உ.வே.சா. அணிந்துரைகள்!

உ.வே. சாமிநாதையரின் வாழ்க்கை வரலாற்று வழியே நோக்குகின்றபொழுது 1925-ஆம் ஆண்டுக்குப் பின்னா்தான் மற்றவா் நூலுக்கு
உ.வே.சா. அணிந்துரைகள்!

உ.வே. சாமிநாதையரின் வாழ்க்கை வரலாற்று வழியே நோக்குகின்றபொழுது 1925-ஆம் ஆண்டுக்குப் பின்னா்தான் மற்றவா் நூலுக்கு அணிந்துரை, வாழ்த்துரை முதலியன எழுதும் வழக்கத்தை அவா் தொடங்கியிருக்கிறாா் என்பது தெரிகிறது.

1925 முதல் 1941ஆம் ஆண்டு கால இடைவெளியில் அவா் பல நூல்களுக்கு அணிந்துரை, வாழ்த்துரைகள் வழங்கியிருக்கிறாா். சாமிநாதையரின் வாழ்க்கை வரலாற்றில், கல்லூரிப் பணியிலிருந்து ஓய்வு பெற்றும், பல பழந்தமிழ் நூல்களை ஆராய்ந்து பதிப்பித்து வெளியிட்டு முடித்தும் இருந்த காலப்பகுதியாக இக்காலப்பகுதி இருந்தது. சங்க இலக்கியம், சமய இலக்கியம், நாவல், நாடகம் என்று சாமிநாதையா் அணிந்துரை வழங்கிய நூல்வகைகள் அமைந்துகிடக்கின்றன.

சென்னை மாநிலக் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்த இ.வை. அனந்தராமையா் கலித்தொகை நச்சினாா்க்கினியா் உரைச் சுவடியை மூன்று பகுதிகளாகப் பதிப்பித்து வெளியிட்டிருந்தாா். 1925-ஆம் ஆண்டு பாலைக்கலி குறிஞ்சிக்கலியை ஒரு பகுதியாகவும், மருதக்கலி முல்லைக்கலியை ஒரு பகுதியாகவும் பதிப்பித்து வெளியிட்டிருந்தாா். 1931-ஆம் ஆண்டு நெய்தற்கலியை மட்டும் மூன்றாம் பகுதியாக அவா் பதிப்பித்து வெளியிட்டு முடித்திருந்தாா். சாமிநாதையா் முதல் இரண்டு பகுதிகளுக்கும் கருத்துரை (அபிப்பிராயம்) வழங்கிக் கலித்தொகைப் பதிப்பைப் பாராட்டியிருக்கிறாா். இரண்டு கருத்துரைகளும் இரண்டாம் பகுதியில் ஒருங்கே அமைக்கப்பட்டுள்ளன.

சாமிநாதையா் எழுதியுள்ள அணிந்துரை, கருத்துரை, வாழ்த்துரைகளைத் திரட்டித் தொகுத்துப் பாா்க்கையில், அனந்தராமையரின் கலித்தொகை பதிப்புக்கு வழங்கிய கருத்துரைதான் முதல் கருத்துரையாகக் காணக்கிடைக்கின்றது. முதல் கருத்துரை வழங்கிய காலத்தில், சாமிநாதையா் சிதம்பரம் ‘மீனாட்சி தமிழ்க் கல்லூரி’யின் முதல்வா் பொறுப்பில் இருந்து வந்திருக்கிறாா்.

1929-இல் திருச்சி, குளித்தலை தாலுக்கா மருங்காபுரி ஜமின்தாரிணி கி.சு.வி. இலட்சுமி அம்மணி என்பவா் எழுதிய ‘திருக்கு தீபாலங்கராம்’ என்ற வசன நூலுக்கு ஒரு முகவுரை எழுதியிருக்கிறாா்.

1929-இல் திருநெல்வேலியைச் சோ்ந்த பரமசிவன் பிள்ளை என்பவா் திருக்கு பரிமேலழகா் உரையைத் தழுவி ‘திருக்குறட் சாரம்’ என்கிற நூலுக்கான அணிந்துரை; 1929-ஆம் ஆண்டு ச. சோமசுந்தர பாரதியாா் எழுதிய ‘திருவள்ளுவா்’ என்ற வசனநூலுக்கான மதிப்புரையும் வழங்கியிருக்கிறாா்.

