மீனாட்சி அம்மாளின் வழிநடை உப்புமா பாட்டு!

தென்மதுரை மீனாட்சி அம்மாள் என்பவரால் இயற்றப்பட்டு, பெ. ஆறுமுக முதலியாரால் சென்னை சூளை பெரியநாயகியம்மன் அச்சகத்தில் 1920-ஆம் ஆண்டு பத்தாவது பதிப்பு கண்டிருக்கிறது "வழிநடை உப்புமா பாட்டு' என்ற நூல். இதன
மீனாட்சி அம்மாளின் வழிநடை உப்புமா பாட்டு!


தென்மதுரை மீனாட்சி அம்மாள் என்பவரால் இயற்றப்பட்டு, பெ. ஆறுமுக முதலியாரால் சென்னை சூளை பெரியநாயகியம்மன் அச்சகத்தில் 1920-ஆம் ஆண்டு பத்தாவது பதிப்பு கண்டிருக்கிறது "வழிநடை உப்புமா பாட்டு' என்ற நூல். இதன் விலை ஓரணா.

இந்நூல் வழி அறியத்தக்க இன்றியமையாத செய்திகள் வருமாறு:
* இந்நூலின் ஆசிரியர் மீனாட்சி அம்மாள் தென் மதுரையைச் சேர்ந்தவர் என்பதை நூல் முகப்புரையில் உள்ள "தென்மதுரை மீனாட்சியம்மாளால் இயற்றப்பட்டு' என வரும் தொடரால் அறிய முடிகிறது.

*   சென்னையில் உள்ள பெரியநாயகி அம்மன் அச்சகத்தில், சூளை என்ற இடத்தில் பெ.ஆறுமுக முதலியாரால் பதிப்பிக்கப்பட்டது என்ற குறிப்பும் காணப்படுகிறது.

*   இக்கட்டுரைக்கு அடிப்படையான பதிப்பு 1920-இல் வெளியிடப்பட்ட 10-ஆவது பதிப்பு. எனவே, 1900 வாக்கிலேயே முதல் பதிப்பு வெளிவந்திருக்கலாம்.

*  5-ஆம் ஜார்ஜ் ஆண்ட காலம் (1910-1936) சென்னை இராஜதானி என்பவற்றுடன் "எழும்பூர்' என்று நிகழ்விடம் குறிக்கப்பட்டுள்ளது.

இந்நூல், முதலாவது கட்டம் முதல், பன்னிரண்டாவது கட்டம் (வரை) எனப் பன்னிரு கட்டங்களாகப் பகுக்கப்பட்டிருக்கிறது. இப்பன்னிரண்டு கட்டங்களும் சொற்கள், அலங்காரம் முதலான வேறு வேறு மெட்டுகளில் படைக்கப்பட்டுள்ளன.  "மெட்டு' என்ற பெயரீடு இப்பாடல்கள் இசை நயத்துடன் பாடப்பட வேண்டும் என்ற குறிப்பை உணர்த்துகின்றது.

"வழிநடை உப்புமா பாட்டு' என்ற கவிதை நூல் புதுமையான தலைப்பில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இக்கால கட்டத்தில்,  "இட்டிலிக்கும் உப்புமாவுக்கும் சண்டை; காப்பிக்கும் பழையதுக்கும் சண்டை; தேத்தண்ணீர் மத்தியஸ்தம், சம்பந்திக்கும் மாப்பிள்ளைக்கும் ஏசல், சம்பந்திக்குச் சமையல் செய்யும் அப்பளப் பாட்டு, பாரிஜாத நாடகக் கும்மியும் ஸ்ரீரங்கநாதன் சந்நிதியில் திருட்டுப்போன கும்மியும்' எனப் புதுமையான தலைப்புகளுடன் வேறு சில நூல்களும் வெளிவந்துள்ளன.   

