ஈட்டவும் ஈயவுமான வள்ளல்!

சட்டக்கல்வி பயிலும் காலத்திலேயே பொருள் ஈட்டும் முயற்சியாக லண்டன் சார்ட்டர்டு வங்கியில் பகுதிநேர வேலை பார்த்து வருவாய் கொண்டு வாழ்ந்தார்.
ஈட்டவும் ஈயவுமான வள்ளல்!


காரைக்குடி என்றதும் வள்ளல் அழகப்பர் பெயரே யாவர்க்கும் முந்தும். அந்த அளவிற்குக் கொடைப்புகழ் பெற்ற அவரைப் பலர் பலவகையாகப் பாராட்டினாலும் காரைக்குடி பொற்கிழிக்கவிஞர்அரு.சோமசுந்தரம்  "ஈட்டவும் ஈயவுமான வள்ளல்' என நாணயத்தின் இருபக்கம் போல் பாராட்டிய பாராட்டுக்கு மேலானதொரு பாராட்டு இல்லை.

சென்னை மாநிலக் கல்லூரியில் எம்.ஏ. பட்டம் பெற்ற அழகப்பர் லண்டன் சென்று பாரிஸ்டர் என்னும் வழக்குரைஞர் கல்வி பயிலத் தொடங்கினார். சட்டக்கல்வி பயிலும் காலத்திலேயே பொருள் ஈட்டும் முயற்சியாக லண்டன் சார்ட்டர்டு வங்கியில் பகுதிநேர வேலை பார்த்து வருவாய் கொண்டு வாழ்ந்தார்.

தாய்நாடு திரும்பியதும் சட்டத்தொழிற்குச் செல்லாமல் வங்கி வேலைப் பயிற்சி அனுபவத்தால் பொருள் வருவாய்ப் பெருக்குவதில் திட்டமிட்டுத் தொழிற்சாலைகளைத் தொடங்கி பலர்க்கு வேலைவாய்ப்பைத் தந்ததோடு, பெரும் பொருள் ஈட்டினார்.  பஞ்சு வாணிபமும் பங்குச்சந்தைத் தொழிலும் மேன்மேலும் பெரும் பொருளையும் ஈட்டத் துணையாய் நின்றதால், பெருஞ் செல்வந்தரானார் அழகப்பர்.

ஈட்டிய பொருளை ஈத்துவந்து மகிழ நினைத்தார். அழகப்பரின் ஈகைக்கும் கொடையும் அளவே இல்லாமல் சங்ககால மன்னர் போல் வாரி வாரி வழங்கினார். அழகப்பரின் ஈகைப் பண்பு பாரி வள்ளலைப் போன்றிருந்ததை நுட்பமாக நோக்கிய குன்றக்குடி தவத்திரு அடிகளார், அழகப்பரை இருபதாம் நூற்றாண்டின் பாரியாக உலகிற்குக் காட்ட விழைந்தார்.

அதனால், பாரி வாழ்ந்த பறம்புமலை என்னும் இன்றைய பிரான்மலைக் கோயில் குன்றக்குடி ஆதீனத்திற்குச் சொந்தமானதாதலால் அழகப்பரை வள்ளல் பாரியாகப் புகழப் பொருத்தமாய் இருக்குமென எண்ணி, அழகப்பரை முதலாகக்கொண்டே கோயிலின் சித்திரைத் திருவிழாவின் ஒரு நாளைப் பாரி விழாவாகப் பிரகடனப்படுத்தினார்.

தேரில் பாரி பவனி வருவது போல் விழாத் தொடக்கத்தில் அழகப்பர் தேரில் அமர்த்தப்பட்டு, வழி நெடுகிலும் காணும் மக்கட்குப் பரிசுப் பொருள்களை வாரிவாரி வழங்கிய வண்ணம் வந்தார்.

வழியில் முல்லைக்கொடி ஒன்றைக்கண்டு தேரை விட்டு இறங்கிய அழகப்பப் பாரி வள்ளல் அம்முல்லைக் கொடியைத் தேரில் சுற்றிவிட்டு மக்களோடு மக்களாக நடந்தேவந்து அலங்கரிக்கப்பட்ட விழா மேடை சிம்மாசனத்தில் பாரியாக அமர்ந்தார்.

விழா ஏற்பாட்டின்படி புலவர்கள், ஆடுநர், பாடுநர், கலை வல்லுநர்கள் வந்துவந்து பரிசில் பெற்றனர். அன்றைய பாரியைப் போலவே அழகப்பர் பாரியும் வாரிவாரி வழங்கிய திருவோலக்கக் காட்சியால் அவர் இருபதாம் நூற்றாண்டின் பாரியே என மக்கள் போற்றிப் புகழ்ந்தனர்.

இப்படியான இறவாப் புகழ் பெற்ற அழகப்பர் புலவர் பாடும் புகழுடையோராய் இருந்தார். ""கோடி கொடுத்த கொடைஞர்'' எனப் பாராட்டினார் தமிழ்ச் செம்மல் வ.சுப. மாணிக்கனார்.

""புறம் புகழும் கடையேழு வள்ளலொடு எட்டாம் வள்ளல்'' எனப் புகழ்ந்தார் கவிஞர் பெரி. சிவனடியான். ""கல்விக்குக் கோடானு கோடி தொகை கொடுத்துக் கற்றோர் நெஞ்சம் ஏடாகத் தன் புகழை எழுதும் வீரன்'' 
என்றார் அழகப்பர் கல்வி நிறுவனப் பேராசான் பூ. அமிர்தலிங்கர்.

இந்த ஆண்டு நூற்றாண்டு கண்ட காரைக்குடிக் கவிஞர் முடியரசரோ, "வெள்ளமென வருநிதியம், வாழும் வீடு அத்தனையும் கல்விக்கீந்தான், உன்னதென ஒன்றில்லை என்றபோதும் உயிர் உனதேகொள்க எனச் சாவுக்கீந்தான்' - என உருக்கமாகப் பாடினார்.

ஆக, உள்ளி (நினைந்து) உவந்தீயும் வள்ளல் எனக் கம்பர் வரைந்த வள்ளலுக்கான இலக்கணம் போல் வாழ்ந்த, வள்ளல் 
அழகப்பரின் வாழ்வும் வள்ளன்மையும் வையகமும் வானகமும் உள்ளளவும் இருக்கும் என்பதில் ஐயமில்லை!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com