வருகைக்கு வருந்துகிறேன்!

தமிழ்ப் புலவர்கள், உலகில் காணப்படும் காட்சிப் பொருள்களினின்றும், உணரப்படும் கருத்துப் பொருள்களினின்றும், தாம் நுகர்ந்த அழகுகளையே செய்யுள்களாகப் பாடினர்.
வருகைக்கு வருந்துகிறேன்!

தமிழ்ப் புலவர்கள், உலகில் காணப்படும் காட்சிப் பொருள்களினின்றும், உணரப்படும் கருத்துப் பொருள்களினின்றும், தாம் நுகர்ந்த அழகுகளையே செய்யுள்களாகப் பாடினர். இச்செய்யுள்களில் சொல், பொருள், யாப்பு, அணி, இசை முதலிய பல அலங்காரங்களைப் புகுத்தினர். அத்தகைய பாடல்களுள் குறுந்தொகைப் பாடல்களும் அடங்கும்.

குறிஞ்சித் திணையில் அமைந்த கபிலர் பாடிய குறுந்தொகைப் பாடல் இது. தலைவியைக் காண இரவுக்குறி வந்த தலைவனிடம் தோழி நொந்து கூறியது.  

"பெயல்கண் மறைத்தலின் விசும்பு காணலையே,
நீர் பரந்து ஒழுகலின் நிலம் காணலையே,
எல்லை சேறலின் இருள் பெரிது பட்டன்று
பல்லோர் துஞ்சும் பால் நாள் கங்குல்
யாங்கு வந்தனையோ ஓங்கல் வெற்ப?  
வேங்கை கமழும் என் சிறுகுடி
யாங்கறிந் தனையோ? நோகோ யானே!' (குறுந்.355) 

"உயர்ந்த மலைநாட்டுத் தலைவனே! மிகுதியாக மழை பெய்வதால் வானத்தைக் காண இயலவில்லை. மழைநீர் நிலத்தில் எங்கும் பரவி ஓடுவதால் நிலத்தையும் காண முடியவில்லை. கதிரவன் மறைந்துவிட்டதால் பேரிருள் பரவிவிட்டது. ஊரில் பலரும் தூங்குகின்ற இந்த நள்ளிரவில் நீ எவ்வாறு வந்தாய்?  வேங்கை மலர்களின் மணம் கமழும் எமது சிறுகுடியை நீ எவ்வாறு அறிந்தாய்? உனது இந்தச் செய்கையைக் கண்டு நான் மிகவும் வருந்துகிறேன்' என்று நொந்து கூறுகிறாள் தோழி.

குறிஞ்சித் திணையின் உரிப்பொருள் புணர்தல். அந்த ஒழுக்கத்தினும், இற்செறிப்பு  முதலிய இடையூறுகளைப் புலவர் படைத்துக் கொள்கிறார். நொடிப்பொழுதும் பிரிந்து உறைதலாற்றாத காதலரை நெடிது பிரித்துக் 
காட்டுகிறார். 

அவர்தம் சொற்களிலும் செயல்களிலும் அக்காதலின் பெருமையெல்லாம் புலப்படுத்திப் பாவிகம் (ஓர் அலங்காரம். பாவின் வாசகச் சிறப்பு. இது சென்றதையும், வருவதையும், நிகழ்வதாகச் சொல்லுதல், காப்பியப் பண்பு) ஆக்குகிறார் கபிலர்.

விசும்பு காணலையே! நிலம் காணலையே! என்று தோழி சொல்லும்போது, அவளுடைய அகநிலையும், அவளது "மருட்கை' என்னும் மெய்ப்பாடும் நன்கு புலப்படுகின்றன. ஏனைய இரவுகளைப் பார்க்க, இருள் செறிந்து கிடக்கும் அந்நள்ளிரவை நோக்கி அவள் மிகவும் மருள்கிறாள்.

"எம் ஊரோ கோபுரமும் மதிலும் மாடங்களும் அமைந்த நகரம் அல்ல. இக்காட்டினூடே மூழ்கி, புறத்தாருக்கும் புலனாகாத சிற்றூர். இப்பேரிருளிலே இவ்வூர் இருக்கும் இடத்தை நீ அறிந்து வந்தது எவ்வாறு?' என வியக்கிறாள். 

"இந்த நள்ளிரவில், பேரிருளில் நீ இங்ஙனம் வந்தமைக்காக  நாங்கள்  பெரிதும் மகிழ்கின்றோம்' என்று கூறாமல்,  "நின் வருகைக்காக யான் பெரிதும் வருந்துகிறேன்' என்று தோழி சொல்லும்போதே இச்செய்யுளின் பாவிகம் மிகமிக உயர்ந்து சுவைக்கப்படுகின்றது.

காட்டு வழியில் நள்ளிரவையும், கடும் மழையையும் பொருட்படுத்தாது தன் காதல் மட்டுமே வழிகாட்ட வரும் தலைவன் "உயிரினும் பெரிது காதல்' என்பதையே உணர்த்துகிறான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com