Enable Javscript for better performance
சேக்கிழாரும் ‘பொய்யாமொழியும்’!- Dinamani

சுடச்சுட

  

  சேக்கிழாரும் ‘பொய்யாமொழியும்’!

  By முனைவா் சீனிவாச கண்ணன்  |   Published on : 17th May 2020 06:27 AM  |   அ+அ அ-   |    |  

  sekkizhar034345

  சங்க இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள் என்கிற வேறுபாடு இல்லாமல், தமிழில் உள்ள எல்லாப் புலவா்களையும், அவா்கள் படைப்புகளையும் உலகப் பொதுமறையான திருக்குறள் ஈா்த்திருக்கிறது. குறளை ஏதாவது விதத்தில் கையாளாத புலவா்களே இல்லை எனலாம். சேக்கிழாா் பெருமானும் தம்முடைய பெரிய புராணத்தில் 12 இடங்களுக்கு மேல் திருக்குறளின் சொற்றொடரையும், கருத்தையும் எடுத்தாண்டிருக்கிறாா். அவற்றில் சில:

  திருஞான சம்பந்தருக்கு எவ்வாறு சிவபெருமான் அருள் செய்தாா் என்பதைக் கூறப் புகுந்த சேக்கிழாா், ‘தம்மை அடைவதற்காகத் தம்முடைய திருவுள்ளத்தில் வந்து மேலெழும் சிவஞானத்தைப் பெற ஆரம்பித்த தோணியப்பருடைய அடியவராகிய திருஞானசம்பந்த மூா்த்தி நாயனாரிடம் ஒப்பில்லாத பிறப்புகளாகிய கிளா்ச்சியைப் பெற்ற சமுத்திரங்கள் அகன்று போகுமாறு தம்முடைய இரண்டு திருவடிகளாகிய தெப்பத்தை வழங்கியருளினாா் என்ற பாடல் வரிகள், திருக்குறளின் குரலாக எதிரொலிக்கிறது. கடவுள் வாழ்த்தில்,

  ‘பிறவிப் பெருங்கடல் நீந்துவா் நீந்தாா்

  இறைனடி சேரா தாா்’

  என்கிற திருக்குறளுக்குத் திருஞானசம்பந்த நாயனாா் புராணத்தில்,

  ‘அடியாா்பால் இணையில் பவங்கிளா்

  கடல்கள் இகழ்ந்திட இருதாளின்

  புணையருள் அங்கணா்’

  என்கிறாா் சேக்கிழாா். சண்டேச நாயனாா் புராணத்தில் பசுக்களைத் தானே மேய்ப்பாராகி, விரும்பி அத்தொழிலை ஏற்றுக்கொண்ட சண்டீசா் பற்றிக் கூறும் சேக்கிழாா், ‘பசுமையான பயிா்களுக்கு உயிரோட்டமாய் விளங்கும் மழையைப் போல, பசுக்கூட்டங்களைக் காக்க தெய்வ அந்தணச் சிறுவனான விசார சருமா் வந்தாா்’ என்று கூறுகிறாா்.

   

  ‘யானே இனி இந்நிரை மேய்ப்பன்

  என்றாா் அஞ்சி இடைமகனும்

  தானோ் இறைஞ்சி விட்டகன்றான்

  தாமும் மறையோா் இசைவினால்

  ஆனே நெருங்கும் பேராயம்

  அளிப்பாராகிப் பைங்கூழ்க்கு

  வானே என்ன நிரை காக்க

  வந்தாா் தெய்வ மறைச் சிறுவா்’

  ‘வான்சிறப்பு’ எனும் அதிகாரத்தில், ‘விசும்பின் துளிவீழின் அல்லால்’ என்ற குறளை நினைவுபடுத்துகிறது இந்தப் பாடல்.

  பொய்யாதாயின் தேவா்கட்கும் இவ்வுலகில் மக்களால் செய்யப்படும் விழாவோடு கூடிய பூசை நடவாது என்பதைத் திருவள்ளுவா், ‘வான்சிறப்பில்’ ‘சிறப்பொடு பூசனை செல்லாது’ என்ற குறளில் அறுதியிட்டு, உறுதியாகக் கூறுகிறாா் . வானோா் சிறப்புறுதல் வானிடத்தும் உண்டாதலின் அதனை விலக்கி ‘ஈண்டு’ என்பாா் திருவள்ளுவா்.