ஐந்தாம் ஜார்ஜ் துரை வாழ்ந்த, ஆங்கிலேயர் காலத்தில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. அக்காலத்து வக்கீல் குடும்பப் பின்னணி இதில் பதிவாகியுள்ளது. சமையல் செய்பவன் குப்பையன். சென்னைப் பட்டணப் பணக்காரர், தம் மனைவியிடம் ஏவி, அவள் குப்பையனை சமையல் செய்யச் சொல்வதுபோல அமைந்துள்ளது.
"உப்புமா கிண்டச் சொல்லடி
ஒய்யாரமான கண்ணே
உல்லாசமாகப் பெண்ணே'
என்று சொல்லி, உப்புமா செய்யும் வழிமுறைகளையும் பின்வருமாறு கூறுகிறார்:

"ஒருசேர் நெய்யை விட்டு உளுத்தம் பருப்பு போட்டு
காயம் கருப்பிலை கடுகு மிளகாய் போட்டு
ஒருபடி ஜலம் வைத்து ஒருபிடி உப்பு சேர்த்து
ஒருபடி ரவை சேர்த்து ஒரு தேங்காய் திருகிச் சேர்த்து'
உப்புமா செய்யச் சொல்கிறார் கணவர். கவிதையில் ஆண் சமைக்கச் சொன்னாலும், இந்நூலை இயற்றவர் பெண் என்பதால், உப்புமாவுக்குத் தேவையானவற்றையும், செய்யும் விதத்தையும் தெளிவாகவே சொல்கிறார். 

அடுத்து, உணவு சமைத்தலும் பரிமாறலும்! அதற்கு அடுத்த காட்சி வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு, ஜாதி பத்திரி தங்கத் தாம்பாளத்தில் வைத்து அவற்றோடு ஏலம், லவங்கம், சீவல், வால் மிளகு, ஜாதிக்காய் இவற்றையும் சேர்த்து வகைவகையாக மடித்து வைக்கச் சொல்கிறார் கணவர். பிறகு அவர் கச்சேரிக்குப் (கோர்ட்) போவதையும் தம் காதல் கண்மணியாம் மனைவியிடம் கூறுகிறார்.

"ஐந்து மணியும் ஆச்சுது
கோச்சு வண்டியும் வரும்
பீச்சுக்குப் போகவேணும் கண்மணி
பிரியமுடன் வந்திடுவாய்'
என்று கணவர் அழைக்கிறார். கோச்சு வண்டி, அதன் அமைப்பு முதலியவற்றையும் ஆசிரியர் விளக்குகிறார். 

அவ்வண்டியில் கணவனும் மனைவியும் செல்லும்போது "எதிரில் சாரட்டு, சைக்கிள், மோட்டார், டாக்கார்டு வண்டி, தானே நடக்கும் வண்டி, டிராம் வண்டி இவையும் வீதியில் செல்வதைப் பார்' எனக் கணவர் மனைவியிடம் கூறுகிறார். வெள்ளைக்காரன் காலத்தில் வண்டிகள் பல விதவிதமாகச் சாலைகளில் பயணித்ததை இந்நூல் எடுத்துரைக்கிறது. 

இந்நூலின் பெயர்  "வழிநடை உப்புமா பாட்டு' என்று இருந்தாலும்  உப்புமா செய்வது, வழக்குமன்றம் (கோர்ட்) செல்வது முதலில் சொல்லப்படுகிறது. பிற்பகுதியில், கதாநாயகன் வண்டியில் ஏறி கச்சேரிக்குச் செல்வது, உணவு வருணனை, வழிக்காட்சி, கடற்கரை காட்சி, இரவு உணவு, பின் பள்ளியறை என நிறைவு செய்யப்பட்டுள்ளது.

சிறப்பான யாப்பு, உவமை நயம், கற்பனை கொண்ட கவிதையாக இல்லாவிட்டாலும், நாடகப் பாணி உடைய கவிதை நடை என்றே சொல்லலாம்.
-தாயம்மாள் அறவாணன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com