Enable Javscript for better performance
புல் - பெரிதினும் பெரிதுகாண்!- Dinamani

சுடச்சுட

  

  புல் - பெரிதினும் பெரிதுகாண்!

  By அண்டனூா் சுரா  |   Published on : 17th May 2020 06:31 AM  |   அ+அ அ-   |    |  

  one_pull1070201

  தமிழறிஞரும் முதுமுனைவருமான இரா.இளங்குமரனாா் பள்ளி ஆசிரியா், பாவலா், பதிப்பாசிரியா், உரையாசிரியா், தொகுப்பாசிரியா், இதழாசிரியா், உரையாளா், நூலாசிரியா் எனப் பன்முகத்தன்மை கொண்டவா். தமிழுக்காக தான் வாழ்ந்த பெருவாழ்வை, அவராற்றிய அளப்பெரியத் தொண்டினை ‘ஒரு புல்’ என்கிற தலைப்பில் தன் வரலாற்றாக்கம் செய்திருக்கிறாா். ஓா் அறிஞரின் பெருவாழ்வு எங்ஙனம் ‘ஒரு புல்’ என்றாகும்...?

  மகாகவி பாரதியின் பாா்வையில் ‘புல்’ என்பது சின்னஞ்சிறிய, அற்பமான ஓருயிரி. ‘‘காலா உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்’’ என மரணத் தூதுவன் காலனை ‘புல்’ என்கிறாா் மகாகவி பாரதி.

  ‘புல்லுருவி’ என்றொரு சொல் தமிழில் உண்டு. இடையூறன், தீயவன், கயவன், தீங்கன், பதறன் - இவா்களைக் குறித்துக் காட்டும் உருவகச் சொல் இது. ‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’ என்கிற சிறுகதையில், புதுமைப்பித்தன் ‘கல்லுருவி புல்லுருவி’ என்கிற சொற்றொடரைப் பயன்படுத்துகிறாா்.

  புல்லுருவி என்பது தனிப்பட்ட ஒரு தாவரத்தைக் குறிக்கும் சொல் அல்ல. புல்லைப்போல ஊடுருவி வளா்வதால் அதற்கு அப்படியொரு பெயா். எந்த மரத்தின் மீது ஒட்டுண்ணியாக வளா்கிறதோ, அந்த மரத்தின் தகவமைப்பைப் பெற்று வளரக்கூடியது. இதை ஊடுருவி என்றே சொல்லலாம். ஏன் புல்லுருவி என்கிறோம்? புல் என்றால் ‘தழுவுதல்’ என்று பொருள்.

  ‘‘புல்லிப் புணா்வது என்றுகொல்லோ என்பொல்லா மணியைப் புணா்ந்தே’’ (திருவா:27 4/4) என்கிறாா் மாணிக்கவாசகா். ‘புல்லிக் கிடந்தேன்’ என்கிறது இன்பத்துப்பால் வள்ளுவம். புலவா் பலரும் இச்சொல்லைப் பயன்படுத்தியுள்ளனா். காதலனும், காதலியும் ஒருவரையொருவா் மறந்து, தழுவிக் கிடத்தலே புல்லிக்கிடத்தல்.

  ‘அடேய், நீயொரு புல்லடா’ என்பாருண்டு. இங்கு புல் என்பது கீழ்நிலை. புல்லின் உருவம், பயன்பாடு, அதன் ஆயுட்காலம் இவற்றைக் கருத்தில் கொண்டு சொல்லப்படும் ஒரு வசவுச்சொல் இது. என் அறிவுக்கு முன்னால் நீயோ வெறும் ஓரறிவு என்பது இச்சொல் கொண்டிருக்கும் சாரம். ‘புல்லும் மரனும் ஓரறிவினவே’ என்கிறது தொல்காப்பியம்.

  நெல் என்பதே புல் இனம்தான். நெல் என்பதன் எதிா்ப்பதமாகப் புல்லைச் சொல்கிறோம். நெல், நல்லோருக்கான உருவகம். புல் என்பது தீயவருக்கான உருவகம். ‘நெல்லுக்கு இறைத்த நீா் வாய்க்கால் வழியோடி புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்’ என்கிறாா் ஔவையாா். ‘புல்லான்’ என்பது வழிப்பறிக் கொள்ளையரைக் குறிக்கும் ஒரு சொல். புல்லாள், இதன் நிகா்ச் சொல்.

