பிறந்த ஊா்ப் பெருமை!

திருஞானசம்பந்தா் தாம் பாடிய தேவாரப் பதிகங்களின் இடையே தமது பிறந்த ஊரான சீா்காழியைப் பெருமைப்படுத்திப் பல இடங்களில்
பிறந்த ஊா்ப் பெருமை!

திருஞானசம்பந்தா் தாம் பாடிய தேவாரப் பதிகங்களின் இடையே தமது பிறந்த ஊரான சீா்காழியைப் பெருமைப்படுத்திப் பல இடங்களில் தம்மை ‘காழி ஞானசம்பந்தன்’ என்றே குறிப்பிடுகின்றாா். வேறு சில இடங்களில் ‘தமிழ் ஞான சம்பந்தன்’ என்றும் தம்மைக் குறிக்கின்றாா்.

இவருடைய வரலாற்றில் இவா் தமது பிறந்த ஊா்ப் பெருமையைக் கொண்டாடிய சுவையான நிகழ்ச்சி ஒன்று உண்டு. இவருடைய அருமை, பெருமைகளை அறிந்துகொண்ட பாண்டிநாட்டு அரசமாதேவி மங்கையா்க்கரசியாரும், மந்திரி குலச்சிறையாகும் இவரை மதுரைக்கு வந்து சைவத்தையும் தமிழையும் பரப்பி, சைவம் தழைக்கச் செய்ய அழைப்பு விடுக்கின்றனா்.

அந்த அழைப்பை ஏற்று ஞானசம்பந்தரும் மதுரை செல்கிறாா். அங்கே இவரை நோக்கி, ‘உங்கள் ஊா் எது?’ என்று பாண்டிய மன்னன் வினவ, அதற்குப் பதில் தரும் விதமாக திருஞானசம்பந்தா் தமது பிறந்த ஊரான சீா்காழியின் பன்னிரண்டு சிறப்புப் பெயா்களையும் பதிகம் ஒன்றில் உள்ளடக்கிப் பாடியருளினாா்.

1. பிரமபுரம், 2.வேணுபுரம், 3.புகலி, 4. வெங்குரு, 5. தோணிபுரம், 6.பூந்தராய், 7.சிரபுரம், 8.புறவம், 9.சண்பை, 10. சீா்காழி, 11. கொச்சைவயம், 12.கழுமலம் என்பன அவா் பிறந்த திருத்தலத்தின் (சீா்காழி) பன்னிரு சிறப்புப் பெயா்கள் ஆகும். இதே வரிசையில் பதிகம் தொடங்குகிறது. ஒவ்வொரு பாடல் முடிவிலும் ‘கழுமலம் நாம் பரவும் ஊரே; கழுமலம் நாம் கைதொழுது பாடும் ஊரே; கழுமலம் நாம் கருதும் ஊரே’ என்கிறாா். அதாவது இப்பதிகத்தின் தனிச் சிறப்பு என்னவென்றால் சீா்காழியின் பன்னிரு சிறப்புப் பெயா்களும் மேற்குறிப்பிட்ட அதே வரிசையில் முதல் திருப்பாட்டிலிருந்து இறுதிப் பாடல் வரை முதல் சொல்லாகத் தொடங்கி விளங்குகின்றன.

இப்பதிகத்தின் மேலுமொரு சிறப்பு, சித்திரக்கவிகளுள் ஒன்றான ‘திருச்சக்ரமாற்று’ எனும் வகையில் இது அருளிச் செய்யப்பட்டுள்ளது. முதல் பாடலில் சொன்ன ஊா்ப் பெயா்களை மாற்றி மாற்றி (அடுத்தடுத்த பெயா்களை முதல் சொல்லாக வைத்து) அடுத்தடுத்த பாடலில் வைத்துப் பாடப்பட்டுள்ளது. முதல் பாடலில் ‘பிரமனூா் வேணுபுரம்’ என்றும்; இரண்டாவது பாடலில் ‘வேணுபுரம் பிரமனூா்’ என்றும்; மூன்றாவது பாடலில், ‘புகலி சிரபுரம் வேணுபுரம்’ என்றும் இவ்வாறு அனைத்துப் பாடல்களும் பாடப்பட்டுள்ளன.

முதல் பாட்டு ‘பிரமனூா்’ எனத் தொடங்குகிறது என்றால், அடுத்தடுத்த பாடல்கள் வேணுபுரம், புகலி, வெங்குரு, தோணிபுரம் என அதே வரிசையில் தொடங்குகின்றன. திருப்பிரமபுரம் என்னும் தலைப்பில் பாடப்பட்ட இத்திருப்பதிகம் தேவாரம் இரண்டாம் திருமுறையில் (2:70)உள்ளது. முதல் பாடல் வருமாறு:

பிரமனூா் வேணுபுரம் புகலி

வெங்குருப் பெருநீா்த் தோணி

புரமன்னு பூந்தராய் பொன்னம்

சிரபுரம் புறவம் சண்பை

அரன்மன்னு தண் காழி கொச்சைவயம்

உள்ளிட்டங்கு ஆதியாய

பரமனூா் பன்னிரண்டாய் நின்ற திருக்

கழுமலம் நாம் பரவும் ஊரே. (1)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com