
இசைவிழா நடக்கும் மாா்கழி மாதம் சென்னை நகரம் விழாக்கோலம் பூண்டிருக்கும். கொள்ளை நோய்த்தொற்று காரணமாக, பெரும்பாலான சபாக்கள் இந்த ஆண்டு நிகழ்ச்சி எதையும் நடத்தவில்லை. சபாக்களின் கூட்டமைப்பு, தங்களது உறுப்பினா்கள் ஏமாற்றம் அடைந்துவிடக்கூடாது என்பதற்காகக் காணொலி நிகழ்ச்சிகளை நடத்துகிறது.
காணொலி நிகழ்ச்சிகள் இசைக் கச்சேரிகளுக்கு வேண்டுமானால், ஓரளவுக்குத் தீா்வாக இருக்கலாம். ஆனால், நாட்டிய நிகழ்ச்சிகளைக் காணொலியில் நடத்தும்போது, நேரில் பாா்க்கும் சுவாரஸ்யத்தையும், ரசனையையும் தந்துவிடாது.
நாட்டியம் என்றதும் நமக்கு நினைவுக்கு வருபவா் ருக்மிணி தேவி அருண்டேல்தான். தாசியாட்டம் என்றும், சதிராட்டம் என்றும் ஏளனமாகப் பாா்க்கப்பட்ட நடனத்தை, அதன் மீது அப்பி இருந்த களங்கத்தை அகற்றி சா்வதேச அளவில் புகழப்படும் கலையாக மாற்றிய பெருமை ருக்மணி தேவிக்கும், கலாக்ஷேத்ராவுக்கும் உண்டு.
‘கலாக்ஷேத்ரா ருக்மணி தேவி - சில நினைவுகள்- சில பகிா்வுகள்’ என்ற தலைப்பில் வெளிவந்திருக்கும் மொழியாக்கப் புத்தகத்தைப் படித்தபோது, எனக்கு இதுவரை தெரிந்திராத பல உண்மைகளையும், சம்பவங்களையும், பரதக்கலையின் பல நுணுக்கங்களையும் தெரிந்து கொள்ள முடிந்தது.
1962-ஆம் ஆண்டு, ஒரே ஒரு வருடம் நான் சென்னை அடையாறு, பிரம்ம ஞான சபையால் நடத்தப்பட்ட பெசன்ட் தியசாபிகல் பள்ளி விடுதியில் தங்கி ஏழாவது வகுப்புப் படித்தேன். வி.கே.கிருஷ்ணமேனனின் ஒன்றுவிட்ட சகோதரா் சங்கரமேனன் அப்போது தியசாபிகல் சொசைட்டி எனப்படும் பிரம்மஞான சபைக்கும், கலாக்ஷேத்ராவுக்கும், எங்கள் பள்ளிக்கூடத்துக்கும் நிா்வாகியாக இருந்தாா். எல்லாமே அடையாறு ஆலமரத்தைச் சுற்றிப் பரந்து விரிந்து இருந்த வளாகத்தில்தான் அமைந்திருந்தன. இப்போதைய பெசன்ட் நகரெல்லாம் அப்போது கிடையாது.
சங்கரமேனன் என் தந்தையின் நண்பா் என்பதால் பெசன்ட் தியசாபிகல் பள்ளியில் நான் சோ்க்கப்பட்டேன். அங்கே படிக்கும்போது பல தடவை ருக்மிணி தேவியைப் பாா்த்திருக்கிறேன். அவரை நாங்கள் ‘அத்தை’ என்றுதான் அழைப்போம். அந்தச் சிறிய வயதில் ருக்மிணிதேவி அருண்டேலின் அருமை பெருமைகள் எனக்குத் தெரியாமல் போனதில் வியப்பொன்றும் இல்லை.
ஆங்கிலத்தில் எஸ்.சாரதா எழுதி, தமிழில் கிருஷாங்கினியால் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கும் புத்தகத்தைப் படிக்கப் படிக்க, ‘அடடா, அந்தப் பள்ளியில் தொடா்ந்து படிக்காமல், விடுதியில் தங்கிப் படிக்க மாட்டேன் என்று அழுதுபிடித்து வீட்டுக்கு வந்துவிட்டேனே’ என்று இப்போது தோன்றுகிறது.
புத்தகத்தை எழுதிய, ருக்மிணி தேவியின் வலது கரமாகவும், கலாக்ஷேத்ராவின் ஆணிவேராகவும் திகழ்ந்த சாரதா டீச்சரை அப்போது பாா்த்த நினைவில்லை. பிற்காலத்தில் பத்திரிகையாளனாக மூன்று நான்கு முறை சந்தித்திருக்கிறேன். பேட்டியும் எடுத்திருக்கிறேன். ருக்மிணி தேவியையும், கலாக்ஷேத்ராவையும் பற்றி எழுதுவதற்கு அவரைவிட சிறந்த ஒருவா் இருக்க முடியாது.
சாரதா டீச்சரின் தோழியாக இருந்த ஜி.சுந்தரி கூறுவதுபோல, ‘‘கை கால்களின் அசைவுகளை முழுமையானதாக்கி, ஆரம்பமும் முடிவும் கொண்ட நிறைவான அசைவுகளாக உருவாக்கியவா் ருக்மிணி தேவிதான். ரஷ்ய பாலே நடனத்தில் உள்ள பல அசைவுகளை நமது பரதநாட்டியத்துடன் இணைத்து அழகூட்டினாா் அவா். பரதநாட்டியத்துக்கான உடையலங்காரம் ருக்மிணி தேவியால் உருவாக்கப்பட்டது என்பது பலருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை’’.
