தேவேந்திரநாத பண்டிதரின் வைத்தியக் குறள்!

உலகில் தற்போது பலரும், பலவிதமான நோய்களுக்கும்,  நோய்த் தொற்றுகளுக்கும் ஆளாகி வருவதைப் பார்க்க முடிகிறது.
தேவேந்திரநாத பண்டிதரின் வைத்தியக் குறள்!

உலகில் தற்போது பலரும், பலவிதமான நோய்களுக்கும்,  நோய்த் தொற்றுகளுக்கும் ஆளாகி வருவதைப் பார்க்க முடிகிறது. இவற்றையெல்லாம் நாம் நாட்டு மருந்துகளால் போக்க முடியும் என்பதை அன்றைய நாட்டு மருத்துவர்களும், சித்தர்களும் கூறியிருக்கின்றனர். அதை முறைப்படிக் கடைப்பிடித்தால் ஆரோக்கியமான வாழ்க்கையை நாம் பெறமுடியும். பழைமையான அரிய மருத்துவ நூல்கள் பல  இன்றைக்கும் மறுபதிப்பு செய்யப்படாமல் இருக்கின்றன. 

அத்தகைய ஓர் அரிய மருத்துவ நூல்தான் கெழுமணவை சித்திரக்கவி தேவேந்திரநாத பண்டிதரால் இயற்றப்பட்ட 
"வைத்தியக்குறள்'!  1936 -  ஆம் ஆண்டு, எட்டு அணாவில் வெளிவந்திருக்கும் இந்த "வைத்தியக்குறள்' நூல்,  பல நோய்களுக்கான மருத்துவக் குறிப்புகளை 108  குறள் வெண்பாக்களையும்,  இக்குறள்களுக்கு இணையாக 108 பழமொழிகளையும், அதற்கான விளக்கத்தையும் ஒருங்கே கொண்டிருப்பதுதான் இந்நூல் தனிச்சிறப்பு.

தேவேந்திரநாத பண்டிதர் தமது முகவுரையில், ""பதிணென் சித்தர்களா லியற்றிய பற்பல பாடல்களிலுஞ் சிற்சில செய்யுட்களைச் சேர்த்து சுலபமாயும், அதிவேகமாயும் அவ்வவ்வனுபோக முறைகளை ஒன்றாய்த் திரட்டி அகரவர்க்குமாய் 108 -  செய்யுள்களில் சிறிய புத்தகமாய்ச் செய்து இந்நூலிற்கு வைத்தியக்குறளென நாமகரணஞ்சூட்டி இதிலொவ்வொரு சீருக்குந் தனித்தனி முறைகளைப் பிரயோகித்து அதற்கு நேராய் பழமொழிகளையும் புகட்டி சாராசாரமா அவிழ்தானு போக சாரத்தை தக்கபடியமைத்து உலோகோபகாரமாய் எல்லோரு முபயோகிக்கும்படி இதில் எனதனுபோக முறைகளை யெடுத்துக்கூறியதில், நமது தேசப் பரிகாரிகளுக்கும் இன்னு மற்றவர்களுக்கும் வெகு நன்மையைக் கொடுக்குமென இதை யியற்றலாயினேன். அன்றியும் இம்முறைகளைப் பிசகாது கைவல்யமாய் அனுபோகப்படுத்து மியாவர்க்கும் தத்தம் கொள்கைக்கேற்ற பலன்களை யளிக்குமென்பதென் கருத்தாதலால் பல சமயத்தவர்களும் இதை ஏற்றுக்கொள்வார்களென மிகவும் நம்புகின்றனன்'' என்கிறார். 

"பிணியைக் கறுக்கிப் பீடையகற்றிடு
மணியாம் வைத்தியக் குறள்'

என்று தொடங்குகிறது காப்புச் செய்யுள். முதல் குறளில்,

"கடுக்காயைத் தூள் செய்து கரிசலாங்கண்ணிச் சாற்றில் ஆள் தூண்டிவிரல் நடுவிரல் இரண்டையும் அதிற்றோய்த்து அதன்பின் முன் கடுக்காய்த்தூளிற் றொட்டு உண்ணாக்கிற் புகும்படி அரக்கித் தேய்க்க, கபமானது கோழை கோழையாய் வந்துவிழும். மறுபடியும் இவ்வாறே நாலைந்து ஆவர்த்தி தேய்க்கவும். இது காயகர்ப்ப விதியாலொன்று' என்று கபம்  நீங்குவதற்கான  மருத்துவக் குறிப்பைச் சொல்வதுடன்,  "அரிவையர் முலைப்பாலருந்த வூன்சித்தி' என்கிற பழமொழியைக் கூறி, இதற்கு "மாதர்கள் முலைப்பாலை தினந்தோறு முண்டுவரத் தேகமானதில் வலுவைத்தரும்' என்கிறார்.

இரண்டாவது குறளில், 
"ஆப்பால் முந்திரிபருப்ப திற்கற்கண் டிம்மூன்றி
ராப்பா லுண்தாது வலுவாம்'

"பசும்பாலில் முந்திரிப் பருப்பையும் கற்கண்டும் சேர்த்து இம்மூன்றையும் இரவினில் மாறாது வுண்டுவரவும், தாது வலுவைத்தரும், போகமதிகரிக்கும்படிச் செய்விக்கும், தேகம் குளிர்ச்சியாகும்' என்றும்;  இதற்கு, "ஆவாரந்தழையும் ஆபத்துக்குதவும்' என்ற பழமொழியைத் தந்திருக்கிறார். நீரிழிவு நோய்க்கு இரண்டு குறள்களைத் தந்திருக்கிறார். (பா.10, 68). 

ஓட்டியிடித் தென்னுட் பனைவெல்லத்தில்
நாட்டிடு நீரிழிவு நலம் (11)

"எள்ளு ஆழாக்கில் கல்மண்ணில்லாது நோம்பி அதில் பனைவெல்லஞ் சேர்த்து இடித்து காலை மாலை இரண்டு வேளையும் எலுமிச்சம்பழவீத முட்கொண்டுவரவும் நீரிழிவு சுவஸ்தமாகும். இச்சாபத்தியம் ஒருவேளை நீரைக்கட்டிவிடின் நாட்டுச் சர்க்கரை யுட்கொள்ளவும் நீர்தாராளமா யிறங்கும்' என்கிறார். அடுத்து,

நீரிழிவுக் கல்மதமும் நிகழ்கொன்றைப் பட்டையா
வாரந் தூள்காச்சியே யுண் (68)

கல்மதம், கொன்றைப்பட்டை, ஆவாரந்தூள் மூன்றையுங் காய்ச்சி ஒருவாரம் இருவேளையு முட்கொண்டு வரவும், நீரிழிவு நின்றுவிடும். இச்சாபத்தியமாயிருக்கவும் என்கிறார்.

இவ்வாறு எலும்புருக்கி நோய் (3), ஊழி
பேதி(வாந்திபேதி -  6), எலிக்கடி (9),  நாக்குப்பூச்சி விழ (13), காது நோய் (18), காமாலை (20), நளிர் சுரம் (21), இருமல் (24), கண் நோய்(30) சொரி (31),  பித்த சோகை (35),  கல்லடைப்பிற்கு (34) தலைவலி (40), காய்ச்சல் (55), மார்புச் சளி (61) என 108 மருத்துவக் குறிப்புகளைத் தந்திருக்கிறார். 

இந்நூலை யாரேனும் மறுபதிப்பு செய்து சித்த மருத்துவ உலகிற்கு வழங்கினால், உலக மக்கள் பெரிதும் பயன்பெறுவர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com