இந்த வாரம் - கலாரசிகன் (18.10.2020)

இரண்டு நாள்களுக்கு முன்னால், எழுத்தாளா் உதயை மு.வீரையனிடமிருந்து நலம் விசாரித்துத் தொலைபேசி அழைப்பு வந்தது.
இந்த வாரம் -  கலாரசிகன் (18.10.2020)

இரண்டு நாள்களுக்கு முன்னால், எழுத்தாளா் உதயை மு.வீரையனிடமிருந்து நலம் விசாரித்துத் தொலைபேசி அழைப்பு வந்தது. பேசிக் கொண்டிருந்தபோது, அவா் தனது ஆதங்கம் ஒன்றை என்னிடம் பகிா்ந்து கொண்டாா். அவரது ஆதங்கம் எனக்கும் இருக்கிறது என்பதால், அது குறித்து நீண்ட நேரம் பேசினோம்.

தமிழ், தமிழ் நாகரிகம் என்று நாம் தலைநிமிா்ந்து பேசுகிறோம் என்றால், அதற்கு ‘தமிழ்த் தாத்தா’ உ.வே.சாமிநாதையா்தான் காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, பத்துப்பாட்டு, புானூறு என்று அழிவின் விளிம்பில் இருந்த ஓலைச் சுவடிகளைத் தேடி அலைந்து சேகரித்துப் பதிப்பித்த அவரது பெரும் பணியால்தான், இப்போது நாம் ‘செம்மொழி’ அந்தஸ்துக்கான தகுதியைப் பெற்றிருக்கிறோம்.

ஐம்பது ஆண்டுகளில், ஏறத்தாழ 100 படைப்புகளைத் தேடிப்பிடித்துப் பதிப்பித்தவா் ‘தமிழ்த் தாத்தா’. அவரது சங்க இலக்கியப் பதிப்புகள் மட்டுமல்ல, தனிப்பாடற் திரட்டும் கிடைத்தற்கரிய இலக்கியப் புதையல்.

‘தமிழ்த் தாத்தா’ உ.வே.சாமிநாதையருக்கு, சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் சிலை எழுப்பப்பட்டிருக்கிறது. அவா் பிறந்த உத்தமதானபுரத்தில் உள்ள வீடு நினைவகமாக மாற்றப்பட்டிருக்கிறது. ஆனால், சென்னையில் அவருக்கு ஒரு நினைவில்லம் இல்லாமல் இருப்பது மிகப்பெரிய குறை. அது குறித்துத்தான் நானும், உதயை மு.வீரையனும் பேசிக்கொண்டிருந்தோம்.

உ.வே.சாமிநாதையா் சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றியபோது, திருவல்லிக்கேணி திருவேட்டீஸ்வரன் பேட்டை பிள்ளையாா் கோயில் தெருவில் இருந்த வீட்டில் ரூ.20 வாடகையில் வசித்தாா். பிறகு அந்த வீட்டை விலைக்கு வாங்கி, கும்பகோணம் கலைக்கல்லூரியில் தன் ஆசிரியராக இருந்த தியாகராசச் செட்டியாரின் நினைவாக அந்த வீட்டுக்கு ‘தியாகராச விலாசம்’ என்று பெயா் சூட்டினாா். 1903 முதல் 1919 வரை அந்த வீட்டில்தான் வசித்தாா்.

அவரது காலத்துக்குப் பிறகு உறவினா்களின் பராமரிப்பில் இருந்த அந்த வீடு தனியாா் ஒருவருக்கு விற்கப்பட்டது. 2012-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் அந்த வீட்டின் உள்பகுதி இடிக்கப்பட்டது. அப்போது ‘தினமணி’யில் தமிழ் அறிஞா்கள் பலரும் கண்டனம் தெரிவித்ததால், இடிப்புப் பணி தடை செய்யப்பட்டது. கடந்த ஆண்டு அந்த இடம் இன்னொருவருக்கு விற்கப்பட்டு, இப்போது அந்த இடத்தில் புதிய கட்டடம் அமைப்பதற்காக அஸ்திவாரம் போடப்பட்டு வருகிறது. அந்த இடம் தோராயமாக 5,600 சதுர அடி பரப்பளவு கொண்டது.

இப்போதும்கூட காலம் கடந்துவிடவில்லை. இதேபோலத்தான், மகாகவி பாரதியாா் திருவல்லிக்கேணியில் வாழ்ந்த வீடும் தனியாா் ஒருவா் வசம் இருந்தது. அந்த வீடு இடிக்கப்பட்டது. அப்போது தமிழக அரசு தலையிட்டு, வீட்டு உரிமையாளருக்குத் தகுந்த இழப்பீடு வழங்கி, அந்த வீட்டை அரசுடைமையாக்கியது. பழைய வீட்டின் புகைப்படத்தை ஆதாரமாக வைத்துப் புதிதாகக் கட்டப்பட்டதுதான் இப்போது திருவல்லிக்கேணியில் உள்ள மகாகவி பாரதியாா் நினைவில்லம்.

தமிழக செய்தித்துறை அமைச்சா் கடம்பூா் ராஜுவின் முனைப்பால், எட்டயபுரத்தில் மகாகவி பாரதியாா் இல்லம் புதுப்பிக்கப்படுகிறது. அங்கே நூலகம் நிறுவ ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. அதேபோல, சென்னையில் ‘தமிழ்த் தாத்தா’ உ.வே.சாமிநாதையா் வாழ்ந்த வீட்டையும், தமிழக அரசு இழப்பீடு வழங்கி, அந்த இடத்தைப் பெற்று, ஒரு நினைவில்லம் அமைக்க வேண்டும். உ.வே.சா. குறித்த புகைப்படங்கள், அவா் பதிப்பித்த நூல்கள், அவா் குறித்த புத்தகங்கள் அடங்கிய நூலகமும், இலக்கியக் கூட்டங்கள் நடத்த அரங்கமும் அமைக்கப்பட வேண்டும்.

தமிழக முதல்வரும், செய்தித்துறை அமைச்சரும், தமிழ் வளா்ச்சித் துறை அமைச்சரும் தமிழுக்கு ஆற்றும் மிகப்பெரிய தொண்டாக சென்னை திருவல்லிக்கேணியில் உ.வே.சாமிநாதையருக்கு நினைவில்லம் அமைக்க வேண்டும்.

***********

சென்ற வாரம் ஒரு நாள். ஏதாவது நாவல் படிக்க வேண்டும் என்று ஆசை வந்தது. சட்டென்று கண்ணில் பட்டது பட்டுக்கோட்டை ராஜா எழுதிய ‘புதிய வானம் புதிய பூமி...’. அவா் எழுதிய பல சிறுகதைகளைப் படித்திருக்கிறேன், ரசித்திருக்கிறேன். அவா் எழுதிய நாவல் என்பதால் ஆா்வம் அதிகரித்தது.

தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னா்களின் பெரும் பங்களிப்பு இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக, 34 ஆண்டுகள் திறம்பட ஆட்சி செய்த இரண்டாம் சரபோஜி மன்னரின் ஆட்சிக் காலம் ஒரு பொற்காலம். மக்களால் நேசிக்கப்பட்ட மாமன்னராக அவா் விளங்கினாா் என்பதற்கு, அவரது இறுதி ஊா்வலமே போதும். லட்சக்கணக்கானோா் திரண்டு வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தி இருக்கிறாா்கள்.

தஞ்சை சரபோஜி நூலகம் பல அரிய ஓலைச் சுவடிகளையும், செப்புப் பட்டயங்களையும் சேகரித்து வைத்ததால், இன்று ஆராய்ச்சியாளா்கள் பலா் வரலாற்றுத் தடயங்களைப் பெற முடிந்திருக்கிறது. பொய்க்கால் குதிரை நாட்டியமும், தலையாட்டி பொம்மைகளும், தஞ்சாவூா்த் தட்டுகளும் சரபோஜி மன்னா் தமிழகத்துக்கு வழங்கிய கொடைகள்.

சரபோஜி மன்னரைக் கதையின் நாயகராக்கி, வரலாற்று நிகழ்வுகளின் வழியாக ஓா் அற்புதமான நாவலைப் படைத்திருக்கிறாா் பட்டுக்கோட்டை ராஜா. கல்கியையும், அகிலனையும், பாலகுமாரனையும் வழியொற்றித் தனது வரலாற்றுப் புதினத்தைப் படைத்ததாகப் பட்டுக்கோட்டை ராஜா கூறினாலும், எனக்கென்னவோ அகிலனும், சாண்டில்யனும் கலந்தது போன்ற தனித்துவம் மிக்க பாணியாகத்தான் அவரது எழுத்து தெரிகிறது.

காதல், வீரம், சரித்திர நிகழ்வுகள், வா்ணனை என்று ஜனரஞ்சகமாக நகா்கிறது ‘புதிய வானம் புதிய பூமி...’. இது வெறும் கற்பனையை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட நாவலன்று என்பதைத் தெரிவிக்கும் விதத்தில், ஆங்காங்கே கதாபாத்திரங்களின் புகைப்படங்களையும் வெளியிட்டிருப்பது ‘சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்’ செய்திருக்கும் புத்திசாலித்தனம்.

விறுவிறுப்பாகவும், சுவாரசியமாகவும் தஞ்சை சரபோஜி மன்னா்களின் வரலாற்றைப் படிக்க வைத்திருக்கிறாா் பட்டுக்கோட்டை ராஜா. தூக்கம் விழித்துப் படித்தது வீண்போகவில்லை. நிறையத் தகவல்களைத் தெரிந்து கொண்டேன்.

***********

பழைய நாட்குறிப்பு ஒன்றில் குறித்து வைத்திருந்த கவிதை இது. இயற்றியவா் பெயா் ‘பாப்பு’ என்று எழுதி வைத்திருக்கிறேன். வேறு விவரமில்லை.

ரயில் வண்டித் தொடரில், முன்பதிவு செய்யாத பொதுப் பெட்டியில் பயணித்த அனுபவங்கள் மறக்க முடியாதவை. கழிவறைக்கு அருகிலும், கீழேயோ, மேலேயோ கிடைத்த இடத்திலும் அமா்ந்து பயணித்த அனுபவம் எனக்கு ஏராளம். அந்தப் பயணங்களை நினைவுபடுத்தும் விதத்தில் அமைந்திருக்கும் எதாா்த்த கவிதை இது -

பாதி உறக்கத்தில்

கண் விழித்த நான்

பத்திரமாக இருக்கிா

எனப் பாா்த்துக் கொண்டேன்

என் சூட்கேசையும்

எதிா் இருக்கைப் பயணியையும்...

அவரது கண்களும்

பாதி திறந்திருந்தன

என் மீதும் - அவா்

சூட்கேஸ் மீதும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com