Enable Javscript for better performance
"சிறு பழத்து ஒரு விதையாய்...'- Dinamani

சுடச்சுட

  

  "சிறு பழத்து ஒரு விதையாய்...'

  By DIN  |   Published on : 23rd February 2020 06:12 AM  |   அ+அ அ-   |    |  

  tm2


  ஒரு கதையோ, புதினமோ, கவிதையோ, காவியமோ தோன்றுதற்கு வித்தாய் ஒற்றை நிகழ்வு அல்லது ஒரு சொல் போதும். "ஒற்றை நெல் கற்றை நெல்லை விளைவிப்பது' போல, ஒற்றைச் சொல், ஒரு கவிதையை, காவியத்தை உருவாக்கும் ஆற்றல் கொண்டது.

  அப்படித் தோன்றிய அற்புத நூல்கள் தமிழில் எத்தனையோ உண்டு. "உலகெலாம்' என்று இறைவன் அடியெடுத்துக் கொடுக்க, அதனை உள்வாங்கி, தெய்வச் சேக்கிழார் படைத்தது பெரியபுராணம். அதற்கும் முன்னோடியானது, நம்பியாண்டார் நம்பி இயற்றிய "திருத்தொண்டத் திருவந்தாதி'; அதற்கும் மூலமானது, சுந்தரரின் "திருத்தொண்டத்தொகை'; அதுவும், "தில்லைவாழ் அந்தணர்' என்று ஈசன் அடியெடுத்துக் கொடுத்து எழுந்த நூல். அதற்கும் முன்னதாக, தம்மைத் தடுத்தாட்கொள்ள வந்த ஆண்டவனை,
  "பித்தன்' என்று ஏசி இகழ்ந்த வாசகமே, பின்னர், 
  "பித்தா பிறைசூடி பெருமானே அருளாளாய்' என்று ஓதிப் புகழ்ந்த தேவாரம் ஆயிற்று. இதனை சேக்கிழார் பெருமான் பெரியபுராணச் செய்யுளில் (70, 73)  
  உரைக்கிறார். 
  அதுபோல், சீறாப்புராணம் இயற்ற வேண்டி, நாகூர் ஆண்டவரை இறைஞ்சிய உமறுப்புலவருக்கு, "திருவினும் திருவாய்' என்று அடியெடுத்துக் கொடுத்ததும் இறையருள்தான். "ராம' என்ற நாமம்கூட நவில முடியாத வேடருக்கு, மரங்கள் நிறைந்த அடர்கானகத்தில், "மரா மரா' என்று சொல்லச் சொல்லிப் பழக்கியதனால், "ஆதிராமாயணம்' 
  தந்த வான்மீகி வந்தார் என்றும் சொல்லுவதுண்டு.

  இதுபோன்ற ஒற்றைத் தொடர்தான் மற்றைப் பாடல்களுக்கும் நூல்களுக்கும் வித்தாவதைக் காண்கிறபோது, சிறுபழத்தின் ஒரு விதையைச் சிந்தித்த "வெற்றி வேற்கை'ப் பாடல் நினைவுக்கு வருகிறது.  அது பெருமரமாய் நிழல் தருவதைப் படம்பிடித்துக் காட்டுகிறது. நீரில் வாழும் சிறு மீனின் முட்டையளவினும் சிறியது ஆலமரத்தின் வித்து. அது மண்ணில் விழுந்து, முளைத்தெழுந்து விண்படர்ந்தால், யானை, தேர், குதிரை மற்றும் காலாட்படையொடு மன்னர்தம் மாளிகையில் தங்குதற்கு நிகர்த்த நிழல் தரும் என்பதை ஒப்பனையில்லாமல் அது சித்திரப்படுத்துகிறது.

  "தெள்ளிய ஆலின் சிறுபழத்து ஒருவிதை
  தெண்ணீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும்
  நுண்ணிதே ஆயினும் அண்ணல் யானை
  அணிதேர் புரவி ஆள்பெரும் படையொடு
  மன்னர்க்கு இருக்க நிழலா கும்மே' (வெ.வே.17)

  இந்தப் பாடலின் ஈற்றுத் தொடரில் நிழலுக்கு அழுத்தம் கொடுக்க எழுந்த "ம்', "அவ்வ்வளவு பெரிய நிழல்' என்பதை உணர்த்த வருகிற அழகில் இலக்கணச் செழுமையும் தெரிகிறது; இலக்கிய வளமையும் புரிகிறது.
  ஆலவித்தின் அணிபெருந்தோற்றம், கொல்கத்தாவில் ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் இருப்பதையும்; மகாராஷ்டிர மாநிலத்து வைசக்தர் என்ற ஊரில், 
  1587 அடியளவு கொண்டு திகழ்வதையும்; நர்மதை ஆற்றுப்படுகையில் ஏழாயிரம் மக்களும்; ஆந்திரப் 
  பள்ளத்தாக்கில், இருபதினாயிரம் மக்களும் இருக்கக்கூடியதாக நிழல்பரப்பி நிற்பதையும், "பாலகாண்டத்துப் பைம்பொழில்' நூலின் ஆசிரியர் பேரா.சுந்தரசண்முகனார் சாலச்சிறப்பாய் எடுத்துக்காட்டும்போது, நமக்குள் அடையாறு ஆலமரம் நிழல் பரப்பி நிற்பதையும் உணர்கிறோம்.
  இக்காலத்திலேயே இத்தகு மரங்கள் இருக்கின்றதென்றால், கம்பர் காலத்தில் எத்தகு மரங்கள் இருந்திருக்கக்கூடும்? இவற்றையெல்லாம் கம்பர் கண்டதால்தான், மாவலியை வவ்விட வேண்டி வந்த வாமன அவதாரத்தைப் பாடுகிறபோது, "ஆல் அமர்வித்து' என்று அடையாளம் காட்டுகின்றார்.

  "காலம் நுனித்துணர் காசிபன் என்னும்
  வால்அறிவற்கு அதிதிக்கு ஒரு மகவாய்
  நீலநிறத்து நெடுந்தகை வந்தோர்
  ஆல்அமர் வித்தின் அருங்குறள் ஆனான்'


  என்கிறார். இதுபோல் எத்தனையோ அரிய காட்சிகளை அடையாளம் கண்டதால்தான், கம்பரால் 

  அற்புதக் காப்பியம் இசைக்க முடிந்திருக்கிறது; 
  அளவில்லாத சொற்பயன்பாடு அவருள் ஆக்கம் 
  பெற்றிருக்கின்றது.

