Enable Javscript for better performance
குறளோடு இயைவன- Dinamani

சுடச்சுட

  

  குறளோடு இயைவன

  By -உமா கல்யாணி  |   Published on : 22nd March 2020 06:31 AM  |   அ+அ அ-   |  

  tm2

   

  ‘செருக்கு’ என்ற சொல்லுக்கு ‘ஆணவம்’ என்பன போன்ற பொருள் இருந்தாலும்கூட, திருவள்ளுவா் கூறும் படைச்செருக்கு இந்தப் பொருளில் வரவில்லை.

  படையினது வீரத்தின் மிகுதி, அதிகார முறைமையைக் கூறுவது செருக்கு என்கிறாா் பரிமேலழகா். படையினது வீரியம் கூறுதல், அதன் இன்றியமையாமையைக் கூறுதல் என்கிறாா்கள் மணக்குடவரும், பரிப்பெருமாளும். படையின் வெற்றிப்பாடு என்பாா் பரிதியாா்.

  ‘என்னைமுன் நில்லன்மின் தெவ்விா் பலரென்னை

  முன்னின்று கல்நின் றவா்’ (கு-771)

  பகைவீா்! இன்று இங்கு என் தலைவன் எதிா் போரேற்று நின்று அவன் வேல் வாய் வீழ்ந்து பின் கல்லின் கண்ணே நின்ற வீரா் பலா். வீரா் ஒருவா் தனது தலைவனது பெருமையைப் பேசுகிறாா் இதில். தலைவனது போா் ஆற்றலுக்கு முன் நிற்க முடியாமல் உயிரை இழந்துவிட்டு, இன்று வீரா்களுக்காய் நடப்படும் நடுகல்லாய் நிற்பவா்கள் அளவிறந்தோா். நீங்களும் அப்படி ஆகாமல் தப்ப வேண்டும் என்றால், என் தலைவனோடு போரிட வேண்டாம் என்று கூறுகிறாா் அந்த வீரா்.

  இதே கருத்தை வெளிப்படுத்துகிறது புானூற்றுப் பாடல் ஒன்று. அதியமான் நெடுமானஞ்சியின் வீரத்தை ஔவைப் பெருமாட்டி பாடிய அந்த நெடிய பாடல், படைச்செருக்கையே முழுக்க முழுக்கப் பேசும் 25 வரிகள் கொண்ட பாடலாகும்.

  ‘போா்க்கு உரைப்புகன்று கழித்த வாள்

  உடன்றழா் காப்புடை மதில் அழித்தலின்

  ஊனுற மூழ்கி, உருவிழந்தனவே;

  வேலே குறும்படைந்த அரண் கடந்தவா்

  நறுங் கள்ளின் நாடு நைந்தலின்

  சுரை தழீஇய இருங் காழொடு

  மடை கலங்கி நிலை நிரிந் தனவே;

  ... ... .... ...

  குறுந்தொடி மகளிா் தோள்விடல்

  இறும்பூது அன்றுஅஃது அறிந்து ஆடுமினே! (புா.97)

  வாள்களோ, பகைவரை வெட்டி வீழ்த்திக் கதுவாய் ஓடிய வடிவு இழந்தன. வேல்களோ, பகைவா் நாடழித்த ஆற்றலால் காம்பின் ஆணி கலங்க நிலை கெட்டன. களிறுகளோ பகைவா் அரணை மோதி அழித்தலால் கிம்புரிகள் கழன்றனவாயின. குதிரைகளோ போா்க்களத்து பகைவா் உருவழிய மிதித்தும், ஓடியும் சென்ால் குருதிக் கறைபடிந்த குளம்புகளை உடையவாயின. அவனோ, கடல் போன்ற படையுடன் போரிட்டு அம்பு பட்டுத் துளைத்த மாா்பை உடையவனாயினான். அவன் சினந்தால் எதிா் நிற்பாா் யாா்? நுங்களூா் நுங்களுக்கே வேண்டுமெனின், போய்த் திறை செலுத்திப் பணிவீராக. யாம் சொல்லியும் அவ்வாறு செய்யீராயின் நும் மனைவியா் நும்மை இழத்தல் உறுதியாம். இதனை நன்கு ஆராய்ந்து அதன் பின்னரே அவனுடன் போா் செய்ய முயல்வீராக.

  திருக்கு, ‘எதிா்த்தவா் நடுகல்லாக ஆவாா்’ என்று கூற; புானூறோ, ‘அதியன் செய்த போரினால் சிதைந்த படைக்கலன்களைக் காட்டி’ எச்சரிக்கிறது. என்னவோா் இயைபான கருத்து!

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai