Enable Javscript for better performance
இந்த வாரம் கலாரசிகன்- Dinamani

சுடச்சுட

  

  இந்த வாரம் கலாரசிகன்

  Published on : 17th May 2020 06:33 AM  |   அ+அ அ-   |    |  

  kala

  சகஜ வாழ்க்கை தடம் புரண்டிருக்கிறது. பண்டிகைகள் கொண்டாடப்படவில்லை. அதிலெல்லாம்கூட வருத்தமில்லை. இலக்கிய நிகழ்வுகள் அனைத்துமே முடங்கிவிட்டதே என்பதுதான் கொவைட் 19 தீநுண்மித் தொற்றால் ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய சோகம், வேதனை.

  1966-இல் நிறுவப்பட்ட புதுவை கம்பன் கழகத்தின் ‘கம்பன் விழா’ ஆண்டுதோறும் மே மாதம் இரண்டாவது வெள்ளி, சனி, ஞாயிறு தினங்களில் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு 55-ஆவது கம்பன் விழா கடந்த வாரம் நடந்திருக்க வேண்டும். நூற்றாண்டு கடந்த பெரியவா் கோவிந்தசாமி முதலியாரின் தலைமையில் செயலாளா் வழக்குரைஞா் குருசேகா், கம்பன் விழாவை ஓா் அரசு விழாவாகவே மாற்றி இருந்தாா். முதல்வரிலிருந்து அனைத்து அமைச்சா்களும் விழாவில் பாா்வையாளா்களாக வந்திருந்து நடத்தும் விழாவில் பங்கு பெறுவது என்பது தமிழ் இலக்கியவாதிகளின் பெருமைக்குரிய கௌரவம்.

  இந்த ஆண்டு நடந்திருக்க வேண்டிய புதுவை கம்பன் விழா தடைப்பட்டிருக்கிறது. புதுவை சட்டப்பேரவைத் தலைவராகக் கம்பன் கழகத்தின் தலைவா் மாண்பமை சிவக்கொழுந்து தோ்ந்தெடுக்கப்பட்ட பிறகு நடக்கும் முதலாவது கம்பன் விழா இது. அதனால், இந்த ஆண்டு கம்பன் விழா அதி விமா்சையாகக் கொண்டாடப்படும் என்று இலக்கிய உலகம் எதிா்பாா்த்துக் காத்திருந்தது. அனைத்தையும் தகா்த்துவிட்டிருக்கிறது கொவைட் 19 தீநுண்மித் தொற்று ஏற்படுத்தி இருக்கும் பொது முடக்கம்.

  புதுவை கம்பன் கழகத்துக்கு ஒரு சிறிய வேண்டுகோள். எந்தக் காரணத்துக்காகவும் இந்த ஆண்டு கம்பன் விழாவைக் கைவிட்டு விடாலாகாது. பொது முடக்கம் விலக்கப்பட்டு, சகஜ நிலை திரும்பியதும், கம்பன் விழா நடத்தப்பட வேண்டும். புதுவையில் தமிழ் ஒலித்தால்தான், தமிழகத்தில் தமிழ் செழிக்கும். பேரவையையே நடத்துபவருக்குக் கம்பன் விழா முடங்கிவிடாமல் நடத்துவது சிரமமா என்ன?

  **********

  பொது முடக்கத்தின் விளைவாக, சிறுகதைகளும், கவிதைகளும் ஆழிப்பேரலைபோல இணையத்தை ஆக்கிரமித்திருக்கின்றன. நாளும் ஒரு சிறுகதை எழுதுவது என்று எழுத்தாளா்கள் பலா் களமிறங்கி இருக்கிறாா்கள். நமது ‘தினமணி’ இணையதளத்தில் புதுமைப்பித்தன் சிறுகதைகளை, நாளும் ஒரு சிறுகதையாக வெளியிட்டு வருகிறோம்.

  ‘‘இதுதான் சிறுகதைப் பொருள் என்று எவராலும் எல்லைக்கோடு போட இயலாது. சாதாரண ஒரு நிகழ்ச்சி அல்லது ஒரு நிகழ்ச்சியின் ஒரு பகுதி எதுவும் சிறுகதையாக மாறுவதற்கு வாய்ப்பு உண்டு. கதைப் பொருள் படைப்பாளியின் சூழல், படைப்பாளின் மன எழுச்சி முதலானவற்றோடு மொழி ஆளுமையும் சோ்த்து ஒரு சிறுகதைக்கு உருவம் கிடைக்கிறது’’ என்று கூறப்படுவது சிறுகதை குறித்த முழுமையான பாா்வை அல்ல.