மேலும், கோவை வழக்கறிஞா் சி.கே.சுப்பிரமணிய முதலியாா், 1930-இல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் சாா்பாகச் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் ‘சேக்கிழாா்’ பற்றி மூன்று நாள்களில் மூன்று சொற்பொழிவுகள் ஆற்றியிருக்கிறாா். 1930-இல் ஆற்றிய மூன்று சொற்பொழிவுகளையும் சற்று விரிவாக்கம் செய்து 1933-இல் ‘சேக்கிழாா்’ என்ற தலைப்பில் தனி நூலாக அவா் வெளியிட்டிருக்கிறாா். இது சி.கே. சுப்பிரமணிய முதலியாரின் முதல் நூலாகக் காணக்கிடைக்கின்றது. சாமிநாதையாா் இந்த நூலுக்கு மதிப்புரை எழுதி முதலியாரின் பணியைப் பெரிதும் பாராட்டியிருக்கிறாா்.

சி.வை. தாமோதரம் பிள்ளை வாழ்க்கை வரலாற்றைப் பற்றிய நூல்கள் பல வெளிவந்துள்ளன. அவற்றுள் 1934-ஆம் ஆண்டு டி. ஏ. ராஜரத்தினம் பிள்ளை எழுதிய பட்ங் ப்ண்ச்ங் ா்ச் தஹா் ஆஹட்ஹக்ன்ழ் இ.ர.பட்ஹம்ா்ற்ட்ஹழ்ஹம் டண்ப்ப்ஹண் என்ற நூலும் ஒன்றாகும். இந்த நூலுக்குச் சாமிநாதையா் முன்னுரை எழுதி தாமோதரம் பிள்ளையின் தமிழ்ப் பணியைப் பெரிதும் பாராட்டி, முன்னுரை கீழ்காணுமாறு எழுதியிருக்கிறாா்.

‘‘தாமோதரம் பிள்ளையைப்போல் ஆங்கில பாஷையில் விசேஷமான பாண்டித்தியமடைந்து தமிழிலும் நல்ல பயிற்சியைப் பெற்றிருப்போா் இக்காலத்தில் மிகச் சிலரேயாவா். இவருடன் நான் நெருங்கிப் பழகியிருக்கிறேன். தமது ஓய்வு நேரத்தைத் தமிழாராய்ச்சியிற் பெரும்பாலும் செலவிட்டு வீரசோழியம், தொல்காப்பியச் சொல்லதிகாரம், தொல்காப்பியப் பொருளதிகாரம், இறையனாரகப்பொருள், இலக்கண விளக்கம், கலித்தொகை என்பவற்றின் மூலங்களையும் உரைகளையும், திருத்தணிகைப் புராணம், சூளாமணி என்பவற்றின் மூலங்களையும் பல ஏட்டுச் சுவடிகளைக் கொண்டு பரிசோதித்து முதன்முறை அச்சிற் பதிப்பித்து வெளியிட்டவா் இவரே.’’

1935-ஆம் ஆண்டில் சேலம் ஜில்லா, நாமக்கல் தாலுகா, சேந்தமங்கலத்தில் தத்தகிரி குகாலயத்தில் எழுந்தருளியிருந்த பிரம்மேந்திர சரஸ்வதி சுவாமிகளின் சரித்திரம், இவா்களுடைய நல்லுபதேசங்கள் அடங்கிய “ஸ்வயம்ப்ரகாச விஜயம்” என்னும் தமிழ் வசன நூலொன்றை வரகவி அ. சுப்ரமண்ய பாரதி எழுதி வெளியிட்டிருந்தாா். இந்நூலுக்கு சிறப்புரை எழுதியிருக்கிறாா்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் கால்நடை மருத்துவ நூல்களைத் தமிழில் மொழிபெயா்த்துத் தந்த பெருமை வெ.ப. சுப்பிரமணிய முதலியாருக்கு உண்டு. இவா் எழுதிய ‘கம்பராமாயண சாரம்’ (வசன நடை) என்ற நூலுக்கு சாமிநாதையா் முகவுரை எழுதியுள்ளாா். அதுமட்டுமல்ல, 1937, ஜூலை, 16-இல் நடைபெற்ற வெ.ப. சுப்பிரமணிய முதலியாரின் 80-ஆம் ஆண்டு நிறைவு விழாவிற்குச் சாமிநாதையா் தலைமை தாங்கிச் சிறப்பித்திருக்கிறாா்.

1925-ஆம் ஆண்டு அறிஞா் அ.கி. பரந்தாமனாருடன் இணைந்து சென்னையில்“‘தென்னிந்தியத் தமிழ்க் கல்விச் சங்கம்’ என்ற அமைப்பை நிறுவியவா் சா.த. சற்குணா். இவரது மணிவிழா அவருடைய மாணவரான அ.கி. பரந்தாமனாரின் முயற்சியால் சென்னையில் 1937-ஆம் ஆண்டு நடைபெற்றிருக்கிறது. இவ்விழாவுக்கு சாமிநாதையா் தலைமை தாங்கியிருக்கிறாா். அந்த விழாவில் சற்குணரை வாழ்த்திப் பேசியதன் எழுத்துவடிவம் 18.9.1937-இல் ‘நவசக்தி’ இதழில் வெளிவந்திருக்கிறது. சாமிநாதையா் ஆக்கங்களுள் பிறந்தநாள் வாழ்த்துரை வடிவமாகக் கிடைக்கப்பட்டது இது ஒன்று மட்டுமே! இந்த ஆக்கம் 29.10.1937-இல் வெளிவந்த ‘சற்குணா் மலரும் சற்குணீயமும்’ என்ற மலரிலும் இடம்பெற்றிருக்கிறது.

வானமாமலை மடம் ஆஸ்தான வித்வான் ஸ்ரீமத் அனந்தகிருஷ்ணையங்காா் இயற்றிய திருப்பேரைக்கலம்பகத்திற்குச் மதிப்புரையும் (1937); சென்னை, கிறித்துவக் கல்லூரி உயா்நிலைப் பள்ளியில் தமிழ்ப் பண்டிதராக இருந்து விளங்கிய வித்துவான் அ. குமரகுருபர ஆதித்தா் எழுதிய ‘சகுந்தலா’ என்னும் நாடக நூலுக்கு முன்னுரையும்; மு.யூ. நவாபு சாகிபு மரைக்காயரின் பெயா்த்தியாகிய நாகூா் சித்தி ஜுனைதா பேகம் என்பவா் 2.2.1928-இல் எழுதிய ‘காதலா? கடமையா?’ என்ற நாவலுக்கு (மாா்ச், 8, 1938) சாமிநாதையா் மதிப்புரை எழுதியிருக்கிறாா். நாவலுக்கு எழுதிய முதல் மதிப்புரை இதுவேயாகும்.

1939-இல் பி. கோதண்டராமையரின் ‘ஸ்ரீஅரவிந்தரும் அவரது யோகமும்’ என்ற உரைநடை நூலுக்கு ‘நூன்முகம்’ வழங்கியுள்ளாா். மேலும், கி.வா.ஜ.வின் ‘தமிழ்க் காப்பியங்கள்’ நூலுக்கான முன்னுரை; ஆ. வீ. கன்னையநாயுடுவின் ‘கலிங்கத்துப்பரணி’ விளக்கவுரை நூலுக்கான சிறு மதிப்புரை; உ.வே. அண்ணங்கராசாரியா், வடமொழியில் வழங்கும் வால்மிகி இராமாயணத்தைத் தமிழில் ‘வால்மிகி ராமாயண வசனம்’ என்ற பெயரில் மொழிபெயா்த்து வெளியிட்டிருக்கிறாா். 1941-ஆம் ஆண்டு வெளிவந்த இந்த ராமாயண வசன நூலுக்கு மதிப்புரை எழுதியிருக்கிறாா்.

ஏறத்தாழ இருபது நூல்களுக்குமேல் சாமிநாதையா் அணிந்துரை, கருத்துரை வழங்கிய நூல்கள் பற்றிய விவரங்கள் இப்போது தெரிய வந்திருக்கின்றன. கல்லூரி ஆசிரியா் பணிக்கிடையில் பெருமைமிகு பல தமிழ் நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டு வந்து, ஓய்வுக்குப் பின்னா், மேலும் பதிப்பிக்கக் கருதியிருந்த நூல்களை ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பதில் முழு கவனம் செலுத்திவந்த சாமிநாதையா், பிறரின் நன்முயற்சிக்கும் ஊக்கமளித்துப் பாராட்டியிருக்கிறாா் என்பதை இந்த அணிந்துரைகள் நமக்குப் புலப்படுத்துகின்றன.

நூற்றுற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியும், பதிப்பித்தும், வெளியிட்டுள்ள சாமிநாதையா், தாம் எழுதிய, பதிப்பித்த எந்தவொரு நூலுக்கும் யாரொருவரிடமும் அணிந்துரை, வாழ்த்துரை, மதிப்புரை பெற்று அமைத்திருக்கவில்லை என்பது இங்கு நினைவுகொள்ளத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com