Enable Javscript for better performance
நற்றிணையில் உளவியல்!- Dinamani

சுடச்சுட

  

  நற்றிணையில் உளவியல்!

  By -மா. உலகநாதன்  |   Published on : 23rd February 2020 06:14 AM  |   அ+அ அ-   |    |  

  tm3

  விரும்பத்தகாத அல்லது சமூகத்தால் ஏற்கப்படாத தூண்டல்
  களைக் கட்டுப்படுத்த, அகத்தூண்டல்கள் தம்மிடம் இருப்பதை மறுத்து, அவற்றிற்கு நேர்மாறான குணங்களைத் தோற்றுவித்துக் கொள்வது உளநுட்பச் செயல்களில் ஒரு முறையாகும் என்பது உளவியலாளர்களின் விளக்கம். இந்த உளவியல்  கருத்தைத் தலைவி ஒருத்தி தலைவனின் பிரிவுக் காலத்தில் அரங்கேற்றிக் காட்டும் காட்சியை நற்றிணையில் காண்கிறோம்.

  ஓருடலில்  நல்வினையும் நோயும் என இரு நிலையானமையை உள்ளுதொறும் நகுவேன் எனத் தோழியுடன் பகிர்ந்து கொள்கிறாள் தலைவி. என்னைவிட்டு என் தலைவனுடன் சென்று விட்ட என் நெஞ்சம் நல்வினை உடையது; இங்கேயே கிடந்து அவர் மொழியொடு போராடும் நான் நோயுடையேன்' என்பதை "உள்ளுதொறும் நகுவேன்-தோழி' (நற்-107) என்ற பாடலில் தலைவி தன்னையே இருகூறாக்கிப் பேசுகிறாள்.

  "தலைவி உள்ளுதொறும் நகுவேன்' என்கிறாள்! "வாயல் முறுவல்' என்கிறார் பெருங்கடுங்கோ என்னும் புலவர். பிரிவாற்றாமையில் தவிக்கும் தலைவிக்கு நகுதலும் முறுவலிப்பதும் சாத்தியமா? அடங்கியே பழக்கப்பட்ட பெண்மை தன் அக எழுச்சியைக் கூட வெளிப்படுத்த முடியாமல் நேர் மாறாக நகுதலும் முறுவலும் செய்வதாக  நற்றிணைப் பாடல்  தெரிவிக்கிறது. அதுவே உளநுட்பச் செயல் எனவும் வருணிக்கிறது உளவியல் ஆய்வு. 

  தலைவனைப் பிரிதல் என்பது தலைவி விரும்பாததாகும். அவன் பயணம் மேற்கொள்ளும்போது அழுது ஆரவாரித்து, அவன் மனத்தை நோகச் செய்தல் சமுதாயமும் பண்பாடும் ஏற்காததொன்றாகும். இரண்டினையும் ஈடுகட்டத் தலைவி தன் துயரத்தை மாற்றி முறுவலாக்கும் செயலில் தன் மனத்தைத் தேற்றிக்கொள்கிறாள். 

  "இடுக்கண் வருங்கால் நகுக'  என்கிறது திருக்குறள்(621) தலைவியின் உள நலமும் அத்தகையதே! 

  அதனால்தான் பொருள் கருதிப் பிரிய இருக்கும் தலைவன் முகம் நோக்கி, "பிரிதல் அறன் அன்று' என்னும் உள்ளக் குறிப்பை வாய்மொழியால் அன்றி முகக் குறிப்பால் காட்டுகின்றாள். கண்களில் கண்ணீர் தளும்ப, புதல்வன் தலையைக் கோதியபடி கலங்கியழும் நிலையை, "வறிதகத்தெழுந்த வாயல் முறுவலள்' என அவள் நிலையைப் புலவர் விளக்குகிறார் (அகம்.5 : 5). ஒரு துயரச் சூழலில் நேரும் இன்பத் துலங்கல் இம்முறுவலில் விளங்குகிறது;   தோழியும் தன் பங்குக்குத் தலைவனின் பிரிவுக்குத் தலைவியை உடன்பட வைக்க முயற்சி செய்கிறாள்.

  "பெருநகை கேளாய், தோழி! காதலர் 
  ஒருநாள் கழியினும் உயிர் வேறுபடூஉம்
  பொம்மல் ஓதி!நம் இவண்ஒழியச் 
  செல்ப என்ப, தாமே சென்று,
  தம்வினை முற்றி வரூஉம் வரை நம் மனை 
  வாழ்தும் என்ப,நாமே, அதன்தலை-
  கேழ்கிளர்உத்தி அரவுத் தலை பனிப்ப
  படு மழை உருமின் உரற்று குரல் 
  நடுநாள் யாமத்தும் தமியம் கேட்டே' 
  (நற்-129)

  "நம்மை விட்டு அவர் மட்டும் செல்வாராம்; நாம் இங்கே மழைக்கால நள்ளிரவில் இடியோசை கேட்டு நடுங்கும் பாம்புகளோடு வாழ்வோமாம்; இது நகைப்பிற்கு உரியது' என்று பிரிவின் துயரத்தை எல்லாம் நுட்பமாகக் கூறினாலும், அவற்றைத் துன்ப உணர்ச்சியுடன் காட்டாமல் பிரிவைப் "பெருநகை' எனக் கூறி அதிர்ச்சியான செய்தியை நகைச்சுவையாக மாற்றுகிறாள். தலைவி விரும்பாத ஒன்றை விரும்பி ஏற்கச் செய்ய அறிவு நுட்பத்தோடு தோழி ஆற்றுப்படுத்துகிறாள். "அவர் பிரிந்தால் உடனே நாம் சாவோம் என்பதை அறிய மாட்டாதவரே அவ்வாறு கூறுவர்' என்பது இதன் மறைபொருள்.

  "செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின் 
  வல்வரவு வாழ்வார்க்கு உரை'  (குறள்-1151)
  என்கிறாள் திருக்குறளில் இடம் பெறும் தலைவி!

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai