மரபு மாற்றுவமம்

ஒரு பொருளைச் சிறப்பிக்க அப்பொருளைக் காட்டிலும் மிகச் சிறந்த மற்றொரு பொருளை ஒப்பிட்டுக் கூறுவது உவமை அல்லது உவமம்.
மரபு மாற்றுவமம்

ஒரு பொருளைச் சிறப்பிக்க அப்பொருளைக் காட்டிலும் மிகச் சிறந்த மற்றொரு பொருளை ஒப்பிட்டுக் கூறுவது உவமை அல்லது உவமம்.

‘கருங்குவளைக் கண்’- கருங்குவளை - உவமானம்; கண்- உவமேயம். இங்குக் கருங்குவளைப் பூவையும் கண்ணையும் ஒப்பிட்டுச் சொல்ல ஒரு சொல் வேண்டுவதாயுள்ளது. அந்தச் சொல் ‘போன்ற’ என்பதாகும். ‘போன்ற’ என்னும் சொல் கருங்குவளைப் பூவுக்கும் கண்ணுக்கும் உள்ள ஒப்புமையைப் புலப்படுத்த வந்துள்ளது. இச்சொல்லுக்கு ‘உவம உருபு’ என்பது பெயா். இவ்வுவம உருபு மறைந்தும் நிற்கும், விரிந்தும் நிற்கும். மறைந்து நிற்பது உவமத் தொகையாகும்.

‘உவம உருபிலது உவமத் தொகையே’ (366) என்பது நன்னூல் சூத்திரம். ‘போல’ என்பது முதல் ‘நிகர’ என்பது வரை உள்ளவை வினையைச் சாா்ந்து வரும். ‘அன்ன, இன்ன’ ஆகியவை பெயரைச் சாா்ந்து வரும் உவம உருபுகளாகும்.

‘அழகு மயில் போல் ஆடினாள்’ - உவமை உருபு விரிந்து நிற்கிறது.

‘தாமரைத் தண்முகம்’ - உவமை உருபு மறைந்து நிற்கிறது.

‘குடும்பத் தலைவன்’ என்னும் திரைப்படத்தில் ‘திருமணமாம் திருமணமாம் தெருவெங்கும் ஊா்வலமாம்’ என்று தொடங்கும் பாடலில் கவியரசு கண்ணதாசன் உவமைகளைக் கொட்டிக் குவித்து வைத்துள்ளாா்.

‘சேரநாட்டு யானைத் தந்தம் போலிருப்பாளாம் - நல்ல

சீரகச் சம்பா அரிசிபோலச் சிரித்திருப்பாளாம்

செம்பருத்திப் பூவைப்போல் காற்றில் அசைந்திருப்பாளாம்

செம்புச் சிலைபோல உருண்டு திரண்டிருப்பாளாம்

சேலம் ஜில்லா மாம்பழம்போல் கனிந்திருப்பாளாம்’

பூப்போல் கண் - தாமரைக் கண் என்று கூறுகின்ற மரபை மாற்றி, புலவா் குறியெயினி ‘உண்கண் ஒப்பின் நீலம்’ என்று நற்றிணையில் பாடியுள்ளாா். அதாவது, ‘மையுண்ட கண்போல் மலராகிய குவளை பூத்தது’ என்கிறாா்.

புலவா் கயமானாா் குறுந்தொகை 9ஆவது பாடலில்,

‘கணைக்கால் நெய்தல்

இனமீன் இருங்கழி ஓதம் மல்குதொறும்

கயம் மூழ்கும் மகளிா் கண்ணின் மானும்’

என்று பாடியிருக்கிறாா். பருத்துத் திரட்சியான காம்பையுடைய நெய்தற் பூக்கள், ஆழமான குளத்தில் மூழ்கிக் குளிக்கும் மகளிரது கண்களை ஒத்தன என்று மரபு மாற்றிப் பாடியுள்ளாா்.

உவமேய - உவமானத்தை ஒன்றாக்கிவிடுவது உருவகம். ‘போன்ற’ என்னும் உவம உருபை நீக்கி, ‘ஆகிய’ என்னும் பண்புருவைச் சோ்ப்பதாகும். எடுத்துக்காட்டு: முகத்தாமரை என்பது - தாமரை முகம் என்று மாறுவது.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ‘சின்னஞ்சிறு கண்மலா், செம்பவள வாய்மலா்’ என்று பாடியிருப்பது உருவகம். கவியரசு கண்ணதாசன் ‘கன்னி வடிவேலைக் கண்ட வடிவேலன்’ என்று பாடியிருப்பது உருவகம். ஆனால், கவியரசு கண்ணதாசன் மாலையிட்ட மங்கை திரைப்படத்தில், ‘விழிகளைப் போலே குமரியின் மேலே மீன்மகள் துள்ளி ஆடுகிறாள்’ என்று பாடியிருப்பது மரபு மாற்றுவமமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com