இரவாது வாழ்ந்த இராமலிங்கர்!

ஒருமுறை கந்தசாமி முதலியார், அருட்பிரகாச வள்ளலாரை அணுகி தன் வறுமை நிலையை விளக்கி, "இங்குள்ள செல்வர்கள்பால் என்னைக் குறித்துத் தாங்கள் ஒரு சொல் உதவினால் (கடிதம் எழுதித் தந்தால்) என் இல்லாமை எல்லாம் இல்ல
இரவாது வாழ்ந்த இராமலிங்கர்!


ஒருமுறை கந்தசாமி முதலியார், அருட்பிரகாச வள்ளலாரை அணுகி தன் வறுமை நிலையை விளக்கி, "இங்குள்ள செல்வர்கள்பால் என்னைக் குறித்துத் தாங்கள் ஒரு சொல் உதவினால் (கடிதம் எழுதித் தந்தால்) என் இல்லாமை எல்லாம் இல்லாது ஒழியும்! எனது வறுமை நோய் அகலும்!' என வேண்டினார்.

"பொருளிலே உலகம் இருப்பதாதலினால்
    புரிந்துநாம் ஒருவர் பால் பலகால்
மருவினால் பொருளின் இச்சையால்
    இங்ஙன் மருவுகின்றான்! எனக்கருதி
வெருவுவர்! எனஅஞ்சி எவ்விடத்தும்
    மேவிடன் என்பதை நீ அறிவாய்!'
என வள்ளலார் கூறி, "நம்மை இறைவன் காப்பான்! பிறரிடம் இரவுரை கூறல் இழிவு!' என இனிது மொழிந்தார்.

உலக நிலையைத் தனது அனுபவத்தோடு பொருத்திவைத்து இதில் வள்ளலார் உரைத்திருக்கும் அழகை ஊன்றிப் பார்க்க, "புலவர்கள் என்றால் பொருளைக் கேட்பர் எனும் பழிநிலை மாறி, மானமும் மதிப்பும், மேன்மையும் எய்தி கற்றறிந்த கவிராயர் விளங்க வேண்டும்' எனும் உயர்நிலை அடைய வேண்டும் என்பது வள்ளலாரின் விழைவு.

ஆனால் சில நாள்கள் கழித்து,  கந்தசாமி முதலியார் மறுபடியும் வந்து "தமக்கு உதவி செய்யுமாறு ஒரு சீட்டிலாவது செல்வர் சிலருக்கு எழுதித்தர வேண்டும்' என்று தொழுது வேண்டினார். அதற்கு வள்ளலார் உறுதி தோன்ற உரைத்த கவியொன்று திருவருட்பா மூன்றாம் திருமுறையில் உள்ளது.

"ஏட்டாலும் கேளயல் என்பாரை
    நான்சிரித்து என்னை வெட்டிப்
போட்டாலும் வேறிடம் கேளேன்;
    என் நாணைப் புறம் விடுத்துக்
கேட்டாலும் என்னை உடையானிடம்
     சென்று கேட்பேன்! என்றே
நீட்டாலும் வாயுரைப் பாட்டாலும்
    சொல்லி நிறுத்து வனே!'
"இறந்துபடினும் இரந்துபடலை மறந்தும் எண்ணலாகாது' என எவர்க்கும் அருட்பிரகாச வள்ளலார் உணர்த்தி நின்றார்.

"ஏட்டால்கூட எவரிடமும் (எழுதிக்) கேட்க மாட்டேன்; எது வேண்டுமானாலும் இறைவனிடம்தான் கேட்பேன்' என்று பொருள்படும்படி இப்பாடலை  எழுதிக் கொடுத்துவிட்டார் வள்ளலார்.

திருக்குறளில் "இரவச்சம்' எனும் அதிகாரத்தில் (அதி.107) உள்ள குறட்பாக்களுக்கு எடுத்துக்காட்டாக அருட்பிரகாச வள்ளலார் விளங்குகிறார். பெருங்கருணையாளராக இருந்தும் "இரவு' நிலையில் எவர்பொருட்டும் சிறிதும் இறங்காமல், 

"ஆவிற்கு நீரென் றிரப்பினும் நாவிற்கு இளிவாம்' (குறள்.1016) என்பதை உலகம் காண இவர் உணர்த்தினார். அதாவது, "தனக்கென்றன்றி கிழட்டுப் பசுவுக்கென்று குடிநீர் இரத்தலினும் ஒருவனது நாக்குக்கு இழிவு பிறிதில்லையாம்!' என்கிறது திருக்குறள்!

- "எதிரொலி' எஸ். விசுவநாதன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com