டி.வி. சாம்பசிவம் பிள்ளையின் சித்த மருத்துவ அகராதிகள்!

நூற்றி முப்பத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து, சித்த மருத்துவ அகராதித் துறையில் வரலாறு படைத்தவர் டி.வி.சாம்பசிவம்பிள்ளை.
டி.வி. சாம்பசிவம் பிள்ளையின் சித்த மருத்துவ அகராதிகள்!

நூற்றி முப்பத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து, சித்த மருத்துவ  அகராதித் துறையில் வரலாறு படைத்தவர் டி.வி.சாம்பசிவம்பிள்ளை. சித்த மருத்துவத்தின் பெருமையை உலகுக்கு உணர்த்துவதற்காக அரும்பாடுபட்டு இவர் ஆறு தொகுதிகளில் சித்த மருத்துவ அகராதிகளைப் படைத்துள்ளார். 

தமிழகத்தில் தஞ்சைக்கு அருகிலுள்ள "கமுகஞ்சேர்ந்தங்குடி' (கம்மந்தங்குடி) என்ற ஊரைப் பிறப்பிடமாகக் கொண்ட வில்லையா மன்னையாருக்கும் மனோன்மணி அம்மையாருக்கும் 19.09.1880-ஆம் நாளில் பிறந்தவர் சாம்பசிவம்பிள்ளை. 

இவர், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சென்னைக் காவல் துறையில் காவல் உதவி ஆய்வாளராகப் (1907) பணியில் சேர்ந்து, பிறகு காவல் ஆய்வாளராகப் பணி உயர்வு பெற்றவர். 

சித்த மருத்துவத்திற்குச் சிறந்த அகராதிகள் இல்லை என்பதை கவனத்தில் கொண்டு, 1917-ஆம் ஆண்டு முதல் சித்த மருத்துவ அகராதிப் பணிகளைத் தொடங்கினார். 
அவ்வாறு தொடங்கப்பெற்ற அப்பணி அவரது வாழ்நாளின் இறுதிவரையில் (12.11.1953)  அதாவது, முப்பத்தேழு வயதில் தொடங்கப்பெற்ற அகராதிப்பணி எழுபத்து மூன்று வயது வரையில் தொடர்ந்து நிகழ்ந்திருக்கிறது.

1931-ஆம் ஆண்டில்,  அவருடைய சேமிப்புத்தொகை மற்றும் நன்செய் நிலத்தை விற்று அதில் கிடைத்த தொகை,  ஓய்வு ஊதியத்தொகை ஆகியவற்றை செலவழித்து முதல் மூன்று தொகுதிகளை அச்சிட்டு வெளிப்படுத்தியுள்ளார்.

டி.வி.சாம்பசிவம் பிள்ளையின் சித்தமருத்துவ அகராதிகளின் சிறப்பையும் அதன் பயன்பாட்டையும் நன்கறிந்த தொழில் மேதையும் அறிவியல் அறிஞருமான கோவை ஜி.டி.நாயுடுவும், அவருடைய புதல்வராகிய கோபால்நாயுடுவும் 1977, 1978-ஆம் ஆண்டுகளில் நான்கு, ஐந்தாம் தொகுதிகளை வெளியிட்டுள்ளனர். தமிழ் நாடு அரசு நிகழ்த்திய இரண்டாம் உலகத்தமிழ் மாநாட்டில் சித்தமருத்துவ அகராதியின் ஆறாம் தொகுதி வெளியிடப் பெற்றதாக அறிய முடிகின்றது.

1931-ஆம் ஆண்டில் முதல் மூன்று தொகுதிகளை வெளியிட்ட டி.வி.சாம்பசிவம் பிள்ளை, 1938-ஆம் ஆண்டில்தான் அந்த அகராதிகளுக்கு அரிய ஆங்கில முன்னுரை ஒன்றை எழுதி வழங்கினார். இம் முன்னுரை அவரது அறிவுத் திறமைக்குச் சான்றாகவும், சித்த மருத்துவத்திற்குப் பெருந்துணையாகவும் விளங்கி  வருவதாக அறிஞர் பெருமக்கள் குறிப்பிடுவர். ஏறத்தாழ 120 பக்கங்கள் கொண்ட அம்முன்னுரை சித்த மருத்துவக் கலைக் களஞ்சியமாகத் திகழ்கின்றது.

நம் மூதாதையர் கண்ட மருத்துவம் தெய்வீக மருத்துவமாகும். இத்தெய்வீக மருத்துவம் மனிதனின் படைப்பல்ல. சித்துக்கள் விளையாடி இறைவனின் அருளுக்குப் பாத்திரமான இணையில்லா மெய்ஞ்ஞானச் சித்தர்களின் படைப்பாகும். இப்படைப்பு அழியாதது என்றும், அழிக்க இயலாதது என்றும் கூறும் டி.வி.சாம்பசிவம் பிள்ளையின் கருத்தை, ஆ.இரா.கண்ணப்பர் "மூலிகை மணி' நூலில் முன்மொழிந்துள்ளார்.

பெரும்பான்மையான அகராதி நூல்கள் பொது அகராதி என்ற நிலையில் ஒரு சொல்லுக்கான பொருள்கள்தான் குறிக்கப்பட்டிருக்கும். ஆனால், சாம்பசிவம் பிள்ளையின் அகராதிகள் கலைக்களஞ்சியம்போல் ஒரு சொல்லுக்கான அனைத்து விளக்கங்களையும் கொண்டுள்ளன. சான்றுக்கு "அகண்ட வாயு' என்னும் சொல்லுக்குத் தமிழில் பல பொருளும் எழுதப்பெற்று, ஆங்கிலத்தில் இருபத்தேழு அடிகளில் விரிவான விளக்கமும் (முதல் தொகுதி, பக்கம் 127, 128) தரப்பட்டுள்ளது.

சொல்லாய்வு அறிஞர் தேவநேயப் பாவாணர் தமது அகரமுதலித் தொகுப்புக்கு இவரது அகராதியிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட சொற்களை எடுத்தாண்டுள்ளார். இச்செய்தியை அவரே குறிப்பிட்டுள்ளதோடு, சாம்பசிவம் பிள்ளையின் அகராதித் தொகுப்புகளைப் பாராட்டியும் உள்ளார். "தமிழ்த் தாத்தா' உ.வே.சாமிநாதையரும், சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரான இலட்சுமணசாமி முதலியாரும் இவரது அகராதித் தொகுப்புகளைப் பாராட்டியுள்ளனர்.

முதல் மூன்று தொகுதிகளின் கையெழுத்துப் படிகளை பிரிட்டிஷ் கவுன்சிலும், ஜெர்மன் தூதரகமும் மிகுதியான விலை கொடுத்து வாங்க முயன்றபோதும், சாம்பசிவம் பிள்ளை அதை விற்க முன்வரவில்லை. தமிழ் நாட்டின் மீதும், தமிழர் மீதும் பேரன்பு கொண்டிருந்ததாலும், மிக உயர்ந்த நாட்டுப் பற்றின் காரணமாகவும் அந்நிய நாட்டினருக்கு அவர் விற்க முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

டி.வி.சாம்பசிவம் பிள்ளையின் சித்த மருத்துவ அகராதித் தொகுப்புகளை "அகராதி' என்று கூறுவதைக் காட்டிலும், "சித்த மருத்துவக் கலைக் களஞ்சியம்' என்றே குறிப்பிடலாம். ஏனெனில், ஆறு தொகுதிகளாக எண்பதாயிரம் சொற்களோடு, ஆறாயிரத்திற்கு மேற்பட்ட பக்கங்களுடன் இவ்வகராதி அமைந்திருக்கிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com