எண்ணலங்கார நேர்த்தி!

தமிழ்ப் புலவா்கள் பாடிய பாடல்கள் பல எண்ணியெண்ணி இன்புறத்தக்கதாக விளங்குகின்றன. அதற்குக் காரணம், அருமையான பாடு பொருள், அற்புதமான சொற்பதங்கள், அழகான செய்யுள் அமைப்பு முறை.
எண்ணலங்கார  நேர்த்தி!

தமிழ்ப் புலவர்கள் பாடிய பாடல்கள் பல எண்ணியெண்ணி இன்புறத்தக்கதாக விளங்குகின்றன. அதற்குக் காரணம், அருமையான பாடு பொருள், அற்புதமான சொற்பதங்கள், அழகான செய்யுள் அமைப்பு முறை.
திருமந்திரப் பாயிரத்தில் திருமூலர் "சிவபெருமான் ஒருவரே கடவுள்' என்பதையும்,  இறைவனின் பெருமையையும் எண்ணலங்காரத்தில் மிக அருமையாகக் குறிப்பிடுகிறார். 

"ஒன்றவன் தானே; இரண்டவன் இன்னருள்;
நின்றனன் மூன்றினுள்; நான்கு உணர்ந்தான்; ஐந்து
வென்றனன்; ஆறு விரிந்தனன்; ஏழும்பர்ச்
சென்றனன்; தானிருந்தான் உணந்து எட்டே!'
ஒன்று - சிவபெருமான் ஒருவனே கடவுள்; 


இரண்டு- அவனருளும்(சக்தி) அவனும்; மூன்று - அரன், அரி, அயன் என்னும் மூவர் உள்ளும் சிவபெருமான் நிலைபெற்றிருக்கிறான்; நான்கு - உலக அதீதன், உலக காரணன், உலகிற்கு உயிராய் இருப்பவன், உலக வடிவாய் இருப்பவன்; ஐந்து- ஐம்பொறிகளையும் இயல்பாக வென்றவன்; ஆறு - ஆறு ஆதாரங்களாகவும் அந்த ஆதாரங்களுக்குக்குரிய தேவதைகளாகவும், ஆறு அத்துவாக்களாகவும் விரிந்து நிற்பவன்; ஏழு - ஆறு ஆதாரங்களுக்கு மேற்பட்ட ஏழாவதாகிய துவாதசாந்தப் பெருவெளியில் விளங்குபவன்; எட்டு - மண், புனல், அனல், கால், வெளி, சூரியன், சந்திரன், ஆன்மா என்னும் அட்டமூர்த்தியாக உணரப்பெற்று, அவற்றுள் கலந்து இருப்பவன்' என்பது இப்பாடலின் (சித்தாந்த சரபம் கு.வைத்தியநாதன், பன்னிரு திருமுறைகளில் சைவ சித்தாந்தம்) விளக்கம்.

மேற்கண்ட திருமந்திரப் பாடல் ஏறுமுகமாக அமைந்த எண்களைக் கொண்டது. 

அதேபோல, திருப்பரங்கிரி புராணத்தில் கணபதியைப் போற்றும் ஒரு பாடல் ஒன்று, இரண்டு மூன்று என எண்கள் ஏறுமுகமாக வருமாறும்; அதே சமயம் ஆனைமுகனைத் துதிக்கும்வண்ணம் "ஆனை' என்று வரும்படியும் அமைந்தது.

"வஞ்சகத்தில் ஒன்றானை, துதிக்கை 
    மிகத் திரண்டானை வணங்கார் உள்ளே
அஞ்சரண மூன்றானை, மறைசொலும் 
    நால்வாயானை அத்தனாகித்
துஞ்சவுணர்க் கஞ்சானை, சென்னியணி 
    ஆறானைத் துகள் ஏழானைச்
செஞ்சொல் மறைக்கெட்டானைப் பரங்கிரிவாழ்
     கற்பகத்தைச் சிந்தை செய்வாம்'


ஆனைமுகனைப் பற்றிய பாடல் போலவே ஆறுமுகனைப் பற்றிய குற்றாலக் குறவஞ்சிப் பாடல் ஒன்று. முருகப்பெருமானின்  புகழ்பாடும் இப்பாடலோ பன்னிரண்டு, பதினொன்று, பத்து, ஒன்பது என எண்கள் இறங்குமுகமாக அமைந்து இனிமை பயக்கின்றது. 

பன்னிருகை வேல்வாங்க, பதினொருவர்
     படைதாங்கப் பத்துத் திக்கும்
நன்நவ வீரரும் புகழ மலைகள் எட்டும்,
     கடல் ஏழும் நாடி ஆடி
பொன்னின்முடி ஆறுஏந்தி, அஞ்சுதலை
     எனக்கொழித்துப் புயநான் மூன்றாய்த்
தன்இரு தாள்தரும் ஒருவன் குற்றாலக்
     குறவஞ்சி தமிழ் தந்தானே!


பன்னிரு கரங்கள் கொண்ட முருகப்பெருமான் தன் பன்னிரண்டாவது கையில் வேலைத் தாங்கியுள்ளான். பிற பதினொரு கைகளிலும் ஏகாதச உருத்திரர்கள் - தோமரம், கொடி, வாள், குலிசம், அம்பு, அங்குசம், தாமரை, தண்டு, வில், மணி, மழு ஆகிய  பதினொரு படைக்கலன்களாக விளங்குகின்றனர். பத்துத் திசைகளிலும் (எண்திசை, விண், பாதாளம்) வீரவாகு உள்ளிட்ட நவவீரர்கள் புடைசூழ "அஷ்டகுலாசலங்கள்' என்னும் எட்டு மலைகளும், "சப்த சமுத்திரங்கள்' என்னும் ஏழு கடல்களும் விரும்பி வலம் வந்தவன் ஆறு தலைகளை உடைய குமரப்பெருமான். அவன் "அஞ்சேல்' என அருள்பவன். நான்கும் மூன்றும் (4ல3)பெருகிய பன்னிரு தோளன். பாதம் இரண்டையும் அடைக்கலமாகத் தரும் ஒருவன். 

எண்ணற்ற பெருமைகள் கொண்ட இறைவனை எண் அலங்காரத்தில் போற்றும் இம்மூன்று பாடல்களும் படித்து இன்புறத்தக்கவை. இவைபோன்று எண்ணலங்காரப் பாடல்கள் இன்னும் இருக்கின்றன எண்ணிலடங்கா...

- திருப்புகழ் மதிவண்ணன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com