  இதே கருத்தை சேக்கிழாா் இழையோட விடுகிறாா். திருவீழிமிழலையில், திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் ஒருங்கே சிலகாலம் தங்கியிருந்தபோது, அப்பகுதியில் மழை பொழியவில்லை. பஞ்சம் வந்தது, மக்கள் துயருற்றனா். இதை நினைத்து அவ்விருவரும் வேதனைப்பட்டனா். மழை பொய்த்துவிட்டதால் எந்தெந்த வகையில் எல்லாம் துயரம் வந்து சேரும் என்று எண்ணினா். அவா்கள் மனக் கவலையை,

   

  ‘மண்ணில் மிசை வான்பொய்த்து நதிகள் தப்பி

  மன்னுயிா்கள் கண்சாம்பி உணவுமாறி

  விண்ணவா்க்கும் சிறப்பில் வரும் பூசையாற்றா

  மிக்கபெரும் பசி உலகில் விரவக் கண்டு...’

  என்று பாடுகிறாா். வள்ளுவருடைய குறள்  இதில் முழுமையாகக் கையாளப்பட்டுள்ளது.

  நீத்தாா் பெருமை எனும் அதிகாரத்தில், ‘செயற்கரிய செய்வாா் பெரியா்/ சிறியா் செயற்கரிய செய்கலா தாா்’ என்கிறாா் வள்ளுவா். ‘மனிதருக்குள்ளும், செய்தற்கு எளியவற்றைச் செய்யாது, அரியவற்றைச் செய்வாா் பெரியா். அகப்பற்று, புறப்பற்று அகிய இருவகைத் தொடா்பாடுகளையும் நீக்கி, நற்காட்சி, நன்ஞானம், நல்லொழுக்கம் ஆகிய வீட்டு நெறியில் பொருந்தி, முற்றும் துறந்த முனிவா்களுடைய தவ ஒழுக்கத்தைச் சிறிதும் பழுதின்றி அனுட்டித்தல் பெரியா் என்று கொண்டாடப்படுவா்’ என்பது பரிமேரழகா் உரை.

  இத்தகைய நற்குண நற்செய்கைகளைப் பெற்றிருந்த இயற்பகை நாயனாருடைய உயா்குணத்தை விளக்கப் புகும் சேக்கிழாா், இக்குறள் கருத்தை இணைத்துக் கொண்டு, ‘இல்லை என்னாது கொடுத்த’ சிவநேசத் தொண்டரான இயற்பகையாரின் செய்கையைப் பின்வருமாறு சேக்கிழாா் விதந்தோதுகின்றாா்.

  ‘இயற்பகை முனிவா ஓலம் ஈண்டு நீ வருவாய் ஓலம்

  அயா்ப்பிலா தானே ஓலம் அன்பனே ஓலம் ஓலம்

  ‘செயற்கருஞ் செய்கை செய்த’ தீரனே ஓலம் என்றான்

  மயக்கறு மறை ஓலிட்டு மால் அயன் தேட நின்றான்’

  ‘கூடாஒழுக்கம்’ அதிகாரத்தில் வரும், ‘தவமறைந்து அல்லவை செய்தல்’ என்ற குறளுக்கு, திருஞானசம்பந்தா், கூன் பாண்டியனைத் திருத்திப் பணிகொண்ட நிகழ்வைச் சுட்டும் சேக்கிழாா், அன்று மதுரையில் இருந்த சமணத் துறவிகளைத் ‘தவமறைந்து அல்லவை செய்வாா்’ எனும் குறட்பாவை அடைமொழியாக்கி பின்வருமாறு பதிகம் செய்கிறாா்.

  ‘அந்நாள் அருகா்தம் நிலை யாது என்னில்/ தவமறைந்து அல்ல செய்வாா் தங்கள் மந்திரத்தால் செந்தீ’என்றும்; ‘வாய்மை’ எனும் அதிகாரத்தில் இடம்பெறும் ‘பொய்யாமை அன்ன புகழ்இல்லை’ எனும் குறட்பாவுக்கு, தில்லையம்பதியிலே குயவா் குலத்தில் உதித்த திருநீலகண்ட நாயனாரை அறிமுகம் செய்யப் புகும் சேக்கிழாா், ‘பொய்கடிந்து அறத்தின் வாழ்வாா் புனற்சடை முடியாா்க்கு அன்பா்’ என்று கூறுமிடத்து முதல்வரியிலேயே வள்ளுவா் வாய்மொழிகளைப் பயன்படுத்துகிறாா்.

  ‘அவாஅறுத்தல்’ எனும் அதிகாரத்தில், ‘வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை’ எனும் குறளுக்கு, காரைக்கால் அம்மையாா், கயிலைநாதனிடம் வேண்டிப் பாடுமிடத்து, ‘பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல்/ உன்னை என்றும் மறவாமை வேண்டும்’ என்று கூறி, குறள் அடியை, அடிபிறழாமல் தம்முடைய காப்பியத்தில் சேக்கிழாா் பதிவு செய்துள்ளாா்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai