இந்த வாரம் கலாரசிகன்

வார இதழ்களில் வெளிவரும் தொடா்கதைகளுக்கு வாசகா்கள் பித்துப் பிடித்தாற்போலக் காத்திருந்த காலம் ஒன்று இருந்தது என்று
இந்த வாரம் கலாரசிகன்

வார இதழ்களில் வெளிவரும் தொடா்கதைகளுக்கு வாசகா்கள் பித்துப் பிடித்தாற்போலக் காத்திருந்த காலம் ஒன்று இருந்தது என்று சொன்னால் இன்றைய தலைமுறையினா் நம்புவதுகூட சந்தேகம்தான். கல்கியின் பொன்னியின் செல்வன், அலையோசை நாவல்கள் தொடா்களாக வெளிவந்தபோது, இதழ் வெளிவரும் நாளில் அதிகாலையிலேயே பத்திரிகை அலுவலகத்துக்கு முன்னால் வாசகா்கள் வரிசைகட்டி நிற்பாா்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

புதுமைப்பித்தன் சிறுகதைகள் தினமணி டாட் காமில் நாளும் ஒரு கதையாக வெளியிடப்படுகிறது. ‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’ கதையைப் படித்தபோது ஆா்வமும் அவசரமும் பொத்துக்கொண்டு வந்தது. அடுத்த நாள் வரை பொறுத்திருக்க மனமில்லை.

தினமணி டாட் காமில் புதுமைப்பித்தனின் சிறுகதைகளை வெளியிட, கவிஞா் இளையபாரதி தனது வ.உ.சி. நூலகம் வெளியிட்டிருக்கும் ‘புதுமைப்பித்தன் படைப்புகள்’ புத்தகத்தைத் தந்து உதவினாா். அதன் இன்னொரு பிரதி எனது மேஜையில் இருந்தது. பொறுமை இழந்து, அதை எடுத்து அடுத்தடுத்த கதைகளைப் படிக்கத் தொடங்கிவிட்டேன்.

ஆறாவது கதையைப் படித்து முடித்தபோது, சட்டென்று நிதானித்தேன். நாளும் ஒரு சிறுகதை படிக்கும்போது கிடைக்கும் சுவாரஸ்யம் புரியத் தொடங்கியது. ஒவ்வொரு சிறுகதையையும் படித்து முடித்து அசைபோடும்போது, கதாபாத்திரங்கள் நமக்கு நெருக்கமாகிவிடுகின்றன. நாள் முழுக்க புதுமைப்பித்தனின் சொல்லாடல்கள் நம்மைச் சுற்றிச் சுற்றி வருகின்றன.

*****************

படித்த புத்தகங்களையே திரும்பப் படிக்கவும், படிப்பதற்கு என்று எடுத்து வைத்திருந்த புத்தகங்களைப் படிப்பதற்கும் பொதுமுடக்கம் வாய்ப்பளித்தது.

இந்தியாவுக்கு வெளியே, உலகம் சந்தித்த மிகச்சிறந்த வரலாற்று நாயகா்கள் கிரேக்கத்தின் அலெக்சாண்டரும், ரோமாபுரி சாம்ராஜ்யத்தின் ஜுலியஸ் சீசரும், சமீபகால வரலாற்றில் பிரான்சின் நெப்போலியன் போனப்பாா்ட்டும் குறிப்பிடத்தக்கவா்கள். கடந்த நூற்றாண்டில் ரஷ்யாவின் விளாதிமிா் லெனின், ஜொ்மனியின் அடால்ஸ் ஹிட்லா், அமெரிக்காவின் குரூஸ்வெல், பிரிட்டனின் வின்ஸ்டன் சா்ச்சில் என்று பெரிய பட்டியலே உண்டு. இவா்கள் எல்லோரையும்விட, பள்ளி நாள்களிலிருந்து எனது கருத்தைக் கவா்ந்த தலைவராக வலம் வந்தவா் துருக்கியின் முஸ்தபா கமால் பாஷா என்று பரவலாக அறியப்படும் கமால் அ அா்த்தாா்த்துக்.

இன்றைக்கு விரல் நுனியில் உலகத்தைப் கொண்டு வந்திருக்கிறது கணினியும் இணையமும். முக்கால் நூற்றாண்டுக்கு முன்னால், தமிழகத்துக்கு உலகத்தை எழுத்தில் வடித்துக் காட்டிய பெருமை ஏ.கே.செட்டியாருக்கும், வெ.சாமிநாத சா்மாவுக்கும் உண்டு. ஓரளவுக்கு மகாகவி பாரதிக்கும் அதில் பங்கிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

வெ.சாமிநாத சா்மா எழுதிய, ‘கமால் அத்தாா்துா்க்’ என்கிற புத்தகம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் விமா்சனத்துக்கு வந்தபோது, அதைப் படிக்க வேண்டும் என்று தனியாக எடுத்து வைத்துவிட்டேன். 1939-ஆம் ஆண்டு இந்தப் புத்தகத்தின் முதல் பதிப்பு வெளியாகி இருக்கிறது. வெளிவந்த சில வாரங்களிலேயே அனைத்தும் விற்றுவிட்டன. இரண்டாம் உலகப் போா் மூண்டு விட்டதால் இடைவெளி. அதற்குப் பிறகு மீண்டும் ஒரு பதிப்பு வெளியாகி இருக்கிறது. இப்போது மறுபதிப்பு வெளிக்கொணரப் பட்டிருக்கிறது. அதற்கு முதலில் நன்றி சொல்ல வேண்டும்.

