அறிந்த தமிழும் அறியாப் பொருளும்!

தொன்மைமிகு தமிழ் மொழியின் வேர்ச் சொற்கள் தன்மையதாம் அறிவியல் தானென்றுரைக்கலாம். ஈண்டு, அறிந்த தமிழ் மொழியின் அறியாப் பொருள்களைக் காண்போம். 
அறிந்த தமிழும் அறியாப் பொருளும்!


தொன்மைமிகு தமிழ் மொழியின் வேர்ச் சொற்கள் தன்மையதாம் அறிவியல் தானென்றுரைக்கலாம். ஈண்டு, அறிந்த தமிழ் மொழியின் அறியாப் பொருள்களைக் காண்போம். 

1. இலெமூறியா- இலை + முறியா + இலைமுறியாத சோற்றுக் கற்றாழை நிறைந்த (நிலம்)நாடு, இலை + மூலி + நாடு - இலை மூலிகையான சோற்று கற்றாழை நிறைந்த நாடு. சோற்றுக் கற்றாழை, சோறு + கல் + தாழை - சோறு(சதைப்பற்று) "குமரி' என்ற பெயரும் இதற்கு உண்டு. சூரியனின் கதிர்பட்டும் வாடாத நிலையிலுள்ள மூலிகை என்பது இதன் பொருள். குமரி படர்ந்த நாடு குமரிக் கண்டம் என்றாயிற்று.

2. "நாவலங்கீரை' என்றொரு கீரை இப்பொழுதும் விளைகிறது. 
இதனைக் குப்பைக் கீரை என்கிறோம். நாவலந்தீவில் (தமிழ்நாடு) விளைந்த கீரை ஆதலால் அதற்கு நாவலங் கீரை என்று பெயர்.

3. "சாயலுச்சி வருகிறேன்' என்பார் கிராமத்துப் பெரியவர் ஒருவர். இதன் பொருளாவது உச்சிப்பொழுது சாய (மாலை) வருகிறேன் என்பதாகும். அவரோ "உச்சிசாய வருகிறேன்' என்று கூறமாட்டார். அவ்வாறு கூறினால், "தலை இல்லாமல் முண்டமாக வருகிறேன்' என்று பொருளாகிவிடும். (உச்சி - தலை). 

4. "காவோலை' - காய்ந்த ஓலை காவோலை. இன்றும் கிராமங்களில் மட்டுமே பேசக்கூடிய தமிழ்ச்சொல் இது. சங்க இலக்கியத்தில்,  "ஒலி காவோலை முள்மிடை வேலி' (நற்.38) என்று  உலோச்சனார் பாடியுள்ளார். மேற்குறித்த பாடலின் பொருளாவது, உப்பு விளையும் கழிகளையும், தோட்டங்களையும் உடையது காண்டவாயில் (தற்போது இவ்வூரின் பெயர் திருப்புனல்வாயில். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஓர் ஊர்) இதில் முற்றிக் காய்ந்த பனையோலைகளோடு (காவோலை) முட்களையும் சேர்த்து வேலியமைத்துக் காப்பர். வெண்மணற் பரப்பும் இனிய சோலைகளையும் பனை மரங்களையும் உடையது எம் ஊர் என்கிறார் புலவர்.

5.  "தட்டாமடல்' (கதவு) தட்டாமடல் எனும் சொல் கதவைக் குறிக்கும் சொல்லாகும். யாரும் வேற்றாள் வந்து எளிதில் திறவாக் கதவு என்பது இதன் பொருள். இதைக் குறுந்தொகை பாடல் (குறுந்.237) மூலம் அறியலாம்.  "பல்லோரும் தூங்குகின்ற நடு யாமத்தில் தலைவன் வலிமைமிகு யானையைப் போல் வந்தாலும் நம்மைக் கேட்டுத்தான் கதவைத் திறப்பாள். ஆயின் அவன் இப்போது வருவதில்லை. ஆதலால், எம் தலைவி சிறைபட்டனள்!' எனத் தோழி கூறுவதாய் அமைந்த பாடல் இது. 

மேலும்,  ஆவிசங்கொள்ளட்டும் - தெய்வம் படையலை (பலி) ஏற்றுக் கொள்ளட்டும்!;  அரிப்பரிக்க -  உணவு தேட (உணவு சேகரிக்க);  ஓரி, கொண்டை- ஓதி (கொண்டை);  (ஓரிமுருங்கப் பீலிசாய நல்மயில் (குறுந்.244); கேறி - கோழியானது முட்டையிட, துணையை அழைக்க, நோய்வாய்ப்பட்ட போது கேறுவது.

இதுபோன்ற ஏராளமான தமிழ்ச் சொற்கள் கிராம மக்களின் பேச்சு வழக்கிலும், சங்க இலக்கியங்களிலும் நிறைந்து காணப்படுகின்றன. இவை போன்ற பொருள் மிகுந்த, மிகுபொருட் களஞ்சியமாகத் திகழ்வது தமிழே! இவை யாவும் அழிந்து படாமல் காக்கப்பட வேண்டும்! 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com