முதுமை குறித்த முதியோர் மனநிலை!

பழந்தமிழ் இலக்கியங்களில் முதியோர், முதியவர், மூதாளர், மூதிலாளர், மூத்தோர், முதுமக்கள், மூதாட்டி, முந்தையர் முதுமூப்பு, முதுமகன், முதுமகள், முதிர்வினன், முதிர்வினள், முதியாள், முதுபெருங்குரவர் ஆகிய சொற
முதுமை குறித்த முதியோர் மனநிலை!


பழந்தமிழ் இலக்கியங்களில் முதியோர், முதியவர், மூதாளர், மூதிலாளர், மூத்தோர், முதுமக்கள், மூதாட்டி, முந்தையர் முதுமூப்பு, முதுமகன், முதுமகள், முதிர்வினன், முதிர்வினள், முதியாள், முதுபெருங்குரவர் ஆகிய சொற்கள் முதியோரைக் குறிக்கப் பயன்படுத்தப் பட்டவையாகும். இவற்றோடு இன்று கிழம், கிழடு, கிழவன், கிழவி, பெருசு என்று இளசுகளால் சுட்டப்படுவதையும் சேர்த்துக் கொள்ளலாம்.

மனித வாழ்வின் முப்பெரும் பருவங்களாகக் குழந்தைமை, இளமை, முதுமை ஆகியவை அமைகின்றன. இவற்றுள் குழந்தைமையும் இளமையும் தொடக்க காலப்பருவங்களாதலால், உடலளவில் சோர்வும் நோவுமின்றி மனமும் ஆரோக்கியத்துடன் செயல்படும் பருவங்களாதலால் அவை ஆராதிக்கப்படுகின்ற பருவங்களாகும். மாறாக முதுமை மகாகவி பாரதி கூறுவது போல், ""உள்ளம் வேண்டியபடி செல்லும் உடலாக'' அமையாமல் அது நோய்க்கும் சோர்வுக்கும் கொள்கலனாக அமைவதால், அது ஆராதிக்கப்படுவதில்லை.

அன்று முதுமையின் அடையாளமாக "நரை' தோன்றுதலைக் கருதினர். ""யாண்டு பலவாக நரையிலவாகுதல்''என்ற சங்கப் புலவர் பிசிராந்தையார் கூற்று அதனை வலியுறுத்தும். 

கம்பகாவியத்தில், தயரதன் ஒரு நாள் கண்ணாடியில் முகம் பார்க்க, கன்ன ஓரத்தில் நரை தோன்றியிருப்பதைக்கண்டே முதுமை எய்தியதாக அறிகிறானாம். இதனை, 

"பாங்கில் வந்திடு நரை படிமக் கண்ணாடி
ஆங்கதில் கண்டனன் அவனிக் காவலன்' 
(அயோ: ம.ப, பா: 3)
என்ற கம்பர் வாக்கிலிருந்து அறிகிறோம். மகாகவி 

பாரதியும் கிழப்பருவத்தின் அடையாளமே "நரை' என்பதை ""நரை கூடி கிழப்பருவமெய்தி'' என்பார். தமிழ்ச் சான்றோரின் இக்கூற்றிலிருந்து அன்று நரையே முதுமையின் அடையாளமாகக் கருதப்பட்டது என்பது விளங்கும்.

"நரை கூடி கிழப்பருவம் எய்தினாலும்' அது உடலைப் பொருத்ததேயன்றி, மனத்தைப் பொருத்ததல்ல என்ற கருத்தும் உண்டு. மூப்புப் பருவத்தை அடைந்தாலும் மனத்தை இளமையோடு, வைத்திருந்தால் மூப்பு நெருங்காது என்பதை பாரதிதாசனின் "குடும்ப விளக்கு' உணர்த்தும். "முதுமையில் வாய், மூக்கு, கண், காது வாடிப்போனாலும் எனக்கும் என் மனைவிக்கும் இளமையான மனம் வாய்த்துள்ளது; அது தரும் இன்பம் சுறுசுறுப்பான இளைஞர்களுக்கும்கூட வாய்க்காது' என்பார். 