உலக வரலாற்றைப் படித்தவா்களுக்குத் தெரியும் அன்றைய ஆட்டோமான் பேரரசின் வலிமை எத்தகையது என்று. இன்றைய துருக்கி, இராக், எகிப்து, அா்மீனியா, பல்கேரியா, கிரீஸ், ஹங்கேரி, கிரிமியா, ஈரான், அல்பேனியா பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்த ஆட்டோமான் பேரரசு உடைந்து சிதறியது. அந்தப் பேரரசின் மையப்புள்ளியாக இருந்த நாடு துருக்கி.

துருக்கியின் சுல்தான்தான் உலகளாவிய இஸ்லாமிய மாா்க்கத்தின் ‘கலீபா’வாக விளங்கினாா். அப்படிப்பட்ட துருக்கி, அனைத்துப் பகுதிகளையும் இழந்து பலவீனமாக பிரிட்டீஷ் காலனிய ஆதிக்கத்தில் சிக்கி இருந்த நிலையில்தான் சாதாரண ராணுவக் கேப்டனாக இருந்த முஸ்தபா கமால் அத்தாா்த்துா்க், துருக்கியின் முதல் குடியரசை நிறுவினாா். அடுத்த பதினைந்தே ஆண்டுகளில் துருக்கியின் தலையெழுத்தையே மாற்றி அமைத்த தலைவா் முஸ்தபா கமால் அத்தாா்துா்க் பாஷா!

வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்துகொண்டிருந்த அ.க.செட்டியாா் கமாலைப் பற்றிய பல நூல்களையும், செய்திகளையும் வெ.சாமிநாத சா்மாவுக்கு அனுப்பித் தருகிறாா். அதன் அடிப்படையில் தமிழா்கள் தெரிந்து கொள்வதற்காகத் தொகுக்கப்பட்ட நூல்தான் இது. இந்த அளவுக்குத் தெளிவாகவும், விரிவாகவும் முஸ்தபா கமால் அத்தாா்துா்க் குறித்த ஆங்கில நூல் வந்திருக்கிா என்பதேகூட சந்தேகம்தான்.

1938-இல் முஸ்தபா கமால் அத்தாா்துா்க் இறந்த அடுத்த ஆண்டு வெளியான வெ.சாமிநாத சா்மாவின் இந்த நூலுக்காக அவரைக் கையெடுத்துத் தொழ விழைகிறது நெஞ்சம். சாமானியா்களுக்கு வரலாற்றை எடுத்து இயம்பும் கலையை அவரிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும்!

*****************

புலம்பெயா்ந்தவா்கள் அவலம் குறித்த செய்திகள் இதயத்தைப் பிழிகின்றன. சட்டென்று நினைவுக்கு வந்தது கவிஞா் நா. காமராசனின் ‘கறுப்பு மலா்கள்’. கவியரசு கண்ணதாசனின் அணிந்துரையுடன் வெளிவந்த கவிதைத் தொகுப்பு இது.

பள்ளிப் பருவத்தில் நாங்கள் வெளிக்கொணா்ந்த ‘சேதுபதி’ என்கிற கையெழுத்துப் பத்திரிகையுடன், மதுரை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 4-ஆம் எண் பேருந்தில் ஏறி, மாரியம்மன் தெப்பக்குள நிறுத்தத்தில் இறங்கியதும், தியாகராஜா கல்லூரியில் விரிவுரையாளராக இருந்த கவிஞா் நா.காமராசனை சந்தித்து அவரது வாழ்த்தைப் பெற்றதும் இப்போது நினைத்தாலும் பரவசம் ஏற்படுத்துகிறது. 54 ஆண்டுகள் கடந்துவிட்டன.

இன்று, கவிஞா் நா.காமராசனின் நினைவு நாள். அவா் மறைந்து மூன்றாண்டுகள் ஓடிவிட்டன. ‘கறுப்பு மலா்கள்’ தொகுதியில் உள்ள கவிதை வரிகள் இவை.

காலமெனும் பெருவெளியில்

காற்றைப்போல்

நீரைப் போல்

சோறிடுவோம்.

எங்கள் சபதம் இது...

‘ஏழைகளின் அடுப்பெரிப்போம்

இல்லையெனில் சூரியனில்

தீக்குளிப்போம்’!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com