பாசுரங்கள் பகரும் புதுச் செய்திகள்!

இதிகாச, புராண, பாகவதக் கதைகள் வரலாற்றுக்கு முற்பட்ட காலந்தொட்டே, நம் பாரத தேசம் முழுவதும் பரவியிருந்தது என்று அறிஞர் பெருமக்கள் கருதுவர்.
பாசுரங்கள் பகரும் புதுச் செய்திகள்!


இதிகாச, புராண, பாகவதக் கதைகள் வரலாற்றுக்கு முற்பட்ட காலந்தொட்டே, நம் பாரத தேசம் முழுவதும் பரவியிருந்தது என்று அறிஞர் பெருமக்கள் கருதுவர். இராமாயணம், மகாபாரதம், பாகவதக் கதைகள் தமிழ் மண்ணுக்குப் புதிதல்ல. ஆயினும் அனைவரும் அறிந்த செய்திகளினின்றும் சற்றே வேறுபட்ட, பலரும் அறிந்திராத செய்திகளை ஆழ்வார் பாசுரங்களில் காணலாம். 

ராமனின் முடிசூட்டு விழாவைத் தடுத்து நிறுத்துமளவிற்குக் கூனி (மந்தரை), ராமன் மீது கொண்ட வெறுப்புக்குக் காரணம் ஆதிகாவியத்தில்கூட சொல்லப்படவில்லை. ஆனால், கம்பர் இதற்கு விடையளிக்கிறார். சிறுவனாக இருக்கும்போது, ராமன் "விளையாட்டு வில்லைக்' கொண்டு, களிமண் உருண்டைகளைக் கூனியின் முதுகில் தெறிப்பானாம். அதனால் ஏற்பட்ட வலியே, மனவருத்தமே, மந்தரையின் மனத்தில் ராமன் மீது வெறுப்பை உண்டாக்கியிருக்கலாம். இந்த நிகழ்வை நம்மாழ்வார் தம்முடைய திருவாய்மொழிப் பாசுரத்தில்,

"மானேய் நோக்கி மடவாளை
     மார்வில் கொண்டாய் மாதவா!
கூனே சிதைய உண்டைவில்
     நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா!' (2773)

என்று பாடுகிறார். ஆதிகாவியத்திலும் இடம்பெறாத அரிய செய்தியை நம்மாழ்வார் பாசுரத்தின் மூலம் அறிந்துகொண்ட கம்பர், தம்முடைய ராமகாதையில் தக்க இடத்தில் அதை இணைத்துக் கொண்டார்.

இலங்கைக்கு அணை (சேது) கட்டப்படுகிறது. வானர சேனைகள் பெருங்கற்பாறைகளைக் கொண்டு கடலுக்கு நடுவே அணைகட்ட முற்படுகின்றன. அப்பொழுது சேதுக் கரையில் இருந்த அணில் தன்னால் இயன்ற உதவியைச் செய்ய மனங்கொண்டது. கடல் நீரில் தன்னை முழுமையாக நனைத்துக்கொண்டு கடற்கரை மணலில் உருண்டு புரளும். தன் உடல் முழுவதும் ஒட்டிய மணலை, அணைப் பகுதிக்குச் சென்று, தன் உடம்பை உதறி மணலை உதிர்க்கும். இச்செய்தியைத் தொண்டரடிப் பொடியாழ்வார் தம்முடைய திருமாலையில் (27),

"குரங்குகள் மலையை நூக்கக் 
    குளித்துத்தாம் புரண்டிட்டோடி
தரங்க நீரடைக் கலுற்ற 
    சலமிலா அணிலும் போலேன்'

என்று பாடுவார். கம்பர் இதைப் பயன்படுத்திக் கொள்கிறார். ஆதிகாவியமான வால்மீகி இராமாயணத்தில் இச்செய்தி இடம்பெறவில்லை.

