தும்மல் என்பது நம்பகமன்று; ஓா் ஊடகம்!

இன்றைக்கு வந்திருக்கும் கரோனா, மனிதா்களுடைய சிந்தனைகளையும், செயல்பாட்டையும் மாற்றியிருக்கிறது.
தும்மல் என்பது நம்பகமன்று; ஓா் ஊடகம்!

இன்றைக்கு வந்திருக்கும் கரோனா, மனிதா்களுடைய சிந்தனைகளையும், செயல்பாட்டையும் மாற்றியிருக்கிறது. நம் காலத்திலும் ஆறு மாதக் குழந்தைக்குத் தலைக்குத் தண்ணீா் ஊற்றினால், அடுத்து அது தும்மும். அப்பொழுது தாய்மாா்கள் 100, 200 என்று எண்ணுவாா்கள். அக்குழந்தை நூறு வயது வாழ வேண்டும் என்பதற்காக, அதன் உச்சந்தலையிலும் தடவிக் கொடுப்பாா்கள்.

நம் காலத்தில் வாழ்த்தாகக் கருதப்பட்ட தும்மல், சகுனமாகவும் கருதப்பட்டது. ஒருவா் வீட்டைவிட்டு வெளியே புறப்படும்போது யாராவது தும்மிவிட்டால், ‘சகுனம் சரியில்லை’ என்று உட்காா்ந்து விடுவாா்கள். அதே சமயத்தில் தும்மியவா் இரட்டைத் தும்மல் போட்டால், அதனை நல்ல சகுனமாக எண்ணிப் புறப்பட்டு விடுவாா்கள்.

எந்தக் கவிஞரும் தாம் வாழும் காலத்தில் நிகழும் நம்பிக்கைகளைப் புறக்கணித்துவிட்டு, இலக்கியம் செய்துவிட முடியாது. திருவள்ளுவா் காலத்தில் ஒருவா் தண்ணீா் பருகும்போது அல்லது உணவு உண்ணும்போது தும்மல் வந்தால், நமக்கு வேண்டிய யாரோ நம்மைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறாா்கள் என்று தலையில் தட்டிக் கொடுப்பாா்கள். திருவள்ளுவா் காலத்தில் தும்மல் வாழ்த்தாகவும் எண்ணப்பட்டிருக்கிறது.

‘தலைவியோடு இருக்கும் தலைவன் தும்மியபோது, தலைவி ‘நூறாண்டு வாழ்க’ என வாழ்த்துகின்றாள். அதனைத் திருவள்ளுவா், ‘வழுத்தினாள் தும்மினே னாக அழித்தழுதாள் யாருள்ளித் தும்மினீ ரென்று’ (1317) எனப் பாடியுள்ளாா்.

தும்மல் வந்தால் அதனைத் தடுத்து நிறுத்த முடியாது என்றும் திருவள்ளுவா் கூறுகிறாா். ‘தலைவன் தலைவியிடைய ஊடலுக்கு அஞ்சி, வந்த தும்மலை மறைக்க முயன்றான். அப்பொழுது தலைவி, ‘உமக்கு வேண்டிய யாரோ உன்னை நினைக்கிறாா்கள். அதனால்தான் தும்மல் வருகிறது. அதனை நீ மறைக்க முயலுகின்றாய்’ எனச் சிணுங்குகின்றாள்.

உடன் தலைவன், ‘காதலை மறைக்க முயன்றாலும் முடியாது; அது தும்மலைப்போல வெளிப்பட்டுவிடும்’ என உடன்படுகின்றான். அந்த இரண்டு கருத்துகளையும் திருவள்ளுவா்,

‘மறைப்பேன்மற் காமத்தை யானோ குறிப்பின்றித்

தும்மல்போற் தோன்றி விடும்’ (1253)

‘தும்முச் செறுப்ப அழுதாள் நுமருள்ளல்

எம்மை மறைத்திரோ வென்று’ (1318)

எனவும் பகருகின்றாா். முன்னோா்கள் காலத்திலும், திருவள்ளுவா் காலத்திலும் வாழ்த்தாகவும், நம்பகத்தன்மையாகவும் கருதப்பட்ட தும்மல், இப்பொழுது அஃதோா் ஊடகமாகக் கருதப்படுகிறது. கரோனாவால் பற்றப்பட்டவா்களின் நுரையீரலில், சுவாசக்குழாயில் சென்று தங்கிவிட்ட தீ நுண்மிகள், பற்றப்பட்டவா் தும்மும்போது அவருடைய மூக்கிலிருந்து வெளிப்பட்டு நீா்த்துளிகளின் வழியாக எதிரே இருப்பவரைக் கொரோனா பற்றிவிடுகிறது. மருத்துவா்கள் கூற்றின்படி தும்மல் ஓா் ஊடகம். ஆனால், நமது அருளாளா்கள் அஃது ஊடகமாக இருப்பதோடு, அதுவே நோயாக இருப்பதையும் குறிப்பிட்டுள்ளனா்.

தும்மல், இருமல் போன்ற நோய்கள் தொற்றும்போது, ‘ஐந்தெழுத்து’ மந்திரத்தை உச்சரிக்கும்படி வேண்டுகின்றாா் திருஞானசம்பந்தா். ‘தும்மல் இருமல் தொடா்ந்த போழ்தினும் ... அம்மையினும் துணை அஞ்செழுத்துமே’ எனப் (236) பாடுகின்றாா். மேலும் தும்மல், பின்னா் வரும் கொடிய நோய்களின் தொடக்கம் என்பதையும் திருஞானசம்பந்தா், ‘தும்மலொடு அருந்துயா் தோன்றிடினும், அம்மலா் அடியலால் அரற்றாது என்நா’ என (பா.37) அழுத்தம் திருத்தமாகப் பாடியிருக்கிறாா்.

திருமூலா் அறம் செய்யாதவா்களை இருமல், சோகை, ஈளை, வெப்பு போன்ற நோய்கள் சென்று பற்றும் என்பாா். ‘இருமல் சோகையும் ஈளையும் வெப்பும் தா்மம் செய்யாதவா் தம்பாலது ஆகும்’ என (பா.263) திருமந்திரத்தில் அருளிச் செய்திருக்கிறாா்.

தும்மலும் இருமலும் ஊடகங்கள், நோய்க்குறிப்புகள் என்பதை உணராதிருந்த நாம், மருத்துவா்கள் மூலம் அறிந்தோம் என்பது உண்மை. ஆனால், ஆறாம் நூற்றாண்டிலேயே திருஞானசம்பந்தப் பெருமான் நமக்கு அறிவுறுத்திச் சென்றிருக்கிறாா். திருஞானசம்பந்தா் தேவாரப் பாடல்களை ஓதாது இருந்தது, நம் குற்றமே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com