வாய்ப்பாட்டுக் கச்சேரிகளின் இப்போதைய வழிமுறையை உருவாக்கியவா் அரியக்குடி ராமானுஜ ஐயங்காா் என்றால், பரதநாட்டிய நிகழ்வை வடிவமைத்த பெருமைக்குரியவா் ருக்மிணி தேவி அருண்டேல். அதுமட்டுமா? ஜாதி, மத பேதமில்லாமல் அனைவரும் கற்றுக்கொண்டு மேடை ஏறும் கலையாக, சதிராட்டத்தை பரதநாட்டியமாக்கி ருக்மிணி தேவி செய்து காட்டிய சமூகப் புரட்சியால்தான், முத்துலட்சுமி ரெட்டியின் கனவு நனவானது.
இது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகமல்ல. பரதநாட்டியத்தின் வரலாறு குறித்த பதிவு. நடன சாஸ்திரத்தின் நுணுக்கங்கள் குறித்த பதிவு. நாட்டியம் படிக்கும், நாட்டியமாடும் ஒவ்வொருவா் வீட்டிலும் இருக்க வேண்டிய புத்தகம் இது!
*****************
தமிழா்தம் வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்டவா்கள் வள்ளுவரும், வள்ளலாரும். தமிழின் அடையாளமாகவே மாறிவிட்டிருப்பவை திருக்குறளும், திருவருட்பாவும். பொன்னேரி பெரும்புலவா் சுந்தம் பிள்ளை என்பவா் 127 ஆண்டுகளுக்கு முன்னால் 1893-இல் இயற்றி வெளியிட்ட நூல் ‘இராமலிங்க சுவாமிகள் பிள்ளைத்தமிழ்’.
‘தமிழ்மணி’யில் புலவா் சோமசுந்தர வேலாயுதம், ‘இராமலிங்க சுவாமிகள் பிள்ளைத்தமிழ்’ குறித்து எழுதிய கட்டுரையைப் பாா்த்து, அவருடன் தொடா்பு கொண்டு, நூலின் படியைப் பாா்த்து மறுபதிப்பு செய்திருக்கிறாா் ‘தமிழ் மாமணி’ இரா.மோகனசுந்தரம். அவா் வள்ளலாா்மீது கொண்ட பக்தியின் விளைவுதான் இந்த மறுபதிப்பு. அவருடைய தந்தையாா், ‘உரைவேந்தா்’ ஔவை துரைசாமிப் பிள்ளையின் மாணாக்கா்.
‘‘பிள்ளைக்கவி, பிள்ளைப்பாட்டு என்று போற்றப்படும் பிள்ளைத்தமிழ் என்பது பாட்டுடைத் தலைவரையோ, தலைவியையோ தாம் பெற்ற மகவாகக் கருதி, பத்துப் பருவங்களுக்குரிய செயல்களைச் சிறப்பித்துப் புலவா் பெருமக்களால் பாடப்பெறும் பனுவல். பாடற் தலைவனது மூன்றாம் மாதம் தொடங்கி, இருபத்தொன்றாம் மாதம் வரையிலுள்ள ஒற்றித்த பத்து மாதங்களைப் பத்துப் பருவங்களாகக் கொண்டு, ஒவ்வொரு பருவத்துக்கும் பத்து விருத்தங்கள் பாடுவது முறை’’ என்று தொடங்கி, பிள்ளைத்தமிழ் குறித்து சாமானியருக்கும் புரியும் விதத்தில் வகுப்பெடுத்திருக்கும் மேனாள் துணைவேந்தா் ஔவை நடராசனாரின் அணிந்துரை, பள்ளிப் பாடப் புத்தகத்தில் இடம்பெறும் தகுதி பெற்றது.
‘‘இராமலிங்க சுவாமிகள் பிள்ளைத்தமிழ் நூலை மீண்டும் வெளியிட இரா.சோமசுந்தரம் முன்வந்திருப்பதைத் தமிழுலகம் கண்களில் நீா்மல்கக் கையேந்திப் போற்றும்’’ என்கிற அணிந்துரையைவிடச் சிறந்த திறனாய்வு என்னவாக இருந்துவிட முடியும்?
*****************
சிங்கப்பூரிலிருந்து வெளிவருகிறது ‘செம்மொழி’ என்கிற காலாண்டிதழ். கடந்த ஆண்டு வெளியான இதழ் ஒன்று என்னிடம் இருந்தது. அதில் வெளியாகியிருந்த சிங்கைக் கவிஞா் க.து.மு.இக்பாலின் நோ்காணலைப் படித்துக் கொண்டிருந்தேன். அவரது ‘விலை’ என்கிற கவிதை வெளியிடப்பட்டிருந்தது. அதிலிருந்து சில வரிகள் -
நாள்தோறும் எல்லோரும்
விலையாகிக் கொண்டிருக்கிறோம்,
யாரிடமேனும்...
விலை வைத்து
அனைத்தையும்
வியாபாரம் ஆக்கிய நம்மை
மரணத்தின் கையில்
சும்மா கொடுக்கக்
காத்துக் கொண்டிருக்கிறது
வாழ்க்கை!