத் சன்யால்,  பகத்சிங், வீரசாவர்க்கர், நேதாஜி போஸ், அரவிந்த கோஷ் போன்றவர்களின் ஆயுதப் போராட்டமும் நடந்தது. புரட்சியின் மூலம் இந்தியாவுக்கு விடுதலை தேட முற்பட்ட தேசத் தலைவர்களின் வரலாறு முக்கியத்துவம் தரப்படாமல் இருட்டடிப்பு செய்யப்பட்டுவிட்டது என்பதுதான் சஞ்சீவ் சன்யாலின் நியாயமான மனக்குறை. அதனடிப்படையில் மகாராஷ்டிரம், வங்காளம், பஞ்சாப் பகுதிகளில் நடந்த புரட்சிகள் குறித்தும், அவற்றை வழிநடத்திய  தலைமைகள் குறித்தும் விளக்கமாக உரையாற்றினார் அவர். 

  பிரிட்டிஷ் உள்ளிட்ட எல்லா ஐரோப்பிய கிழக்கிந்தியக் கம்பெனியாரும் தென்னிந்தியாவில் வங்கக் கரையோரம்தான் முதலில் வந்து இறங்கியிருக்கிறார்கள். இங்கிருந்துதான் பிரிட்டிஷ் காலனிய ஆட்சி தொடங்கியது எனும்போது, பிரிட்டிஷாருக்கு எதிரான ஆயுதப் போராட்டங்களும்,  புரட்சிகளும் தர்க்கரீதியாகப்  பார்த்தாலும்,  வரலாற்றுப் பின்னணியில் பார்த்தாலும் இங்கிருந்துதானே தொடங்கியிருக்க வேண்டும்? ஆனால், அது குறித்து ஏன் பேசப்படுவதில்லை?

  1806-இல் நடந்த வேலூர் புரட்சிதான் விடுதலை வேட்கைக்கு வித்திட்டது என்பது மறைக்கப்பட்டு, 1857 சிப்பாய் கலகம் முன்னிலைப்படுத்தப்படுகிறது. 1911-இல் ஆஷ் துரையை மணியாச்சியில் சுட்டுக் கொன்ற வீர வாஞ்சியின் வரலாறு முக்கியத்துவம் தரப்படாமல், 1928-இல் பகத்சிங், சுக்தேவ், ராஜகுருவின் தியாகங்கள் மட்டுமே தேசிய அளவில் பேசப்படுகிறது. வெள்ளையர் ஆட்சிக் காலத்தில், அவர்களது கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு, சாதுர்யமாக செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்குள் நுழைந்து 1932 ஜனவரி 25-ஆம் தேதி மூவர்ணக் கொடியை ஏற்றிய "ஆர்யா' என்கிற பாஷ்யம் ஐயங்காரின்  தீரம் கவனத்தில் கொள்ளப்படவில்லை.

  சஞ்சீவ் சன்யால் கூறுவது போல விடுதலைப் போராட்ட வரலாறு திருத்தி எழுதப்பட வேண்டும். அப்போது, தென்னிந்தியாவின் பங்களிப்பு இருட்டடிப்பு செய்யப்படாமல்,  தியாகங்கள் மறைக்கப்படாமல் பதிவாக வேண்டும்.

  தென்னிந்தியா, குறிப்பாக தமிழகம், தேசிய நீரோட்டத்தில் சேராமல் தனித்திருப்பதற்குக் காரணம், தமிழகத்தின் பங்களிப்பு மறைக்கப்பட்டதால்தானோ என்று தோன்றுகிறது. கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி, நான் சொல்ல நினைத்ததை அழுத்தமாகவே சொல்லிவிட்டதில் சற்று ஆறுதல்!

  அண்ணல் காந்தியடிகளின் 150-ஆவது பிறந்த ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதியுடன் நிறைவுபெறுகிறது. காந்தி நூற்றாண்டின்போது மதுரையில் இருந்தேன்.  அந்தக் கோலாகலக் கொண்டாட்டம்  உணர்வு மயமானது. 1969 அக்டோபர் 2-ஆம் தேதி நண்பர்களுடன் மதுரையில் அண்ணல் காந்தியடிகளின் பாதம்பட்ட இடங்களுக்கெல்லாம் சென்றுவந்ததை இன்று நினைத்தாலும் நெகிழ்வாக இருக்கிறது. 

  1921-ஆம் ஆண்டு மதுரையை நோக்கிச் சென்று கொண்டிருந்த தொடர் வண்டியில்  மக்களோடு மக்களாகப் பொதுப்பெட்டியில் பயணித்துக் கொண்டிருக்கிறார் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. அப்போதுதான் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுக்கிறார்.

  ""நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் உடலை மறைக்க நான்கு முழத் துணிகூட இல்லாமல் வெறும்  கோவணத் துணியுடன் இருக்கிறார்கள். 

  நாகரிகமான அளவுக்கு, எந்த அளவில்  நான் எனது ஆடையைக் குறைக்க இயலுமோ, அதுதான் இந்த அரைகுறை ஆடை அணிந்த மக்களுடன் என்னை சமன் படுத்திட  உதவும். அதனை நான் மதுரையில் செய்து முடித்தேன்'' என்று தனது "சத்திய சோதனை'யில் பதிவு செய்திருக்கிறார் அண்ணல் காந்தியடிகள். அது நடந்தது 1921-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி.

  அண்ணல் அரையாடை தரித்த மேலமாசி வீடு, 1927-இல் உரையாற்றிய மதுரை விக்டோரியா எட்வர்ட் அரங்கம், 1931-இல் தங்கிய என்.எம்.ஆர் சுப்புராமனின் வீடு, 1946-இல் தங்கிய சிவகங்கை மாளிகை என்று எல்லாமே வரலாற்றுச் சின்னங்கள். அரைநூற்றாண்டுக்குப் பிறகு அண்ணலின் 150 -ஆவது பிறந்த தினத்தன்றும், மீண்டும் அந்த இடங்களுக்குப் புனிதப் பயணம் மேற்கொள்ள நினைத்திருக்கிறேன்.

  சொல்ல மறந்துவிட்டேனே,  டாக்டர் இராம்.பொன்னு "மதுரையில் காந்தி' என்று ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அது புத்தகம் அல்ல, பொக்கிஷம், 
  வரலாற்றுப் பதிவு.

  விமர்சனத்துக்கு வந்திருந்தது கவிஞர் நா.நளினிதேவியின் "என் விளக்கில் உன் இருள்' என்கிற கவிதைத் தொகுப்பு. பேராசிரியராக இருந்து பணி ஓய்வு பெற்ற பிறகு இப்போதும் கவிதாயினியாக வலம் வரும்  மதுரை மண்ணின் தமிழ்க் குரல் முனைவர் நளினிதேவியினுடையது.


  கவிதைக்கு மொழி இல்லை
  ஆனால் 
  மொழிக்கு கவிதை உண்டு!

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai