இந்த வாரம் - கலாரசிகன் (05.07.2020)

கொவைட் -  19 தீநுண்மித் தொற்றின் தாக்கம் இப்போதைக்குக் குறையாது போலிருக்கிறது.
இந்த வாரம் - கலாரசிகன் (05.07.2020)


கொவைட் -  19 தீநுண்மித் தொற்றின் தாக்கம் இப்போதைக்குக் குறையாது போலிருக்கிறது. நண்பர்கள், உறவினர்களுக்கு ஏதாவது வந்துவிட்டால், நேரில் போய்ப் பார்க்கவோ, பேசவோ முடியவில்லை. மருத்துவமனைக்குப் போய் நலம் விசாரிக்கக்கூட முடியவில்லை.

வியாழக்கிழமை கட்செவி அஞ்சலில் வந்த செய்தியைப் படித்து நான் அதிர்ந்தேன். எழுத்தாளர் மேஜர்தாசனின் புதல்வி  அர்ச்சனா போட்டிருந்த பதிவு அது. ஐந்தாறு நாள்களுக்கு முன்பு பக்கவாதத்தால் தாக்கப்பட்டு தன் தந்தை மேஜர்தாசன் தாம்பரத்தில் உள்ள இந்து மிஷன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருந்தார். 

நாற்பது ஆண்டுகளாகத் தொடர்பு. நேரில் சென்று பார்க்க முடியாதபடி தீநுண்மித் தொற்று தடுக்கிறது. நண்பரும், பத்திரிகையாளருமான குடந்தை கீதப்பிரியனை அழைத்து விசாரித்தபோது, அவருக்கும் தகவல் வந்திருப்பதாகத் தெரிவித்தார். பத்திரிகையாளர்  துரை. ராமச்சந்திரன் தொடர்பு கொண்டு பேசியதாகவும் கூறினார். 

மேஜர்தாசன் என்கிற எஸ்.தேவாதிராஜன் "குமுதம்' ஆசிரியர் எஸ்.ஏ.பி.யின் மோதிரக் கையால் குட்டுப்பட்டுப் பத்திரிகையாளரானவர். கும்பகோணத்தில் பிறந்து, வளர்ந்து, படித்த தேவாதிராஜன் கல்லூரி நாள்களிலேயே கையெழுத்துப் பத்திரிகை நடத்தித் தனது எழுத்து வாழ்க்கையைத் தொடங்கியவர். 

"குமுதம்' வார இதழில் சேர்ந்த பிறகு அவரது கவனம் திரையுலகத்தின்பால் திரும்பியது. "மேஜர்' சுந்தர்ராஜனால் கவரப்பட்ட அவர் தனது புனைபெயரை "மேஜர்தாசன்' என்று வைத்துக் கொண்டார். சினிமா நிருபர்களில் வித்தியாசமானவர் மேஜர்தாசன். தொழில்முறை உறவை மீறி,  திரைத்துறையினரிடம் தனிப்பட்ட நட்பு அவருக்கு இருந்ததை நான் அறிவேன்.

கடந்த  ஆண்டு நாங்கள் சந்தித்தபோது அவர் எழுதிய "மனசுக்குள் மாயவலை' என்கிற சிறுகதைத் தொகுப்பையும், "சொரூபம் -  சுபாவம்' என்று இரண்டு குறுநாவல்களின் தொகுப்பையும் என்னிடம் தந்தார். அவரது "சினிமா நிருபரின் கலை உலகப் பயணம்' புத்தகம் குறித்து ஏற்கெனவே நான் எழுதி இருக்கிறேன்.

நாங்கள் தமிழ் இதழியல் உலகில் ஒன்றாகப் பயணித்தவர்கள்; பயணிப்பவர்கள்; பயணிப்போம். "நண்பா, ஓடிவந்து நலம் விசாரிக்க முடியவில்லை.  நேரில் வந்து உதவவும் வழியில்லை.  விரைவில் நீங்கள் குணமடைய  வேண்டும்.  உங்கள் தந்தை ஸ்ரீநிவாசப் பட்டாச்சார், பெருமாளுக்குச் செய்திருக்கும் கைங்கர்யங்கள் உங்களைப் பாதுகாக்காமலா போய்விடும்?' அவருக்கு உதவி செய்ய விரும்புவோர் 9444100943 என்கிற எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

*****

மயிலாப்பூர் வழியாகப் போனால், "அல்லையன்ஸ்' புத்தக நிறுவனத்துக்குப் போகாமல் இருக்க மாட்டேன். அங்கே ஸ்ரீநிவாசன் இருந்தால், குறைந்தது ஒரு மணி நேரம் அவருடன் அளவளாமல் நகர்வதில்லை. ஒவ்வொரு சந்திப்பின்போதும், ஏதாவது ஒரு குறிப்பிட்ட புத்தகத்தை  என்னிடம் தந்து, "இதை நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டும்' என்று பரிந்துரைப்பார். ஸ்ரீநிவாசன் வற்புறுத்திச் சொன்னால் அந்தப் புத்தகம் அரிய பொக்கிஷமாகத்தான் இருக்கும்.

அப்படி ஒரு முறை நான் "அல்லையன்ஸ்' ஸ்ரீநிவாசனை சந்திக்கச் சென்றிருந்தபோது, அவர் எனக்குப் பரிந்துரைத்த புத்தகம் "வாகீச கலாநிதி' கி.வா.ஜ.எழுதிய "சங்க நூற் காட்சிகள்'. தமிழ் இலக்கியம் நான் படித்ததில்லை என்பதால், சங்க இலக்கியம் குறித்த புரிதல் எனக்கு மிகமிகக் குறைவு. "இந்தப் புத்தகத்தைப் படித்தால் போதும், நீங்கள் சங்க இலக்கியத்தைப் படித்து விட்டதாகக் கருதலாம்' என்கிற ஸ்ரீநிவாசனின் பரிந்துரையை சிரமேற்கொண்டு படிக்கத் தொடங்கினேன். அவர் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை.

""பெரும்பாலான மக்கள் வயது ஏற ஏற, தன் இளமைக்காலப் பருவத்தை எண்ணி எண்ணி வியந்து மகிழ்ந்து, அந்தக் காலம் மறுபடியும் வராதா என ஏங்குவர். பணக்காரர்கள், தனக்குச் செல்வம் வந்து சேரும் முன் இருந்த காலத்தை எண்ணி எண்ணி ஏங்கி, நாம் அன்றைய நிலையில் எவ்வித மகிழ்ச்சியாக இருந்தோம், அந்த மகிழ்ச்சி இன்றைக்குக் கிடைக்காதா என்று ஏங்குவார்கள். முதியவருக்கு இளமையும் வராது; செல்வம் படைத்தவருக்குத் தனது பழைய நிலைக்குப் போகவும் முடியாது. இதுதான் இயல்பு. இந்த இயல்புதான் வாழ்க்கை. அந்த வாழ்க்கைதான் இலக்கியம்''  -   இது ஸ்ரீநிவாசன் எழுதியிருக்கும் முகவுரையில் காணப்படுகிறது.

"பயப்படாதீர்கள்' என்கிற தலைப்பில் தொல்காப்பியம்; "கவி பாடலாம் வாங்க' என்கிற தலைப்பில் மரபுக் கவிதை புனைதல்; "அழியா அழகு' என்ற நூலில் கம்பனின் கவிநயம்;  "வழிகாட்டி' என்கிற திருமுருகாற்றுப்படை விளக்கம்;  "ஞானமாலை' என்று கந்தர் அநுபூதி  -   இப்படி சாமானியனுக்குத் தமிழ் இலக்கியத்தை எடுத்தியம்பியதால்தான் அவர் "வாகீச கலாநிதி'. "தமிழ்த் தாத்தா' உ.வே.சாமிநாதையரின் நிழலாக அவர் இருந்தார் என்பதைவிட, அவரது தமிழ் வாரிசாக நம்மிடம் வாழ்ந்தார் என்பதல்லவா நிஜம்...

நற்றிணையில் 34 -  ஆவது பாடல். தலைவனின் நினைவால் தலைவி மெலிகிறாள். விவரம் புரியாமல் தாயும், செவிலித்தாயும் பூசாரியை அழைக்கிறார்கள். முருகப் பெருமானுக்குப் படையலிட்டுப் பூஜிக்கிறார் பூசாரி வேலன். "காதலன் மார்பில் அடைக்கலம் பெறும் அந்த இன்பம் நிலைக்கவில்லையே' என்கிற தலைவியின் ஏக்கத்தை, அவனது "மார்பு தர வந்த படர்மலி அருநோய்' இன்னதென்று தாய்க்கும், செவிலித் தாய்க்கும் தோழி உணர்த்துவதுதான் அந்தப் பாடல். "கடவுளானால் என்ன?' என்கிற தலைப்பில் இடம் பெற்றிருக்கும் அந்தக் கட்டுரைபோல, எத்தனை எத்தனையோ கட்டுரைகள்.

1951 -  ஆம் ஆண்டு கார்த்திகைத் திருநாளன்று வெளிவந்தது முதல் பதிப்பு. அதைத் தொடர்ந்து பல பதிப்புகளைக் கண்டுவிட்டது இந்தப் புத்தகம். அதைப் படிப்பதற்கு  எனக்கு இப்போதுதான் வேளை வாய்த்தது. இத்தனை நாளாக இதைப் படிக்காமல் இருந்த தவறுக்கு என்னை நானே நொந்து கொண்டேன்.

******

நெல்லையிலிருந்து வெளிவரும் "காணிநிலம்' தனிச்சுற்று இதழில் எஸ்.வீ.ராஜன் எழுதியிருக்கும் கவிதை "இடப்பெயர்ச்சி...!. அதிலிருந்து சில
வரிகள்:
பழகியவற்றை
பழகிய இடத்திலே விட்டு
பழகாதவற்றை
பழகிக்கொள்ள
சொல்லித் தருகிறது
இடமாற்றம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com