இங்கு முதுமை தவிர்க்க முடியாதது என்பதும், அதனால் உறுப்புகள் செயலற்றுப் போகும் என்பதும், மனமது வலிமையானால் முதுமை முதுமையாகத் தோன்றாது என்பதும் பெறப்படும். எனினும், முதுமையால் வரும் துயர் தவிர்க்க முடியாதது என்பதை பழந்தமிழ் இலக்கியங்கள் உணர்த்துகின்றன.

பழந்தமிழ் இலக்கியங்களில் முதுமை, தள்ளாமையாலும், இயலாமையாலும் தளர்வுற்று வருந்தும் நிலையிலே சித்தரிக்கப்படுகிறது. "மூப்பு வந்து அதனால் துன்புற்று ஆண்டுகள் பல கழிந்துவிட்டன; இன்னமும் இந்த உயிர் போகாது இருக்கின்றதே' என்று மூதாட்டி ஒருத்தி, வருந்திக் கூறுவதாக பாடல் அமைகிறது. 

அதில், "கால்கள் மூப்பால் தள்ளாடுகின்றன. ஒரு கோலைத் துணையாக்கிக் கொண்டு மெல்ல அடியிட்டு நடக்கிறேன். கண்களில் பார்வை குன்றியதால் வீட்டிற்குள்ளேயே ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல துணை தேவைப்படுகிறது. தலைமுடி எல்லாம் உதிர்ந்து, இருக்கிற தலைமயிரும் நூல்போல் காட்சியளிக்கிறது' என்று முதுமையின் தோற்றத்தைப் புலவர் பெருஞ்சித்திரனார் தம் தாயின் நோக்கில் கண்டு வருந்துவதை,

வாழு நாளோ டியாண்டுபல உண்மையின்
தீர்தல் செல்லாதென் னுயிரெனப் பலபுலந்து
கோல்கள் காலாகத் குறும்பல வொதுங்கி
நூல்விரித் தன்ன கதுப்பினள் கண்டுயின்று 
முன்றில் போகா முதிர்வினள் யாயும் 

(புறநா.159)

என்ற பாடல் உணர்த்துகிறது. அடுத்து, தொடித்தலைவிழுத்தண்டினாரின் புறப்பாடலைக் குறிக்கலாம். முதியவர் ஒருவர் தம் இளமை தந்த இன்பத்தையும் முதுமை தரும் துன்பத்தையும் நினைவுகூர்வதாக அப்பாடல் (243)அமைகிறது.  

பண்டை இலக்கியங்களில் இவ்வாறு முதியோர் தங்கள் செயல்பாடற்ற நிலையை எண்ணி கழிவிரக்கம் கொள்வதாகக் காட்டப்படுகிறதே என்றாலும், தங்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும்; பிள்ளைகளாலும், மற்றவர்களாலும் புறக்கணிக்கப்பட்டதாகவும் செய்திகள் இல்லை. 

புலவர் பெருஞ்சித்திரனாரின் தாய் முதுமையின் கொடுமையால் துன்புற்றாலும், வறுமைச் சூழலிலும் குடும்பத்தோடு இருப்பதாகவே காட்டப்படுகிறாள். தொடித்தலைவிழுத்தண்டினாரின் பாடலும் அவ்வாறே முதுமையை நினைந்து இரங்குவதாகக் கூறப்பட்டிருக்கிறதேயன்றி, முதியோர் பாதுகாப்பற்ற நிலையில் இருந்ததாகக் கூறப்படவில்லை. எனவே, அன்றைய தமிழ்ச் சமூகம் முதியோரைப் பேணிய சமூகமாகவே இருந்திருக்கிறது! ஆனால் இன்று..?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com