  1925-இல் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை தலைமையில் பணியாற்றிய அறிஞர் குழு உருவாக்கிய, சென்னைப் பல்கலைக்கழக லெக்சிகன் பட்டியலிட்ட சொற்களின் எண்ணிக்கை, மொத்தம் 1,24,000. ஆனால், 6 காண்டங்கள், 118 படலங்கள், 10,368 பாடல்கள் கொண்ட கம்பகாவியம் பாடிய கம்பரோ மொத்தம் மூன்று முதல் 
  மூன்றரை லட்சம் சொற்களைக் கையாண்டிருக்கின்றார் என்று கணக்கிட்டு வியக்கிறார் கதாசிரியர் நாஞ்சில்நாடன். இவற்றுக்கெல்லாம் வித்தாகிய சொற்களைத் தன் காலத்து மக்கள் தமிழிலும் தமக்கு மூத்தோர் அருளிய நூல்களில் இருந்தும் உள்வாங்கிக் கொண்டார் என்று சொல்வதில் ஏதும் பிழையிருக்க இயலாது.
  இத்துணை பெரிய நூலை எழுதுதற்கு முன்னதாக அவனுள் எழுந்த மலைப்பும் "இயலுமா?' என்ற தவிப்பும் பாயிரம் பாடுகிற மாத்திரத்தில் எழுந்திருக்கக்
  கூடும். இதற்கு முன்னதாக எழுந்த நூல்களை அவர் வரம்பறக் கற்றவர் ஆதலால் அவற்றுள் பல அருள்நூல்கள் இருந்திருக்கவும் கூடும்.
  "ஆலமர் செல்வன்' குருந்தமரத்தடி குருவாக எழுந்தருளி உபதேசித்த கணத்தில், தென்னவன் பிரம்மராயன் மாணிக்கவாசகராகி அருளிய திருவாசகத்துள் ஒன்று, நீத்தல் விண்ணப்பம். அதன் 
  13-ஆவது பாடலில் வரும் ஓர் உவமை, "கடலினுள் நாய் நக்கியாங்கு'!
  தானே பயின்றோ, தன் வாழ்நாளில் யாரோ பாடியோ, உள்ளம் புகுந்த இந்த உவமைதான் கம்பர் வாக்கில் புத்துருவெய்தியதோ? மணிவாசகப் பெரு
  மானின் அருள்வாக்கில், தாகம் எடுத்து அலைந்த நாய் தன் கண்முன் கண்டு நக்கிக் குடிக்க முனைந்ததோ, உப்புக்கடல்; அது வேகம் கொண்டு காவியம் பாட முனைந்த கம்பருக்கு முன்னே, பாற்கடல் ஆயிற்று! கதையின் நாயகன் துயில் கொள்ளும் இடம் பாற்கடல் என்றால், நக்கிக் குடிக்கப் பூனைக்குத்தானே பெருவிருப்பம். ஆதலினால், நாய் பூனையாய் மறு அவதாரம் எடுத்துப் பாய்கிறது, பாற்கடலுள்.

  "ஓசைபெற்று உயர் பாற்கடல் உற்று ஒரு
  பூசை முற்றவும் நக்குபு புக்கென'

  "ஆசைபற்றி'க் கற்போரையெல்லாம் பூசையாக்கிப் புதுமை படைத்து விடுகிறார் கம்பர். இதுபோல், "சிறுபழத்து ஒரு விதையாய்' விழுந்து, எழுந்து, வாழையடி வாழையென வளர்ந்து, ஆல்போல் தழைத்து, அருகுபோல் வேரோடி, இலக்கியப் பெரும்பரப்பில் எழுந்த நூல்கள் எண்ணில் பலவாக மிகுந்திருக்கின்றன.

  -கிருங்கை சேதுபதி


  திருக்குறள் ஒப்பித்தல் போட்டி


  இந்த ஆண்டு மட்டும் புதிய போட்டியாளர் பங்கேற்பு இல்லை.

  "திருச்சிராப்பள்ளி திருக்குறள் 
  திருமூலநாதன் அறக்கட்டளை' 

  சார்பில் 23-ஆம் ஆண்டு  திருக்குறள்  ஒப்பித்தல் போட்டி வரும் 1.5.2020-இல் திருச்சிராப்பள்ளி சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளது.  1.5.2019-இல் முதல் 500 குறள்கள் ஒப்பித்தவர்கள் மட்டும் 1.5.2020-இல் 501-1330 குறள்களை ஒப்பித்து ரூ.1000-மும், விருதும் பெறலாம்.

  தகுதியுடைய மாணவர்கள் 1.3.2020-15.4.2020-க்குள் தமது தன்விவரக் குறிப்பை அஞ்சலில் அனுப்பிப் பதிவு செய்துகொள்ள வேண்டும். போட்டிக்கான விண்ணப்பப் படிவத்தை மாணவர்கள்

  https://sites.google.com/site/thirumoolanathand/thirukkural-thirumoolanathan-arakkattalai   
  என்கிற இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து,
  பூர்த்தி செய்த விண்ணப்பப்படிவத்தை thirumulanathan@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

  தொடர்புக்கு 
  பூவை.பி.தயாபரன், 
  நிறுவுநர்-தலைவர்,
  25, திருக்குறள் தெரு,
  புள்ளம்பாடி-621 711.
  97865 86992

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai