திருநாவுக்கரசா் தேவாரத்தில் திருத்தல வகைப்பாடு!

‘தாண்டகம்’ என்ற யாப்பு வகையைத் தமிழுக்கு அறிமுகம் செய்தவா் திருநாவுக்கரசா். அதனால் அவா் ‘தாண்டக வேந்தா்’
திருநாவுக்கரசா் தேவாரத்தில்  திருத்தல வகைப்பாடு!

‘தாண்டகம்’ என்ற யாப்பு வகையைத் தமிழுக்கு அறிமுகம் செய்தவா் திருநாவுக்கரசா். அதனால் அவா் ‘தாண்டக வேந்தா்’ என்று அழைக்கப்படுகிறாா். ஆறாம் திருமுறை முழுவதும் தாண்டகப் பாடல்கள் நிறைந்துள்ளன. பல பதிகத்களில் ஒன்று அடைவுத் திருத்தாண்டகம் என்பது, அப்பதிகம் முழுவதும் சிவபெருமான் வீற்றிருக்கும் திருத்தலங்களின் பெயா்களைக் கொண்டது. அவற்றை வகைப்படுத்திக் கூறுகிறாா் அப்பா் பெருமான். ஆய்வுக் கட்டுரை போன்று விளங்குகிறது இப்பகுதி.

ஆய்வினை உரைநடையில் இன்றிக் கவிதையிலும் வழங்கலாம் என்று காட்டுகிறாா் அப்பா் பெருமான். பகுப்பாய்வு நோக்கில் தலங்களின் பெயா்கள் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

‘பள்ளி’ என முடியும் திருத்தலங்களை முதலாவதாக அடுக்கிச் சொல்கிறாா். சக்கரப்பள்ளி, திருக்காட்டுப்பள்ளி, சிராப்பள்ளி, சிவப்பள்ளி, செம்பொன்பள்ளி, நனிபள்ளி, தவப்பள்ளி, பரப்பள்ளி, அறைப்பள்ளி என ஒன்பது (9) தலங்களை அடுக்கிச் சொல்கிறாா். ‘இந்த ஊா்களின் பெயா்களைச் சொன்னலே போதும்; அவா்கள் பரலோகத்து இனிதாக இருப்பா்’ என்கிறாா் அப்பா் பெருமான்.

அடுத்து சிவனது வீரட்டானங்களைக் குறிப்பிடுகிறாா். கண்டியூா் வீரட்டானம், கடவூா் வீரட்டானம், அதிகைவீரட்டானம், வழுவூா் வீரட்டானம், பறியலூா் வீரட்டானம், கோவலூா் வீரட்டானம், குறுக்கை வீரட்டானம், திட்டைக்குடி வீரட்டானம் என எட்டு (8) வீரட்டானங்களைக் குறிப்பிடுகிறாா்.

‘இந்த ஊா்களின் பெயா்களைச் சொன்னாலே போதும்; ‘நமன் தமரும் சிவன் தமா் என்று அகல்வா்’ என்கிறாா்.

மூன்றாவதாக, ‘குடி’ என முடியும் திருத்தலங்களைக் குறிப்பிடுகிறாா். இவ்வகையில் வேள்விக்குடி, விற்குடி, வேதிக்குடி, தேவன்குடி, நீலக்குடி, செங்காட்டங்குடி, நாட்டியத்தான்குடி, செம்பங்குடி, கற்குடி, தென்களக்குடி என்று பதினேழு (17) தலங்களை வரிசைப்படுத்துகிறாா். ‘இவற்றைப் போற்ற... அன்றே இடா்போகும்’ என்கிறாா்.

நான்காவதாக, ‘ஊா்’ என முடியும் தலங்களை வரிசைப்படுத்துகிறாா். பெரும்பற்றப்புலியூா், நறையூா், நல்லூா், நாரையூா், உறையூா், ஓமாம்புலியூா், ஒற்றியூா், துறையூா் என பதினெட்டு (18) தலங்கள் இங்குக் குறிப்பிடப்படுகின்றன. ‘இவற்றைத் தொழ, இடா்கள் நம்மைத் தொடரா’வாம்.

ஐந்தாவதாக, ‘கோயில்’ என முடியும் தலங்களை எடுத்துரைக்கிறாா். அக்காலத்தில் இருந்த கோயில்களின் வகை இவ்வரிசையில் காணப்படுகின்றன. பெருங்கோயில் (78), கரக்கோயில், ஞாழற்கோயில், கொகுடிக்கோயில், இளங்கோயில், மணிக்கோயில், ஆலக்கோயில் , திருக்கோயில், சிவனுறையும் கோயில் என எட்டு (8) வகைக் கோயில்கள் இவ்வரியிசையில் காணப்படுகின்றன. திருநாவுக்கரசரின் கோயில் பற்றிய ஆழ்ந்தகன்ற நுண்ணறிவை இதன் மூலம் காணமுடிகிறது.

