"புதையல்' - சொல் விளையாட்டு!

பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்து தமிழுக்கு வளம் சேர்த்தவர்களுள் குறிப்பிடத்தக்கவர் அழகிய சொக்கநாதர். 1885-இல் திருநெல்வேலியை அடுத்த தச்சநல்லூரில் பிறந்தவர். தம் தந்தையிடம்
"புதையல்' - சொல் விளையாட்டு!

பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்து தமிழுக்கு வளம் சேர்த்தவர்களுள் குறிப்பிடத்தக்கவர் அழகிய சொக்கநாதர். 1885-இல் திருநெல்வேலியை அடுத்த தச்சநல்லூரில் பிறந்தவர். தம் தந்தையிடம் தமிழ்க்கற்று, தரமான இலக்கியங்கள் பலவற்றைப் படைத்துள்ளார்.

அனவரதானநாதர் பதிகம், காந்திமதி அம்மை மீது பிள்ளைத்தமிழ், மாலை, அந்தாதி, சங்கரநயினார் கோயில் அந்தாதி, நெல்லை நாயக மாலை முதலிய பல பாமாலைகளை இயற்றியுள்ளார். இவர் பாடிய தனிப்பாடல்கள் இருபத்தைந்திற்கும் மேற்பட்டவை. ஒரு தனிப்பாடலில் "புதையல்' என்ற சொல்லைப் பலவாறு பிரித்து,  பல அரிய பொருள் விளங்குமாறு அழகான சொல்விளையாட்டில் ஈடுபட்டுத் தமிழின் வளத்தினை மேம்படுத்தியுள்ளார். 
பாடலும் நயமும் இதோ: 

முற்பாதி போய்விட்டால் இருட்டே யாகும்
                     முன்னெழுத்து இல்லாவிட்டால் பெண்ணே யாகும்
பிற்பாதி  போய்விட்டால் ஏவற் சொல்லாம்
                     பிற்பாதியுடன்  முன்னெழுத்து இருந்தால் மேகம்
சொற்பாகக் கடை தலைசின் மிருகத்தீனி
                     தொடர்இரண்டாம் எழுத்து மாதத்தின் ஒன்றாம்
பொற்பார்திண் புயமுத்து சாமி மன்னா
                     புகலுவாய் இக்கதையின் புதையல் கண்டே!

முத்துசாமி வள்ளலே ! புதையல் என்னும் இச்சொல்லின் உட்பொருளை ஆராய்ந்து சொல்லுவாயாக. புதையல் எனும் இச்சொல்லின் முதற்பாதியை நீக்கினால் இருப்பது "அல்' எனும் சொல். அதற்கு "இருள்' என்பது பொருள். அச்சொல்லின் முதல் எழுத்தாகிய "பு' என்பதை நீக்கினால் "தையல்' ஆகும். அதன் பொருள் "பெண்' என்பது. அதன் பிற்பாதியை நீக்கின் வருவது "புதை' எனும் கட்டளையிடும் சொல்லாகும். அதன் பிற்பாதியாகிய "யல்' என்பதுடன் முதல் எழுத்தாகிய "பு' சேர்ந்தால் "புயல்'. அதன் பொருள் "மேகம்'. அதன் முதல் எழுத்தையும் கடையெழுத்தையும் சேர்த்தால் விலங்குகள் தின்னும் "புல்' ஆகும். அதன் இரண்டாம் எழுத்தாகிய "தை' - தமிழ் மாதத்தில் ஒன்றாகும்.

என்னே! தமிழ்ச்சொல் வளம்! என்னே சொக்கநாதப் புலவரின் புலமை!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com