திறமான புலமையெனில்...!

பிறமொழி யாப்பு வகையைக்கூடத் தமிழின் இலக்கண மரபு வழுவாமல் நமக்கு ஆக்கியளித்துள்ளார் பரிதிமாற் கலைஞர்.
திறமான புலமையெனில்...!

மகாகவி பாரதியின், ""பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்'' என்கிற இந்த ஆதங்க அறைகூவல் நிச்சயம் பரிதிமாற் கலைஞரின் செவிவழிப் புகுந்து சிந்தையில் தைத்திருக்க வேண்டும். அன்னை மொழியாம் தமிழ்ப் புலமையுடன் ஆங்கிலப் புலமையும் ஆழமாகப் பெற்றிருந்த பரிதிமாற் கலைஞர், அக்காலத்தே ஆங்கில மொழியில் புகழ்பெற்று விளங்கிய "சானெட்' என்னும் யாப்பு வகையை நம் தமிழ்மொழியில் அறிமுகம் செய்துவைக்க ஆசைப்பட்டார்.

இந்த யாப்பு வகையும்கூட இத்தாலி மொழியின் "Sonetto''  என்னும் "பா' வகையைத் தழுவியது என்று ஆய்வாளர்கள் கூறுவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அந்நாளில் தமிழ்ப் பண்டிதராக விளங்கிய ந. பலராம் ஐயர், இந்தச் செய்யுள் வகையின் இலக்கணத்தைப் பின்வருமாறு விளக்குகிறார்:

""ஆங்கிலத்தில் ஒரேவொரு விஷயத்தைப் பற்றிப் பதினான்கடி பெற்றதாய் - செய்யுளின் முதல், இடை, கடையென்னும் முப்பகுதிகளிலும் முறையே தோற்றுவாய், வளர்ச்சி, முடிவு பேறு என்னும் மூன்றும் விளங்குவதாய் வரையப்படும் ஒருவகைக் கவிக்குச் "சானெட்' என்பது பெயர்''. 

ஆங்கிலப் பெருங்கவிஞர்களாக விளங்கிய ஸ்பென்ஸர், மில்டன், ஷேக்ஸ்பியர் போன்றோர் பாடியுள்ள இவ்வகையான தனிச் செய்யுள்கள் பற்பலராலும் பாராட்டப்பட்டதைக் கண்டு பரிதிமாற் கலைஞர் அந்தப் பாவகை நமது செந்தமிழுக்குச் செழுமை சேர்க்கும் என்று எண்ணியிருக்க வேண்டும். அதனால் கடவுள், மலை, கடல், அருவி எனப் பல்வேறு வகையான தலைப்புகளில் 41 தனிப்பாடல்களை இயற்றினார். அப் பாடல்களின் தொகுப்பு "தனிப் பாசுரத் தொகை' (எ புக் ஆஃப் தமிழ் சானெட்) என்னும் நூலாக 1.8.1901-இல் முதல் பதிப்பைக் கண்டது.

இந்தப் பிறமொழி யாப்பு வகையைக்கூடத் தமிழின் இலக்கண மரபு வழுவாமல் நமக்கு ஆக்கியளித்துள்ளார் பரிதிமாற் கலைஞர். அந்தப் பாடல்கள் 14 அடிகள் என்னும் அளவில் அமைந்த நேரிசை ஆசிரியப்பாக்களாகும். ஆங்கில "சானெட்' கவிதைகள் அங்க இலக்கணமாக அடியிறுதி எதுகைகளோடு (இயைபுத் தொடை) அமைவன. ஆனால்  பரிதிமாற் கலைஞர், "அகவற்பா'வில் இன்னோசை அமைவதற்காக அடி முதல் எதுகை அமைப்பை எடுத்தாண்டுள்ளார்.

பரிதிமாற் கலைஞர் தமது புத்தாக்கப் படைப்பின் முதற்பதிப்பு முன்னுரையில் இந்த நூலை இயற்றியமைக்கான காரணத்தைப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

""ஆங்கில நூல் பயிற்சியுடைய தமிழ் மக்கள் தமிழ் மொழியைப் பெரிதும் கவனித்தல் இன்றிக் கைசோர விடுகின்றனர் எனப் பலரும் கூறும் வசை மொழி எம் செவிவழிப் படப்படலும், மனம் பொறேம். புதுமை வழியில் ஏதேனும் செய்ய வேண்டும் என்று புகுந்தேம்...'' (கட்டுரையில் உள்ளபடி)

இப்புதுமை நூலைப் பொருத்தவரை இன்னுமொரு வியப்பான செய்தி என்னவென்றால், அதுவரை வி.கோ.சூரியநாராயண சாஸ்திரியாக அறியப்பட்டவர் தமது பெயரை, "பரிதிமாற் கலைஞர்' என்று புனைந்து கொண்டதே இந்தத் தனிப் பாடல்களை "ஞான போதினி' என்னும் இதழில் வெளியிட்ட போதுதான்! அதற்கு அவர்கூறும் காரணம், சுவையானது மட்டுமன்று; புதிய படைப்புகளை ஆள் பார்த்து விமர்சனம் செய்யும் இலக்கிய உலகின் எதார்த்தத்தைத் தோலுரித்துக் காட்டுவதாகவும் உள்ளது. அதனை அவரது வாக்கு மூலத்தின் வாயிலாகவே கேட்போம்:

""இப் பாசுரங்களில் சில புதுக் கருத்துகள் காட்டியிருக்கின்றமை பற்றி அஞ்சுவேம். எமது மெய்ப்பெயரின் வெளியிடாது, "பரிதிமாற் கலைஞன்' என்னும் புனைவுப் பெயரின் வெளியிடுவே மாயினேம். அன்றியும் நன்னூலொன்று செய்தானது புகழின்மையால் இகழப் பட்டொழிதலும் புன்னூல் ஒன்று செய்தானது உயர்ச்சியால் சாலவும் புகழப்பட்டிலங்கலும் நாடொறும் காண்டலின், இந்நூலைப் பற்றிய தமிழ் மக்களின் உண்மை மதிப்பு இனைத்து என்றுணர வேண்டியும் அவ்வாறு செய்ய விரும்பினேம்...''  (இனைத்து-இப்படிப்பட்ட, இத்தனை, இவ்வளவு).

பரிதிமாற் கலைஞரின் தமிழ் புத்தமுதாகிய "தனிப் பாசுரத் தொகை'யின் சுவையும் மணமும் தமிழ்கூறும் நல்லுலகில் மட்டுமன்று; ஆழ்கடல் கடந்து ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் வரை பரவியது. பரிதியின் படைப்பின் மூலம் புதியதொரு பரிமாணத்தில் தமிழைக் கண்ட ஜி.யு.போப் பாதிரியார் பூரிப்பும் புளகாங்கிதமும் அடைந்தார். 

வி.கோ.சூ.வின் புதுமைப் புலமையை வியந்து போற்றிய ஜி.யு.போப்,  தனிப் பாசுரத் தொகையின் 41 நற்றமிழ்ப் பாக்களையும் ஆங்கில சானெட்டுகளாக மொழிமாற்றம் செய்து,  பரிதிமாற் கலைஞருக்கு அனுப்பி வைக்கிறார். பரிதிமாற் கலைஞர் அந்தப் பாடல்களையும் தனிப் பாசுரத் தொகையோடு இணைத்து, ந.பலராம ஐயர் குறிப்புரையோடும் "தனிப் பாசுரத் தொகை' (A Book of Tamil Sonnets with English Echoes and Notes) 1933-ஆம் ஆண்டில் இரண்டாம் பதிப்பைக் கண்டது.

இந்நூலுக்கு ஜி.யு.போப் தந்திருக்கும் அணிந்துரையில், ""இப்புதுப் புனைவு, தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு வனப்பான சாதனை! இந்நூற் பாடல்களில் ஒவ்வொரு அடியிலும் கவித்துவம் முற்றும் ஓங்கி நிற்கிறது. ஏற்கெனவே தொன்மையான இலக்கியச் செல்வங்களால் செழித்துச் சிறந்து நிற்கும் செந்தமிழ்ச் சரஸ்வதி, கால மாற்றங்களுக்கு ஏற்ப இதுபோன்ற புதுமைகளை பூண்டு, மேலும் பொலிவுறுவாள்'' என்று புகழ்ந்துள்ளார்.

திருக்குறள், திருவாசகம், நன்னூல், நாலடியார் முதலிய தன்னேரில்லாத் தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி.யு.போப் பாதிரியாரால் பரிதிமாற் கலைஞரின் தனிப் பாசுரத் தொகையும் மொழிபெயர்க்கப்பட்டதை அறியும்போது, நூலின் தரமும், நூலாசிரியரின் தகுதியும் நன்கு விளங்குகிறது.
""திறமான புலமையெனில் வெளிநாட்டோர் அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்'' என்று மகாகவி பாரதி வகுத்த அளவுகோலுக்குப் பரிதிமாற் கலைஞர் முற்றிலும் பொருந்தி நிற்கிறார்.

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com