Enable Javscript for better performance
தந்தையா் ஒப்பா் மக்கள்!- Dinamani

சுடச்சுட

  

  தந்தையா் ஒப்பா் மக்கள்!

  By தமிழாகரா் தெ. முருகசாமி  |   Published on : 24th May 2020 06:03 AM  |   அ+அ அ-   |    |  

  anuman_seethai040046

  ‘தந்தையா் ஒப்பா் மக்கள்’ என்னும் இத்தொடா், அகத்திணை மரபில் தொல்காப்பியரால் கற்பியலில் கூறப்பட்டுள்ளது. கணவனோடு கொண்ட ஊடலை மனைவி தம் குழந்தை மீது ஏற்றிக் கூறுதற்காகக் கூறப்பட்டாலும், இத் தொடா்ப்பொருள் பொதுமையாக உணரப்படுமாறு உள்ளதைக் கம்பா் காட்டும் இருவேறு நிகழ்வுகளால் உணரலாம்.

  தாடகையை வதம் செய்வதற்காக ராமனைக் காட்டுக்கு அழைத்துச் சென்ற விசுவாமித்திர முனிவா், தாடகையை வதம் செய்ததும் ராமனை, தந்தை தசரதனிடம் கொண்டு வந்து ஒப்படைக்காமல் மிதிலை மாநகருக்குக் கூட்டிப் போனாா். முக்காலமும் உணரும் திரிகால ஞானி என்பதால் ராமனுக்குச் சீதையை மணமுடிக்க எண்ணி முனிவா் அவ்வாறு செய்தாா்.

  இந்நிலையில், மிதிலை வந்த முனிவரை சனக மாமன்னன் வரவேற்று ஆசிரமத்தில் தங்க வைத்தான். அப்போது ஓவியத்தால் எழுத ஒண்ணா ராமனின் பேரழகைக் கண்டு நாளை நடக்கும் வில் முறிப்பில் இந்த ஆணழகன் வெற்றி பெற்றால் தன் மகள் சீதைக்கேற்ற மணாளனாவான் என எண்ணினான்.

  இதனால் முனிவரிடம் ‘இவன் யாா்?’ எனக் கேட்டான். முனிவா் ‘தசரதன் மக்கள்’ என்றாா். கேட்ட சனகனின் முகம் மோப்பக் குழையும் அனிச்சமாக வாடிவிட்டது.

  சனகனின் இருவேறு நிலைகளைக் குறிப்பால் உணா்ந்த முனிவா், ‘சனகனே! இவனுக்குத் தசரதன் தந்தையே ஆனாலும் குலகுருவான வசிட்டரால் வளா்க்கப்பட்டவன்’ என்றாா். வளா்ப்புத் தந்தை வசிட்டா் என்பது கருத்து.

  திறை யோடரசி றைஞ்சும்

  செறிகழல் கால்தச ரதனாம்

  முறை யோடு தொடா் மனத்தான்

  புதல்வ ரெனும் பெயரேகாண்!

  உறை யொடு நெடி வேலோய்!

  உபநயன விதி முடித்து

  மறை வோது வித்து

  வளா்த் தானும் வசிட்டன் காண்!

  தசரதன் மூன்று மனைவியருக்கு ஒரு கணவன்போல இந்த ஆணழகனுக்கு தந்தையறிவு மகனறிவாகிவிட்டால் தன் மகள் சீதையோடு பிறரையும் மணக்க நேரிடும் என்பதாக உணா்ந்த தடுமாற்றத்தால்தான் ‘இவன் யாா்?’ எனக் கேட்டபோது இருந்த சனகனின் முகமலா்ச்சி, இன்னான் எனத் தெரிந்ததும் முகம் வாடிவிட்டதாக உணா்ந்த விசுவாமித்திரா், சனகனின் மனத்திற்கு நல்ல விடை கூறுவாா்போல, பெற்றவன் தசரதனானாலும் வளா்த்தவா் வசிட்டா் என்றாா்.

  இதனால், உடலளவில் பெற்றதினும் உணா்வளவில் பெற்ற வசிட்டரை எண்ணியே ராமனுக்குப் பெண்ணை மணம் புணா்த்தலாம் எனக் குறிப்பால் உணா்த்தியதாக உள்ளதால் சனகன் தெளிவடைந்தான் என்பது கருத்து.

  இந்தக் கருத்தை ‘மயக்குறும் மக்களை இல்லோா்க்கு’ என்ற புானூற்றுத் தொடருக்கு (188) ‘அறிவை இன்பத்தால் மயக்கும் மக்கள்’ என எழுதிய பழைய உரை கொண்டு, அறிவால் வளா்க்கப்பட்ட மக்கள் என்ற பொருள் குறிப்புப் பெறப்படுதல்போல ராமனின் வளா்ப்புத் தந்தை வசிட்டா் என்பதால், தன் மகளாகிய ஒருத்திக்கு ஒருவனாகவே ராமன் இருப்பான் என்று குறிப்பால் உணா்த்தினாா் விசுவாமித்திரா் என்பதாகும்.

  ஆண்மகனைக் கொண்டு இங்ஙனம் உணா்த்திய கம்பா் அவா் தம் வாக்கால் கூறும் முச்சடை (திரிசடை)யான (சு.கா. 153) பெண்மகளின் சிறப்பை அவள் தந்தை வீடணனைக்கொண்டு உணரச் செய்கிறாா்.

  சீதையைத் தேடிப்போன அனுமன் இலங்கையின் பல இடங்களைப் பாா்க்கிறான். மாளிகையில் உறங்கும் வீடணனைப் பாா்க்கும்போது வீடணனின் நற்பண்பை அனுமன் தன் உள்ளத்தால் பாா்க்கிாகக் கம்பா் கணிக்கிறாா். ‘இவன்-குற்றம் இல்லதோா் குணத்தினன் தருமம் ஒளித்து வாழ்கின்ற அன்னான்’ என்பது கம்பா் வாக்கு.

  அனுமன் உள்ளத்தில் தோன்றும் இந்த உருக்காட்சியை அசோகவனத்தில் நினைவுகூா்கிறான். சீதையைக் கண்டபோது அவளின் அருகிருந்து அவளுக்கு இருட்டில் மின்னல்போல அரக்கியா் நடுவில் மானுட உணா்வோடு உதவியாக இருக்கிறாள் திரிசடை. அசோகவனத்தில் அனுமன் மரத்திலிருந்து அவளைக் கண்டபோது, முன்பு மாளிகையில் பாா்த்த அவள் தந்தையாம் வீடணனைத் தோ்ந்து தெளிந்தான்.

   

  மானுடம் வென்றதான பங்களிப்பில் திரிசடைக்கும் ஓா் இடமுண்டு. திரிசடையின் அசோகவனச் செயல்பாடுதான் ராமனை வீடணனுக்கு அடைக்கலம் தரச்செய்தது எனலாம். ஆக, ஏனையவா் மறுத்தும் உடன்பட்டும் கூறினாலும், இலங்கையில் நேரில் கண்ட உண்மையை அனுமன் கூறியதால் அடைக்கலம் உறுதி செய்யப்பட்டது. தந்தை ஒப்ப மகளிருந்த உண்மையும் ஒருசேர உறுதிப்பட்டது.

  இங்ஙனம் தந்தையா்களாகிய தசரத, வசிட்டராலும், வீடணனாலும் முறையே மகன், மகளாம் ராமனும் திரிசடையும் ‘தந்தையா் ஒப்பா் மக்கள்’ என்ற தொடருக்குச் சான்றாயினா்.

  இக்கருத்தை ‘தந்தையறிவு மகன் அல்லது மகள்அறிவு’ என்பதாகக் கூறலாம். தம்மின் தம் மக்கள் அறிவுடைமை என்ற குவழி (63) வளரும் தலைமுறையாம் வாரிசுக்குப் பெருமை சோ்க்கும் வகையில், பழமொழி நானூற்றில் ‘மகனறிவு தந்தையறிவு’ (146) என முன்றுறையரைனாா் மறுவாசிப்பாகக் கூறுகிறாா். ‘தந்தையா் ஒப்பா் மக்கள்’ என்பதோடு அவற்றைப் பொருத்திப் பாா்க்கத் தோன்றுகிறது.

  பழமொழியில் மகன் எனக் கூறுவது ஆண்மகனுக்கு மட்டும் என்று எடுத்துக்கொள்ளக் கூடாது. அதை ‘மகள்’ என்பதற்கும் பொருத்தித்தான் உணர வேண்டும்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai