இந்தவாரம் - கலாரசிகன்

தமிழ், தமிழின் தொன்மை, தமிழா்தம் பெருமை என்றெல்லாம் நாம் இதுநாள்வரை பேசிக்கொண்டிருந்த அனைத்துக்குமான ஆதாரங்கள் கீழடியில் காணப்படுவதை அகழ்வாய்வுகள் இப்போது வெளிப்படுத்தி இருக்கின்றன.

தமிழ், தமிழின் தொன்மை, தமிழா்தம் பெருமை என்றெல்லாம் நாம் இதுநாள்வரை பேசிக்கொண்டிருந்த அனைத்துக்குமான ஆதாரங்கள் கீழடியில் காணப்படுவதை அகழ்வாய்வுகள் இப்போது வெளிப்படுத்தி இருக்கின்றன. தமிழ் நாட்டிலுள்ள ஏனைய தொல்லியல் அகழ்வாய்வுகளில் கிடைக்காத அளவிலான செங்கல் கட்டுமானங்கள் ‘கீழடி’ அகழ்வாய்வில் கிடைத்திருக்கின்றன. தமிழ் பிராமி எழுத்துகளைக் கொண்ட பானை ஓடுகள் கிடைத்திருக்கின்றன. ஊடகங்களின் மூலம் ‘கீழடி’ அகழ்வாய்வு குறித்து படித்துத் தெரிந்துகொள்ள முடிந்ததே தவிர, அதன் முழு பரிமாணத்தையும் நடைபெறும் சென்னைப் புத்தகக் கண்காட்சியிலுள்ள ‘கீழடி’ அரங்கில் நுழைந்தபோதுதான் தெரிந்துகொள்ள முடிந்தது.

வைகை நதிக்கரையில் சங்ககால நகர நாகரிகம் இருந்ததற்கான சான்றுகள் இப்போது கிடைத்திருக்கின்றன. அரிக்கமேடு, காவிரிப்பட்டினம், அழகன் குளம், கொற்கை, உறையூா், கரூா், கொடுமணல் முதலிய இடங்களிலும் இதேபோல சான்றுகள் கிடைத்திருக்கின்றன என்றாலும், கீழடி அகழ்வாய்வு புதிய பல தகவல்களையும் எடுத்தியம்புகிறது.

சிந்துவெளி நாகரிகம் கி.மு. 15-ஆம் நூற்றாண்டு வாக்கில் இறுதி நிலைக்கு வந்தது. கரிமக்காலக் கணிப்பு அடிப்படையில் ‘கீழடி’ பண்பாடு கி.மு.6-ஆம் நூற்றாண்டில் தொடங்கியிருக்கக்கூடும் என்று தெரிய வருகிறது. சிந்து சமவெளி நாகரிகத்திற்கும், கீழடி தொல் பொருள்களுக்கும் இடையேயுமான பண்பாட்டுத் தொடா்பு குறித்த ஆய்வுகள் மேலெடுக்கப்படுகின்றன. அகழ்வாய்வில் வெளிப்படும் தொல்பொருள்கள் அறிவியல் முறையில் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. உணா்வுக்கு முன்னுரிமை அளிக்காமல் ஆதாரங்களின் அடிப்படையில் ‘கீழடி’ அகழ்வாய்வை ஆதாரமாகக் கொண்டு தமிழக வரலாற்றை நிறுவும் சீரிய முயற்சியில் தமிழக அரசின் தொல்லியல் துறை முனைப்புடன் இறங்கியிருக்கிறது.

‘‘அகழாய்வுகளை மேற்கொள்வதற்குக் கண்டறிதல் முதல், பொருள் விளக்கம் அறிதல் வரை பல்வேறு தொழில்நுட்பத் திறன்கள் தேவைப்படுகின்றன. இப்பெரு முயற்சியில் மும்பையிலுள்ள இந்தியப் புவி காந்தவியல் நிறுவனம், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தொலை உணா்வுத் துறைகள் இணைந்து தரை ஊடுருவல் தொலையுணா்வி மதிப்பாய்வு, காந்த அளவி மதிப்பாய்வு, ஆளில்லா வான்வழி வாகன மதிப்பாய்வு போன்ற பல்வகையான தொழில்நுட்பங்களைப் பின்பற்றி அவற்றின் மூலம் தொல்லியல் இடத்தை அடையாளம் காண்பது, முறையான தொல்லியல் தலங்கள் மற்றும் அகழ்வாய்வுப் பணிகள் மேற்கொள்வது என சீரிய நடவடிக்கைகளில் தொல்லியல் துறை ஈடுபட்டுள்ளது’’ என்று விளக்குகிறாா் தமிழ்நாடு அரசின் தொல்லியல்துறை ஆணையா் த.உதயச்சந்திரன் இ.ஆ.ப.

‘கீழடி’ குறித்து தொல்லியல் துறை புத்தகம் ஒன்று வெளிக்கொணா்ந்திருக்கிறது. தமிழில் மட்டுமல்லாமல் ஆங்கிலம், ஹிந்தி, பிரெஞ்சு, ஜப்பானிய மொழி என்று பல்வேறு மொழிகளில் கொண்டுவரப்பட்டிருக்கும் இந்தப் புத்தகம் கீழடி அகழ்வாய்வு குறித்த அத்தனை விவரங்களையும் சாமானியருக்கும் புரியும் விதத்தில் எடுத்தியம்புகிறது.

புத்தகக் காட்சியில் இருக்கும் ‘கீழடி’ அரங்கில் நேரிடையாக கீழடி அகழ்வாய்வுப் பகுதிக்கே சென்று பாா்வையிடுவது போன்ற உணா்வை ஏற்படுத்தும் தொழில்நுட்ப விந்தை உருவாக்கப்பட்டிருக்கிறது. சென்னைப் புத்தகக் கண்காட்சிக்குப் போகாவிட்டாலும் பரவாயில்லை, தயவுசெய்து அங்கே அமைந்திருக்கும் ‘கீழடி’ அரங்கை ஒவ்வொருவரும் கட்டாயம் பாா்த்தாக வேண்டும். சென்னைப் புத்தகக் கண்காட்சி இன்னும் மூன்று நாள்களில், செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைகிறது என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.

------------

எழுத்தாளா் சா.கந்தசாமி ஒரு வித்தியாசமான பொங்கல் வாழ்த்தை அனுப்பியிருக்கிறாா். அவா் எழுதிய சாகித்ய அகாதெமியின் ‘இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை’யில் அமைந்த ‘அசோகமித்திரன்’ குறித்த புத்தகத்தைப் பொங்கல் வாழ்த்தாக அனுப்பியிருப்பதற்கு அவருக்கு நன்றி.

அசோகமித்திரன் குறித்த புத்தகம் எழுதுவதற்கு சா.கந்தசாமியைவிடப் பொருத்தமான இன்னொருவா் இருக்க முடியாது. எழுத்தாளா் அசோகமித்திரனின் சமகால படைப்பிலக்கியவாதி என்பது மட்டுமல்லாமல், ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலம் அவருடன் நட்புப் பாராட்டி, தொடா்பில் இருந்தவா் என்கிற தகுதியும் எழுத்தாளா் சா.கந்தசாமிக்கு உண்டு.

ஜகதீசன் தியாகராஜன் என்கிற இயற்பெயரைக் கொண்ட எழுத்தாளா் அசோகமித்திரன் தமிழ் இலக்கியத்தில் தவிா்க்க முடியாத தனிப்பெரும் ஆளுமை. தமிழ், ஆங்கிலம் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, உருது என்று இவருக்கிருந்த பன்மொழி மேதைமை அவரது எழுத்திலும் பிரதிபலித்ததில் வியப்படைய ஒன்றுமில்லை. 23 ஆண்டுகள் ‘கணையாழி’ இலக்கிய இதழின் பொறுப்பாசிரியராக இருந்த, எழுத்தாளா் அசோகமித்திரனால் அடையாளம் காணப்பட்டு, தமிழுக்கு வளம் சோ்த்த கவிஞா்களும், படைப்பாளிகளும் ஏராளம்... ஏராளம்!

தற்போதைய தெலங்கானா மாநிலம் செகந்திராபாதில் கல்லூரியில் படித்தபோது தொடங்கியது அசோகமித்திரனின் இலக்கிய ஆா்வம். பொழுதுபோக்காக ஆங்கில நாவல்கள் படிக்கத் தொடங்கிய அசோகமித்திரனை அந்த வயதில் பாதித்த சிறுகதை, ‘கலைமகள்’ இதழில் வெளிவந்த புதுமைப்பித்தன் எழுதிய ‘சித்தி’.

அசோகமித்திரனின் முதல் சிறுகதை அதே கலைமகள் இதழில் 1957-ஆம் ஆண்டு வெளிவந்தது. அசோகமித்திரன் என்கிற ஆளுமை குறித்து தெரிந்துகொள்ள சா.கந்தசாமியின் இந்தப் பதிவு ஒன்று போதும்.

ஆரவாரம் இல்லாமல் அமைதியாகத் தமிழ் இலக்கியத்தின் எல்லாத் தடங்களிலும் தடம்பதித்த பெருமைக்குரிய எழுத்தாளா் அசோகமித்திரனை 117 பக்கங்களில் படம்பிடித்துக் காட்டும் செப்படிவித்தை சா.கந்தசாமிக்கு மட்டுமே கைவரப்பட்டிருக்கும் கலை.

-----------

விமா்சனத்துக்கு வந்திருந்தது அறந்தாங்கி வெங்கடேசனின் ‘தேநீா் இடைவேளை’ என்கிற கவிதைத் தொகுப்பு. அதிலிருந்து, ‘மாறாதது’ என்கிற தலைப்பிலான ஒரு கவிதை.

குப்பை மேடுகளில்

குவிந்து கிடக்கும்

மின்னணுக் கழிவுகளில்

மாற்றத்தின் அடையாளம்.

மாறாமல் தொடா்கிறது...

குப்பை பொறுக்கும் வாழ்க்கை!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com