முகப்பு வார இதழ்கள் தமிழ்மணி
ஒரு நூற்றாண்டு கடந்த வீறு கவி!
By - தமிழாகரர் தெ. முருகசாமி | Published On : 04th October 2020 07:42 PM | Last Updated : 04th October 2020 07:42 PM | அ+அ அ- |

இலக்கியம் ஒரு வாழைத்தோட்டம். அது ஈனும் வாழையான கவிஞர்கள் இளம் வாழையாய், இனிக்கும் வாழையாய், செவ்வாழையாய் எனப் பலதரப்பட்டவராய் இருப்பர். அவர்களுள் மகாகவி பாரதியைப் பாட்டனாய், பாவேந்தரைத் தந்தையாய் வாழையடி வாழையாய்ப் பெற்ற மலை வாழைப் பெயரக் (பெயரன்) கவிஞர்தான் 7.10.2019-இல் காரைக்குடியில் நூற்றாண்டு கண்ட முடியரசனார்.
""எனக்குப் பின் என் மூத்த வழித்தோன்றல் முடியரசனே'' எனப் பாவேந்தரால் பாராட்டப்பட்ட முடியர
சரின் நூற்றாண்டு 7.10.2020-இல் முடிவடைகிறது.
சென்றாண்டு காரைக்குடியில் "முடியரசன் தமிழ் அவைக்களம்' நூற்றாண்டை நடத்தியபோது, ஒரு நூறு கவிஞர்களுக்கு முடியரசர் விருது வழங்கி காரைக்குடிக்கே புதுப்புகழ் சேர்ந்தது. பாவேந்தரைப் போலவே தொடக்கத்தில் முருக பக்தராகப் பாடல் பாடிய கவிஞர், பின்னாளில் பாவேந்தரைப் போலவே பகுத்தறிவுக் கொள்கையால் ஈர்க்கப்பட்டு, தமக்கென ஒரு புதுத்தடம் பதித்துக் கொண்டார்.
7-10-1920-இல் மதுரை மாவட்டம் பெரிய குளத்துக் குஞ்சு மீனாகத் தோன்றிய துரைராசுதான் 1940-இல் மேலைச் சிவபுரி கணேசர் செந்தமிழ்க் கல்லூரிப் பைந்தமிழ் நீச்சல் குளத்தில் நீந்துமீனாய் வளர்ந்து, காலப்போக்கில் 1950 முதலாகக் காரைக்குடி நகரத்தார் ஆண்கள் பள்ளிஎனும் தமிழ்த் தடாகத்தில் வண்டமிழ் வாளை மீனாய் வாழ்ந்தார்.
நிமிர்ந்த தோற்றம், மலர்ந்த முகம், கவர்ச்சி தரும் மீசை, சுருண்ட முடி, துருதுருத்த கண்கள், திறந்த நெஞ்சம், தென்றலான பேச்சுடன் பழகும் பாங்கியல் கொண்டவராய்த் திகழ்ந்தார் முடியரசர்.
"கவிஞன் பிறக்கின்றான்; உருவாக்கப்படுவதில்லை' (டர்ங்ற்ள் ஹழ்ங் ஆர்ழ்ய்; சர்ற் ஙஹக்ங்) என்பதற்கேற்ப முடியரசரும் இலக்கிய உலகில் திராவிட இயக்கக் கவிஞராக அறிமுகமானார்.
தமிழாசிரியர் பணியைத் தவிர பிற எதற்கும் ஆசைப்படாதவராக இருந்தவருக்கு ஒரு தருணத்தில் திரைப்படத் துறைக்குப் போகும் ஆசையால் போனவர், போன இடத்தின் வெறுப்பால் போன சுவடு மறையாத முன்பே திரும்பிவிட்டார். "ஓடி ஒரு காசு சம்பாதிப்பதினும் இருந்த இடத்திலிருந்தே அரைக்காசு சம்பாதிப்பது மேல்' என்றே வாழ்நாள் முழுவதும் வாழ்ந்தார்.
இந்நிலையில் சிறு புயல் ஒன்று உருவாவதுபோல, எம்.ஜி.ஆர்., கவிஞர் முடியரசரை அரசவைக் கவிஞராக்க விரும்பி அழைத்தார். கொட்டிக் கொடுத்தாலும் கோமான்கள் அழைத்தாலும் எட்டிப் பார்க்காத இளம் போத்துச் சிங்கமாய் அழைப்பை மறுத்தார்.
தமிழாகவே வாழ்ந்த அவர், தமிழ்த் தாய்க்குப் பாமாலை சூட்டியே தமிழ் செழிக்க, சாதி சமயமற்ற பகுத்தறிவு வளர்ச்சிக்கே தம்மை ஈகம் (தியாகம்) செய்தவராய், தம் தனித்தன்மையிலிருந்து நழுவாதவராகவே சங்கப் புலவராய், பாடித் திறந்த பறவையாய் 1998 டிசம்பரில் பறந்து விட்டார்!
அவரை நன்கு அறிந்த சட்டப் பேரவைத் தலைவர் முனைவர் கா.காளிமுத்து, 2002-இல் நடந்த பாவாணர் நூற்றாண்டு விழாவில், முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் "முடியரசர் வாழ்ந்த இல்லம் நினைவு மண்டபமாகக் கட்டப்படும்' என்றார். அது நிறைவேறவில்லை.
பின்னர் 30.7.2014-இல் காரைக்குடி சட்டமன்ற அ.தி.மு.க. உறுப்பினர் சோழன் சித. பழனிச்சாமி, முதல்வர் ஜெயலலிதாவிடம், காரைக்குடியில் முடியரசனுக்கு நினைவு மண்டபம் ஒன்று கட்டித்தரக் கோரிக்கை வைத்தார்; அக்கோரிக்கை சட்டமன்ற அவைக் குறிப்பின் பதிவில் மட்டுமே உள்ளது.
மேற்படி இரண்டும் நிறைவேற்றப்படாமலே நிலுவையில் உள்ளன. எனவே, நூற்றாண்டு நிறைவுறும் இத்தருணத்தில் முடியரசனார்க்குத் தமிழக அரசு ஏதேனும் செய்ய அறிவிப்பு செய்தால், அது தமிழுக்கும் தமிழ்க் கவிஞர் மரபுக்கும் புகழ் சேர்த்ததாக அமையும்.
(7-10-2020-இல் கவிஞர்முடியரசனார் நூற்றாண்டு நிறைவடைகிறது)