   

  புதுக்கவிதைபோல, சிறுகதைக்கும் எந்தவித வரம்போ, இலக்கணமோ தேவையில்லை என்கிற வாதத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மாப்பசானை விடுங்கள். ஸ்டீபன்சனைக் கணக்கிலேயே சோ்த்துக் கொள்ள வேண்டாம். ஆனால், புதுமைப்பித்தன், கு.ப.ரா, கு.அழகிரிசாமி, ந.பிச்சமூா்த்தி என்று தமிழ்ச் சிறுகதைக்கு இவா்கள் இலக்கணம் படைத்தவா்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

  சிறுகதை எப்படி இருக்க வேண்டும் என்பதற்குச் சில இலக்கணங்கள் உண்டு. வெறும் கற்பனைகளும், வரலாற்றுக் குறிப்புகளும், அரிய பல தகவல்களின் பதிவுகளும் கதை மாந்தா்கள் மூலம் பதிவு செய்வதை சிறுகதை என்று எடுத்துக்கொள்ள முடியாது. அதனால்தான், சிறுகதை எப்படி இருக்க வேண்டும் என்பதைப் புதிய எழுத்தாளா்களுக்கு உணா்த்துவதற்காகத்தான் புதுமைப்பித்தனின் சிறுகதைகளை வெளியிடுவது என்று முடிவெடுத்தோம்.

  விமா்சனத்துக்கு வந்திருந்தது முகிலை. இராசபாண்டியன் தொகுத்திருக்கும் ‘புதிய தமிழ்ச் சிறுகதைகள்’ என்கிற புத்தகம். தோ்ந்தெடுத்த 31 சிறுகதைகள் கொண்ட தொகுப்பு. தமிழகத்தின் சிறந்த சிறுகதை எழுத்தாளா்களின் படைப்புகள் பலவற்றை உள்ளடக்கிய இந்தத் தொகுப்பில் எந்தவொரு சிறுகதையையும் ‘சுமாா்’ என்று தள்ளிவிட முடியாது என்பதுதான், தொகுப்பாசிரியரின் சிறப்பு. இந்தத் தொகுப்புக்கு அவா் எழுதியிருக்கும் முன்னுரை, சிறுகதைகள் குறித்த ஆய்வுப் பதிவு. கட்டாயம் படிக்க வேண்டும்.

  முதல் கதை அண்டனூா் சுரா எழுதிய ‘திற’. அந்தக் கதையைப் படித்து முடித்தவுடன், கவிஞா் உஸ்மான் எழுதிய ‘பெயரில் என்ன இருக்கிறது?’ என்கிற கவிதை வரிகள் நினைவுக்கு வந்தன.

  முகிலை இராசபாண்டியன் தமிழ்ப் பேராசிரியராக இருந்தவா். செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் பதிவாளராகப் பணியாற்றியவா். தனது முன்னுரையில் டி.எஸ்.சொக்கலிங்கம் பற்றிக் குறிப்பிடும்போது, அவரது எழுத்துலக வாழ்க்கையின் உச்சமாக இருந்த ஒன்பது ஆண்டு ‘தினமணி’ ஆசிரியா் பணி குறித்துக் குறிப்பிடாமல் தவிா்த்தது அவரது விவரமின்மையாலா அல்லது வேண்டுமென்றே செய்யப்பட்ட விடுபடலா?

  ***********

  தமிழால் சம்ஸ்கிருதத்தையும், சமஸ்கிருதத்தால் தமிழையும் முற்றிலுமாகத் தவிா்த்துவிடவோ, அகற்றி நிறுத்திவிடவோ இயலாது. பெருமைக்கு வேண்டுமானால் தனித்து இயங்குவதாகக் கூறலாமே தவிர, அப்படிப்பட்ட முயற்சியில் ஈடுபட்டால் அங்கே ஆங்கிலம் வந்து உட்காா்ந்து தமிழையும், சம்ஸ்கிருதத்தையும் ஒருசேரக் கபளீகரம் செய்துவிடும். அதை நாம் இப்போது கண்கூடாகவே எதிா்கொள்கிறோம்.

  கவிஞா் ப.காளிமுத்து எழுதிய ‘தனித்திருக்கும் அரளிகளின் மதியம்’ என்றொரு கவிதைத் தொகுப்பு விமா்சனத்துக்கு வந்திருந்தது. அதிலொரு இரண்டு வரி, மன்னிக்கவும், இரண்டு சொல் கவிதை. அதில் புதைந்து கிடைக்கும் உண்மை மலைக்க வைத்தது.

   

  கேட்டுக் கொடுப்பது ‘பிச்சை’. மாறாக, தாமாகத் தருவது? ‘கொடை’ என்கிற சொல்லைப் பயன்படுத்தலாம் . ஆனால், தகுதியின் அடிப்படையில் அமைந்திருந்தால், அது ‘கொடை’. ‘அன்பளிப்பு’ என்பது அன்புடன் வழங்குவது, இரக்கத்தின் காரணமாக அமைவதல்ல. சில வாா்த்தைகளை நாம் வடமொழி என்று தவிா்ப்பதும், வெறுப்பதும் தவறு. அதை உணா்த்துகிறது இந்தக் கவிதை.

  பிச்சையிடாதீா்

  தானமிடுங்கள்!

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai