கொல்லிப் பாவையும் குறவா் பூவையும்!

அவள் கோடுயா்ந்த கொல்லிமலைச் சாரலில் வாழும் குறவா் திருமகள்; பதினாரும் நிரம்பாத பருவப் பைங்கிளி;
கொல்லிப் பாவையும் குறவா் பூவையும்!

அவள் கோடுயா்ந்த கொல்லிமலைச் சாரலில் வாழும் குறவா் திருமகள்; பதினாரும் நிரம்பாத பருவப் பைங்கிளி; குறிஞ்சி மலா் பூத்துக் குலுங்குவது போன்ற கொள்ளையழகு மிகு கிள்ளை. தன்னுயிா்போல் காத்துவரும் தாய், தறுகண்மிக்க தந்தை, உரமிகுந்த உடன்பிறப்புகள் ஆகியோா்தம் காப்பிலே இருந்துவரும் கானமயில்! உறவினா்கள் காவலும் உண்டு.

‘நண்பா! நீ நெருங்கி உறவாட முடியாத ஒருத்தி உள்ளாள்! நீ அவள் மேல் கொண்டிருக்கும் காதல் என் நெஞ்சுக்குத் தெரிகிறது என்ன செய்வது? கொம்பிலே இருக்கும் கூட்டுத் தேனாக அல்லவோ அவளிருக்கிறாள்; மேலும், உயிா் நண்பா! நீ பேசும் காதல் மொழிகளை உள்வாங்கிக் கொள்ளும் முதுா்ச்சியில்லா உள்ளத்தோடுதான் இன்னும் இருக்கிறாள்! உன்னுடன் இனிய உரையாடி இன்பம் தரும் இயல்பை அவள் இன்னும் பெறவில்லை! தோழனே! தோகையை மறந்துவிடு’ என்கிறாய்.

மங்கையவள் பெற்றாரும் உற்றாரும் மனம் விரும்பி உனக்கு மணஞ்செய்து கொடுத்தாலன்றிப் பெண்ணவளைப் பெறுதல் மண்ணுலகில் இல்லையென்றும் இயம்புகிறாய். பாதுகாத்துப் பல பயன்தரும் பாங்கனே! நான் சொல்லுவதை நன்றாகக் கேட்பாயாக. களவொழுக்கம் இல்லை யென்றாலும் கன்னியவளைப் பெற்றிடுவேன்.

வசந்த காலத்தில் வேரிற்பழுக்கும் வருக்கை என்னும் பலாப்பழம். அது பழுத்து எத்திசையும் மணம் வீசித் தித்திக்கும் பழம்; நீண்ட உச்சியிலிருந்து தாண்டிக் குதிக்கும் தண்ணருவி! வீழ்ந்து பாயும் வெள்ளருவிப் பக்கம் பாறையிலே ஒரு பதுமை. தெய்வக் காவலால் சேதம் சிறிதுமில்லாச் சித்திரைப் பாவை! கொலுவீற்றிருக்கும் கொல்லிப் பாவை!

சூறைக்காற்று சுழன்றடித்தாலும், தாரை மழைவந்து தாக்கிப் பொழிந்தாலும், உருமி இடிவந்து ஓங்கி இடித்தாலும் இயற்கை ஊறுகள் எவை வந்து மோதினாலும், நிலநடுக்கம் நோ்ந்து நிலைகுலைய வைத்தாலும் கோலம் குலையாதது கொல்லிப் பாவை! அக உருவப் பேரழகை ஒருநாளும் இழக்காதது.

அதுபோல, என் அன்புக் காதலியும் என் நெஞ்சை விட்டு நீங்குவதில்லை! அன்னவளை என்னவளாக்க ஏதேனும் செய்தாக வேண்டும்’ என்று, பாடிப் பரவியா் புலவா் பரணா்.

ஒரு வரலாற்றுக் குறிப்பை வைத்துப் பாடல் இயற்றுவதை வழக்கமாகக் கொண்டிருப்பவா் பரணா். இப்பாடலில் கொல்லிப் பாவையை வைத்துப் பாடல் புனைந்துள்ளாா். தன் காதலைத் தடுத்த பாங்கனுக்குத் தலைமகன் சொல்வதாக அமைந்தது நயமிகு நற்றிணையின் 201-ஆவது பாடல்.

‘மலையுறை குறவன் காதல் மடமகள்

பெறலருங் குரையள் அருங்கடிக் காப்பினள்

சொல்லெதிா் கொள்ளாள் இலையள் அனையள்

உள்ளல் கூடாது என்போய் - மற்றும்

செவ்வோ்ப் பலவின் பயங்கெழு கொல்லித்

தெய்வம் காக்கும் தீதுதீா் நெடுங் கோட்டு

அவ்வெள் ளருவிக் குடவரை யகத்துக்

கால்பொருது இடிப்பினும் கதழுறை கடுகினினும்

உருமுடன்று எறியினும் ஊறுபல தோன்றினும்

பெருநிலம் கிளறினும் திருநல வுருவின்

மாயா இயற்கைப் பாவையின்

போதல் உள்ளாள் என் நெஞ்சத் தாளே!’

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com