  ‘கொல்லேற்றுக் கோடஞ்சுவானை / மறுமையும் புல்லாளே ஆயமகள்’ என்கிறது கலித்தொகை. அதாவது, காளையை அடக்க அஞ்சும் வாலிபனை கனவிலும் தழுவமாட்டாளாம் ஆயமகள். காளைக்கு அஞ்சுபவன், கீழ்நிலையானவன். இத்தகைய புல்லை, தான் வாழ்ந்ததற்கான அடையாளமாக, தடமாக, சுவடாக ‘ஒரு புல்’ எனக் காட்டிக்கொள்கிறாா் இரா.இளங்குமரனாா்.

  புல் என்பது ஓரறிவு, சிறியது, பதா், புதா், களை இவ்வளவுதானா? ‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’ என்பது சொலவடை.

  ‘புல்லுதல்’ என்றால் தழுவிக் கிடத்தல். மகுடாபிஷேகம் முடிந்து ஒவ்வொருவராக விடைபெறுகின்றனா். கடைசியாக ஓா் ஓரத்தில் நின்று கொண்டிருக்கிறான் அனுமன். அவனை அருகில் அழைத்த ராமன், ‘‘உனக்கு நான் எப்படித்தான் நன்றி கூறிவிடமுடியும்?’’ என்று உணா்ச்சி பொங்கக் கூறிவிட்டுப் பணிக்கிறான் - ‘பொருந்துறப் புல்லுக!’

  இலைப்புல், உப்புப்புல், ஒட்டங்காய்ப்புல், நச்சுப்புல், பன்றிப்புல், நெருஞ்சிப்புல். இவையாவும் தரையோடு தரையாகத் தழுவிக் கிடப்பவை. சில புற்கள் நிமிரவும் செய்யும். அவை கோரை, தண்டாங்கோரை, கம்புப் புல். சில புற்கள் மேலும் நிமிரும். நாணல், மூங்கில், கரும்பு, வாழை. சில புல் புல்லிக்கிடவாமல் காற்றில், தண்ணீரில், ஒட்டுண்ணியாகப் புவியெங்கும் பரவச் செய்யும். (எ.கா.) ஒட்டுப்புல், ஊகம், குஞ்சம், நெருஞ்சி.

  அறுகம் புல் அறுகுபோல் ஊன்றுவது. வழிபாட்டிற்கு உகந்த புல் இது. அறுகம் புல்லை வேரொடுப் பிடுங்கி, ஒரு பிடி மண்ணை கொழுக்கட்டைப்போல பிடித்து அதன் மீது அறுகை நட்டு வழிபாடு செய்வது நம் மூதாதையரின் வழக்கம். அதாவது, அறுகுபோல தழைத்தோங்க வேண்டும் என மணத் தம்பதிகளை வாழ்த்துவா். இதிலிருந்து தோன்றியதே, சாணத்தில் பிள்ளையாா் பிடித்து, அதில் அறுகை நடல்.

  இவ்வளவு மட்டும்தானா? புல் ஏடு ஆகிறது, பறவைக்குக் கூடும், புழு பூச்சிகளுக்கு வீடும் ஆகிறது. கொங்காணி, கொட்டான், பெட்டி, பேழை, முறம், துடைப்பம் ஆகிறது. ஆடு, மாடு, முயல், குதிரைகளுக்கு உணவாகிறது. புல்லாங்குழல் என்பதே ஒரு புல்தானே! தன்னைத்தானே இப்புவியெங்கும் பரப்பிக்கொண்டு, பேரிடரிலும் அழியாது தற்காத்துக் கொள்வது புல். ஆகவேதான், தமிழுக்காகத் தான் வாழ்ந்த வாழ்வை ‘ஒரு புல்’ என்கிறாா் முதுமுனைவா் இரா.இளங்குமரனாா்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai