கோபம் மறைந்தது; நாணம் மலர்ந்தது!

கண்ணுக்கு மை தீட்டும்போது அக்கருவியைக் கண்களால் காண முடியாததுபோல், தொலைவில் இருக்கும்போது தெரிகின்ற தலைவனது 
கோபம் மறைந்தது; நாணம் மலர்ந்தது!


திருக்குறள் இன்பத்துப் பாலில் ஒரு குறள்.

        எழுதுங்காற் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
        பழிகாணேன் கண்ட விடத்து!  (1285)

"கண்ணுக்கு மை தீட்டும்போது அக்கருவியைக் கண்களால் காண முடியாததுபோல், தொலைவில் இருக்கும்போது தெரிகின்ற தலைவனது குறைகள் அவனைக் கண்டபோது, அவன் நெருங்கி அருகில் வரும்போது எம்மால் காண முடிவதில்லை' என்கிறாள் தலைவி. அதை வழிமொழிகிறது முத்தொள்ளாயிரப் பாடல் ஒன்று. "வரட்டும்... வரட்டும்... அந்தக் குடநாட்டுக்குரியவனும், வஞ்சி நாட்டை ஆள்பவனுமான வஞ்சியான்' என்று செல்லமாகக் குமுறுகிறாள் அந்தச் சேயிழை. பகைமையா, இல்லை; பருவத்திற்குச் சுவையூட்டும் காதல்... மூவேந்தர் புகழ்பாடும் முத்தொள்ளாயிரத்தில்.

"காதலை கொடுத்துவிட்டு,  என் கண்ணையும் மனத்தையும் கலங்க வைத்துவிட்டு கவலைப்படாமல் அரண்மனைக்குப் போய்விட்டாரே அந்த வஞ்சிக்கோமன், புரவி ஏறி பவனி வரட்டும் என்ன செய்கிறேன் பாரீர்' என்று தலைவன் மீது கோபம் வர, அதனால் ஊடல் கொண்டு, அருகிலுள்ள தோழியர்களெல்லாம் அறியுமாறு ஆர்ப்பாட்டம் விளைவித்தாள், ஒளிபொருந்திய நகையணிந்த அந்தப் பெண்.

ஊர்ப்பவனி வந்துவிட்டான் சேரன். உரைத்தபடி கோபம் கொண்டாளா அந்தப் பெண்? தோழியர்கூட எதிர்ப்பார்த்திருப்பர் தோகையாள் கோபம் கொண்டு, அமர்க்களம் செய்வாளென்று... ஆனால், அவளோ மன்னனைப் பார்த்தாள்; பாவைக்குரிய நாணம் பற்றிக் கொண்டது.  கோபத்தை, நாணம் அடக்கிவிட்டது. துடுக்காகப் பேசியவள் "நா' படுத்துவிட்டது. அவனைப் பார்த்த மறு நொடியே ஊடல், கோபமெல்லாம் காணாமல் போனது. இமை தூக்கி அருவி நீர்போல் இரைச்சலிட்டவள், இமை இறக்கி கிணற்று நீர்போல் அமைதியாகி விட்டாள்.

        "வருக! குடநாடன் வஞ்சிக்கோமான் என்று
        அருகலர் எல்லாம் அறிய ஒருகலாம்,
        உண்டாயிருக்க அவ்ஒண்டொடியாள் மற்றவனைக்
        கண்டாள்; ஒழித்தாள் கலாம்!'        (முத் -  18)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com