சங்கத் தலைவியின் உணர்வு மேலாண்மை!

"வினையே ஆடவர்க்கு உயிரே! என்ற பழந்தமிழரின் வீரநிலைப் பண்பாட்டின் அடிப்படையில் காதல் தலைவன் தனது அரசனுக்காகப் போர்க்களம் செல்கிறான். தலைவனும் தமது அரசனோடு தோளுக்குத் தோள் நின்று
சங்கத் தலைவியின் உணர்வு மேலாண்மை!

"வினையே ஆடவர்க்கு உயிரே! என்ற பழந்தமிழரின் வீரநிலைப் பண்பாட்டின் அடிப்படையில் காதல் தலைவன் தனது அரசனுக்காகப் போர்க்களம் செல்கிறான். தலைவனும் தமது அரசனோடு தோளுக்குத் தோள் நின்று வீரப்போரிட்டு வெற்றி பெற்றுவிட்டான்.

அரசனோடு சென்ற படைகளில் இருந்த அவ்வூரினர் எல்லோரும் சாரை சாரையாக வெற்றிக் களிப்போடு மீள வருகிறார்கள். ஆனால், தலைவன் மட்டும் ஊர் வந்து சேரவில்லை. கலங்கிய கண்களோடு தலைவி தன் காதல் தலைவனைக் காணாமல் தவிக்கிறாள். அப்பொழுது அவ்வழியே வந்தோர், "பகை முடித்து வென்ற அரசன், ஊருக்குத் திரும்பாமல் மாற்றார் வரவினை எதிர்நோக்கிப் பாசறைக்கண் தங்கி இருக்கிறான்; உன் தலைவனும் அரசனோடு அருகிருக்கிறான்' என்று உரைக்கின்றனர்.

பகைவருக்குக் காத்திருக்கும் அரசனையும், உடனிருக்கும் தலைவனையும் ஐங்குறுநூறு (ஐங்.451) சுட்டுகிறது. ஊர் திரும்பிய வெற்றியாளர் சொன்ன செய்தியில் தலைவி கவலை கொள்கிறாள்; விநாடியில் அவள் மகிழ்கிறாள். மகிழ்ச்சிக்குக் காரணம், தலைவனின் வெற்றியும் அவனுக்கு ஊறு நேராவண்ணம் உள்ள தன் நிம்மதியுமே ஆகும். ஆனால், தலைவனின் பிரிவால் மீண்டும் கவலை அடைகின்றாள். இவ்வாறான உணர்வுப் போராட்டம் தலைவியை அலைக்கழிக்கிறது. பெண் ஒருத்தி என்னதான் துயரத்திலும் துன்பத்திலும் துடித்தாலும் தனது உணர்வுப் போராட்டத்தை வெளிப்படையாகக் காட்டுவது என்பது கூடாது. இவ்வாறான கட்டுப்பாடு சமுதாய நிலையாக மட்டுமல்ல, பெண்மையின் உணர்வுக்குமானது என்பது பழந்தமிழர் நிலைப்பாடு!

இந்த நிலைப்பாட்டுக்குப் பெண்கள் யாரும் விதிவிலக்கல்லர். மாற்றான் சிறையில் ஆற்றுதலுக்கு ஆளின்றி ராமனைப் பிரிந்திருந்த சீதை, பிரிவின் துயரத்தை, உணர்வின் போராட்டத்தை வெளிக்காட்டாமல், தன் தலைவனாம் காகுத்தன் அருள் உள்ளத்தை, நற்பண்பை எண்ணி மேலாண்மை ("ஆழ நீர்க் கங்கையம்பி கடாவிய) செய்கிறாள்.

நமது சங்கத்தமிழ் தலைவியின் நிலையும் சீதையின் துயரத்திற்குச் சற்றும் குறைந்ததல்ல. தனது துயரத்தைத் தன் தோழியிடம்கூட வெளிக்காட்டத் தயங்கும் நாணம் மிக்கவள் தலைவி. தனது உணர்வுப் போராட்டத்தையும் ஆற்றாமையையும் அடுத்தவருக்குத் தெரியாமல் மறைக்க எண்ணுகிறாள். ஆனால், முகம் பார்க்கும் தோழி முன் சில சொற்களையாவது கூற வேண்டியவளாகிறாள்.

கார்காலம் வந்துவிட்டது. நாம் காண முற்படும் ஐங்குறுநூற்றுத் தலைவி கொன்றை மலரைக் காண்கிறாள். கொத்தாக மலரும் அம்மலர் காயாகிப் பழுத்தும் விட்டது; மழையும் விடாமல் பெய்து கொண்டிருக்கிறது. அதனைக் கண்ட தலைவி, தலைவன் வருவதாகக் கூறிய குறித்த காலம் நீட்டித்தமையை உணர்ந்து, துடிக்கிறாள்.

கார்காலத்தில் பூக்கும் கொன்றைமலர் நன்றாக மலர்ந்து காய்த்துப் பழமாகிவிட்டது; பழுக்காமல் இருக்கும் கொன்றை மலர்களோ கார் பருவ மழையால் மகளிர் கூந்தல் உதிர்வது போல மரத்திலிருந்து உதிர்கின்றன எனத் தோழியிடம் உரைக்கின்றாள். அத்தோடு பேசி முடித்திருந்தால் அவள் இலக்கியத் தலைவியாக ஏற்றம் பெற்றிருக்க மாட்டாள்.

தன் தலைவனின் பெருமையை, நற்பண்பை, கொடை உள்ளத்தை எண்ணுகின்றாள். "பாணர் பெருமகன் எனத் தன் தலைவனைச் சுட்டுகின்றாள். இசைவாணர்களாகிய பாணர்களுக்கு வரையாது பொருளை வாரி வழங்குபவன் தலைவன்; அவனது வள்ளன்மையைத் தோழிக்குச் சொல்வதுபோலத் தான் நினைந்து இன்புறுகிறாள். அத்துடன், தனது கண்கள் ஒளியிழந்து பசலை தோய்ந்து இருப்பது போல உதிர்ந்த கொன்றை மலரின் இதழ்கள் உள்ளன என்றும் உரைக்கிறாள்.

"துணர்க்காய்க் கொன்றைக் குழற்பழ மூழ்த்தன
வதிர்பெயற் தெதிரியசிதர் கொடண்மலர்
மாணலமிழந்தவென் கண்போன் றவனே' (ஐங். 458)

புலவர் பேயனார் காட்டுவது தலைவனைப் பிரிந்த தலைவியின் உள்ள நிலைமட்டுமல்ல, உளவியல் தன்மைமிக்க உணர்வு மேலாண்மைச் செயல்பாடாகவும் உள்ளது எனலாம்.

மன பாதிப்பால் ஏற்படும் உணர்வுகளை நேரடியாக வெளிப்படுத்தாமலும், உடலை வேகமாகப் பாதிக்காமலும் துன்பச் சூழலை சமாளிக்கும் நடவடிக்கைகளை "உணர்வு மேலாண்மைச் செயற்பாடு' எனலாம்.

பேயனார் காட்டும் இந்தத் தலைவி, தலைவன் பிரிவால் ஏற்படும் உணர்வுப் போராட்டத்தை வெளிப்படையாகக் காட்டவில்லை; தன் இல்லத்தில் இருக்கும் கொன்றை மரத்தின் மீது ஏற்றிக் கூறுகிறாள். இவ்வாறு கூறுதலை, புறத்தேற்றம் (Projection) என்பர் உளவியலாளர். அதாவது, தன்னியக்கமாக நனவிலி மனத்தால் தன்னைச் சார்ந்து, ஆனால் கைவிடப்பட்ட மனப்போக்குகளையும், உந்துதல்களையும் புறமுகமாக்கி, வழக்கமாக வேறு ஒன்றின் மீது ஏற்றிக் கூறுதல் புறத்தேற்றம் எனும் உளநலத் தற்காப்பு இயங்கு முறையாகும்.

மேலும், முந்தைய காலத்தில் தன் காதல் தலைவன் இசைவாணர்களாகிய பாணர்களுக்கு வரையாது வழங்கிய வள்ளன்மையை எண்ணுகிறாள். மகிழ்ச்சியுடன் அதனை, "பாணர் பெருமகன்' என்று தோழியிடம் சுட்டுகிறாள்.

கடந்தகால இன்ப நிகழ்வு பற்றிப் பேசுதலைப் பின்னோக்கம் (Regression)) என்பர். ஐங்குறுநூற்றுத் தலைவி, தலைவனோடு உடனிருந்த காலத்தில் தலைவன் பாணர்களுக்குக் கொடுத்துச் சிவந்த கரத்தனாக இருந்தமையை எண்ணுகிறாள். அதாவது, தலைவனைப் பிரிந்திருந்த காலத்துப் பிரிவுத்துயரால் ஏற்பட்ட உணர்வுப் போராட்டத்தைப் புறத்தேற்றம் மற்றும் பின்னோக்கம்
முதலிய உளநலத் தற்காப்பு இயங்குமுறைகளால் மேலாண்மை செய்து கொள்கிறாள். ஆம்! சங்கத் தமிழ்த் தலைவி தனது உணர்வுப் போராட்டத்தை மேலாண்மை செய்துகொள்ளும் வல்லமை வாய்ந்தவளாக விளங்குகிறாள். நான்கு அடி ஐங்குறுநூற்றுச் செய்யுள் உணர்வு மேலாண்மை எனும் இந்த நூற்றாண்டுக் கோட்பாட்டின் இரண்டு கூறுகளை உள்ளடக்கி இருப்பதும், தமிழ் இலக்கியத்தின் பெருமைக்கும் சான்றல்லவா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com