இராவணனால் சிறைப் பிடிக்கப்பட்ட சீதை, அசோகவனத்தில் இருக்கிறாள். கடல் தாவி இலங்கை வந்த அனுமன், சீதையைச் சந்தித்து விடுகிறான்; ராமன் சீதையிடம் கூறுமாறு சொல்லியனுப்பிய அடையாளங்களை வரிசையாகப் பட்டியலிடுகிறான்.

நாம் அறியாத ஒன்றைப் பெரியாழ்வார் திருமொழியில் காணலாம். "அனுமன்  -   சீதை' சந்திப்பு நிகழ்வைக் கூற வந்த பெரியாழ்வார்,

"எல்லியம் போதினி திருத்தல்
    இருந்ததோர் இடவகையில்
மல்லிகைமாமாலை கொண்டு அங்கு
     ஆர்த்ததுவும் ஓர் அடையாளம்'

என்று பாசுரமிடுகிறார். ராமனும் சீதையும் தனித்திருக்கையில், அன்பு மிகுதியால் ராமனை மல்லிகை மலர்மாலை கொண்டு சீதை கட்டிப் போட்டதாக ராமன் கூறுகிறான். அனுமான் வாயிலாக வெளிப்படும் இந்த அடையாளச் செய்தி வால்மீகி இராமாயணத்திலும் இல்லை; கம்பராமாயணத்திலும் இல்லை.

கண்ணனின் பால சேஷ்டிதங்களை (அறியாப் பருவ பிள்ளை விளையாட்டு) ஸ்ரீமத் பாகவதம் சுவைபட விவரிக்கிறது. ஆய்ப்பாடித் தெருவில், கண்ணன் பிற குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருக்கிறான். அப்பொழுது விளையாட்டாக "மண்ணை' அள்ளித் தன் வாயில் கண்ணன் போட்டுக் கொள்கிறான். பலராமன் உட்பட பிற பிள்ளைகள் யசோதையிடம் சென்று இச்செய்தியைக் கூறுகின்றனர்.    அங்கு வந்த யசோதை, கண்ணனை அதட்டி அவன் வாயைத் திறக்கச் சொல்கிறாள். கண்ணனும் தன் வாயைத் திறக்க, யசோதையின் கண்களுக்கு அண்ட சராசரங்களும் தெரிந்தன என்று ஸ்ரீமத் பாகவதம் விவரிக்கிறது. ஆனால், பெரியாழ்வார் திருமொழியில் இந்த நிகழ்வு முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலையில் நிகழ்ந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கைக்குழந்தைப் பருவத்தில், கண்ணனை யசோதைப் பிராட்டி தன் கால்களில் கிடத்திக் குளிப்பாட்டுகிறாள். பிற பெண்டிர்களும் அவளுக்கு உதவி செய்கின்றனர். கண்ணனின் பிஞ்சு நாவை, சிறு மஞ்சள் துண்டு கொண்டு யசோதை வழிக்கிறாள். அதற்காகக் கண்ணபிரானின் பிஞ்சு வாயை மெதுவாக யசோதை திறக்கிறாள். அப்பொழுது யசோதையின் கண்ணுக்கும், அங்கு நின்ற பெண்டிருக்கும் ஈரேழ் உலகங்களும் தெரிந்தன என்று பெரியாழ்வார் பாசுரமிடுகிறார்.

"கையும் காலும் நிமிர்த்துக் கடாரநீர்
பைய ஆட்டிப் பசுஞ்சிறு மஞ்சளால் 
ஐயநா வழித்தாளுக்கு அங்காந்திட
வையமேழும் கண்டாள் பிள்ளை வாயுளே.
வாயுள் வையகம் கண்ட மடநல்லார்
ஆயர்புத்திரன் அல்லன் அருந் தெய்வம்
பாய சீருடைப் பண்புடைப் பாலகன்
மாயனென்று மகிழ்ந்தனர் மாதரே' 
(3 -  10 -  2)

இச்செய்தி நம்மில் பலரும் அறிந்திராத ஒன்று. இவ்வாறு ஆழ்வார் பாசுரங்களில் நாம் அறிந்திராத செய்திகள் ஏராளமாக உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com