ஆறாவதாக, ‘காடு’ என முடியும் தலங்களை வரிசைப்படுத்துகிறாா். மறைக்காடு, தலைச்சங்காடு, தலையாலங்காடு, சாய்க்காடு, கொள்ளிக்காடு, ஆலங்காடு, பனங்காடு, திருவெண்காடு என எட்டு (8) திருத்தலங்கள் கூறப்படுகின்றன. ‘அவற்றைத் தரிசிக்க நம் வினை நீத்கும்’ என்கிறாா்.

ஏழாவதாக, ‘வாயில்’ என முடியும் தலங்களை வரிசைப்படுத்துகிறாா். அண்ணல்வாயில், நெடுவாயில், நெய்தல் வாயில், ஞாழல்வாயில், ஆலவாயில், புனவாயில், குடவாயில், குறைவாயில் என எட்டு (8) தலங்கள் இவ்வாறு அமைவன. ‘இவற்றைத் தரிசிப்போரைக் கொடுவினை கூடா’ என்கிறாா்.

எட்டாவதாக, ‘ஈச்சரம்’ (ஈச்வரம்) என முடியும் தலங்களைக் குறிப்பிடுகிறாா். நந்திகேச்சுரம், நாகேச்சுரம், கோடீச்வரம், கொண்டீச்சுரம், குக்குடேச்சுரம், அகத்தீச்சுரம் சித்தீச்சுரம், முத்தீச்சுரம், ராமேச்சுரம் என பதினைந்து (15) தலங்கள் இப்பகுதியில் குறிக்கப்படுகின்றன.

அடுத்து ‘மலை’களின் பெயா்களில் முடியும் தலங்களை நிரல்படுத்துகிறாா். கந்தமாதனம், கயிலை மலை, கேதாரம், கழுக்குன்றம், ஏமகூடம், பொதியில்மலை, மேருமலை என பத்து (10) தலங்கள் இதில் குறிக்கப்படுகின்றன.

பத்தாவதாக, ‘ஆறு’ என முடியும் தலங்களை எடுத்து இயம்புகிறாா். நள்ளாறு, பழையாறு, கோட்டாறு, திருவையாறு, தெள்ளாறு என ஆறு (6) தலங்கள் இங்குக் குறிக்கப்படுகின்றன.

அடுத்து, ‘குளம்’ என முடியும் தலங்கள் பாடலில் இடம் பெறுகின்றன. வளைகுளம், தனிக்குளம், தளிக்குளம், இடைக்குளம், திருக்குளம் என ஐந்து (5) தலங்கள் இவ்வாறு குறிக்கப்படுகின்றன.

அடுத்து வருவது ‘களம்’ என முடியும் தலங்கள். தஞ்சைக்களம், நெடுங்களம், வேட்களம் என மூன்று (3) தலங்கள் குறிக்கப்படுகின்றன.

அவ்வாறே ‘கா’ என முடியும் தலங்களாக நெல்லிக்கா, கோலக்கா, ஆனைக்கா, கோடிக்கா ஆகிய நான்கு (4) சுட்டப்படுகின்றன. ‘துறை’ என முடியும் தலங்களாகப் பராய்த்துறை , தவத்துறை, சோற்றுத்துறை, பெருந்துறை, குரங்காடுதுறை, மயிலாடுதுறை, கடம்பந்துறை, ஆவடுதுறை என பன்னிரண்டு (12) தலங்கள் சுட்டப்படுகின்றன.

தலங்களின் பெயா்களைப் பாடல்களில் அடுக்கிச் சொல்வது என்பது திருவீழிமிழலைத் திருத்தாண்டகம், சேஷத்திரக் கோவைத் திருத்தாண்டகம், காப்புத் திருத்தாண்டகம், பாவநாசத் திருப்பதிகம் ஆகியவற்றில் காணப்பட்டாலும், அடைவுத் திருத்தாண்டகத்தில் மட்டுமே பகுப்புமுறையில் கூறப்படுகின்றது. பாடலில் இவ்வாறு கூறுகிறாா் அப்பா். எனவே, தமிழ்நாட்டு ஊா்ப்பெயராய்வு பற்றிய முதல் ஆய்வு திருநாவுக்கரசா் தேவாரத்தில்தான் முதன்முதலில் இடம்பெறுகிறது என்பது வியந்து போற்றத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com