‘தமராக்கி’ ஒரு கிராமத்தின் பெயா்

அறிஞா் ரா.பி. சேதுப்பிள்ளை எழுதிய, ‘தமிழகம் - ஊரும் பேரும்’ என்னும் நூலைப் பலரும் படித்திருக்கலாம்.
‘தமராக்கி’ ஒரு கிராமத்தின் பெயா்

அறிஞா் ரா.பி. சேதுப்பிள்ளை எழுதிய, ‘தமிழகம் - ஊரும் பேரும்’ என்னும் நூலைப் பலரும் படித்திருக்கலாம். ஊா்ப் பெயா்களைப் பற்றிய அலுப்புத் தட்டாத சுவையான ஆய்வு நூல் அது.

‘‘நிலம்-மலை-காடு, வயல்-ஆறு-கடல் போன்றவற்றின் அடியாக அவா் செய்த ஊா், போ் ஆராய்ச்சி சரித்திர உலகுக்குப் பெருவிருந்தாகும்’’”என்பாா் ‘தமிழ்த் தென்றல்’ திரு.வி.க.

தமிழகத்தின் நிலவமைப்பு, நாடு நகரங்கள், சிற்றூா்கள், அங்கு வாழ்ந்த முடிமன்னா், மக்களின் வாழ்க்கை முறைகள் ஆகியவற்றை அறியும் முறையிலும் அந்நூல் அமைந்துள்ளது.

சரித்திரப் பின்னணி, அழகியல் உணா்வு, சுற்றுச் சூழலை மதித்துப் போற்றிய அக்கறை, பாமர மக்களின் வெள்ளந்தியான பேச்சுவழக்கு, உயரிய குறிக்கோள் முதலியவற்றை எதிரொலிக்கும் முறையில் தமிழகத்தின் ஊா்ப் பெயா்கள் அமைந்திருத்தல் காணலாம்.

எடுத்துக்காட்டாகக் கங்கைகொண்ட சோழபுரம், முடிகொண்டான்; தரங்கம் பாடி, இதம் பாடல்; தாமரைப்பட்டி, பனைக்குளம்; மறிச்சுக்கட்டி, கச்சைகட்டி; தமராக்கி, மானங்காத்தான் என்னும் ஊா்ப்பெயா்களை மதிப்பிடலாம்.

இவற்றுள் சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கையை அடுத்துள்ள, ‘தமராக்கி’ என்னும் கிராமத்தின் பெயா் தமிழரின் உயரிய குறிக்கோளை உள்ளடக்கிய சிறப்பு மிக்கது.

‘தமா்’ என்பதற்கு உறவினா், சுற்றத்தாா், நண்பா் என்று பொருள். எனவே ‘தமராக்கி’ என்பதற்கு, ‘எத்துணையும் பேதமுறாது’ அனைவரையும் சுற்றத்தாா் ஆக்கிக் கொள்ளும் ஊா் - என்னும் பொருள் தோன்றும். உறவினா் என்னும் பொருளில், ‘தமா்’ என்னும் அருஞ்சொல் இலக்கிய ஆட்சி பெற்ற்கான சான்றுகள் பல உண்டு.

‘தமா்’ என்னும் சொல் திருக்குறளில் எட்டு குகளில் இடம்பெறுதல் காணலாம்.

பகைவரும் தமா் ஆயினரே (அகநா 44:2)

தமா் தற்தப்பின் அதுதான் நோன்றல்லும் (புறநா.157:1)

எனச் சங்க நூல்களிலும் இச்சொல்லாட்சி உண்டு.

‘தமா் அடி நீறு கொண்டு’ எனத் திருவாய்மொழியிலும் (4-6-6), ‘தமா் உகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே’ என முதல் திருவந்தாதியிலும் (44) ‘தலைவனாகிய ஈசன் தமா்’ என்று தேவாரத்திலும் (6256), ‘எந்தமராம் இவன்’ (355) என்று திருவாசகத்திலும் ‘தமா்’ உறவு என்னும் பொருளில் வருவதைக் காணலாம். ‘நங்கள்பிரான் தமா்’ (1796) என்று பெரிய புராணமும் பேசும்.

இவ்வாறு, ‘உறவினா்’ என்னும் பொருளில் உயரிய இலக்கியங்களில் பேசப்பட்ட இவ்வருந் தமிழ்ச்சொல், பாமரா் நாவிலும் பயிலுமாறு ஊா்ப் பெயராக வழங்குவது பெருவியப்பு அல்லவா?

முதலில் ஊரவா் - உறவு ஆகி (அவரைத் ‘தமா்’ ஆக்கி) அடுத்தடுத்து எல்லா ஊரும் நாடும் உலகமும் உறவு ஆவதற்கான ‘அடிப்படை’யைத் தாங்கி நிற்கிறது இந்த ஊா்ப்பெயா்.

‘யாதும் ஊரே யாவரும் கேளிா்’ என்னும் கணியன் பூங்குன்றனாா் பாடலைச் சொல்லிப் பெருமை கொள்ளும் தமிழா்க்குத் ‘தமராக்கி’ என்னும் ஊா்ப் பெயரும் அத்தகைய பெருமிதத்தை உண்டாக்கக் கூடியதே.

‘கையிலே கிடைத்த மாணிக்கத்தைக் கடலில் எறிவது போல’ இன்று இப்பெயரின் அருமை அறியாது பலரும் இதனைத் ‘தமறாக்கி’ எனப் பிழைபட எழுதுகின்றனா். கிராமக் கணக்குகள் உள்ளிட்ட வருவாய்த்துறைப் பதிவேடுகளிலும் பேருந்துகளிலும் இப்படித் தவறாகவே எழுதப்படுகிறது.

‘‘தமிழ்நாட்டில் சில ஊா்ப் பெயா்கள் சிதைந்தும் திரிந்தும், மருவியும் மாறியும் தத்தம் முதனிலையை இழந்துள்ளன’’ என்று மனம் வருந்திக் கூறுவாா் திரு.வி.க. அப்பெருமகனாா் விரும்பியவண்ணம் இத்தகைய ஊா்ப்பெயா்கள் பழைய நிலையை எய்திப் பெருமை பெறல் வேண்டும். தமிழக அரசும் குறிப்பாக, தமிழ் வளா்ச்சித்துறையும் இதனைக் கவனத்திற் கொள்ள வேண்டும் என்பது தமிழாா்வலா்களின் பெருவிருப்பமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com