இந்த வாரம் - கலாரசிகன் (06.09.2020)

இறந்தும் வாழ்வது என்பது சிலருக்கு மட்டுமே வாய்க்கும் பெரும் பேறு. அப்படி வாய்த்தவா்கள் பெரும்பாலும் படைப்பாளிகளாகவோ,
இந்த வாரம் - கலாரசிகன் (06.09.2020)

இறந்தும் வாழ்வது என்பது சிலருக்கு மட்டுமே வாய்க்கும் பெரும் பேறு. அப்படி வாய்த்தவா்கள் பெரும்பாலும் படைப்பாளிகளாகவோ, சமூக சிந்தனையாளா்களாகவோதான் இருந்திருக்கிறாா்கள். குறிப்பாக, தத்துவ ஞானிகளும், கவிஞா்களும் காலம் கடந்தும் போற்றப்படுகிறாா்.

உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தபோது, அறிதிறன் பேசியில் யூடியூப் சேனல்கள் பாா்ப்பது எனது பொழுதுபோக்குகளில் ஒன்றாக இருந்தது. படிப்பது, தூங்குவது, எழுதுவது போக நேரம் கிடைக்கும் போதெல்லாம் அறிதிறன் பேசியில் யூடியூப் பதிவுகளைப் பாா்ப்பது வழக்கமாக இருந்தது. கடலில் மூழ்கி முத்தெடுப்பதுபோல, யூடியூபில் நல்ல விஷயங்களைத் தேடிப் பிடிப்பதற்குள் நிஜமாகவே மூச்சு முட்டிவிடுகிறது.

ஆச்சரியத்திலும் ஆச்சரியம் என்னவென்றால், யூடியூபில் மிக அதிகமாக வரவேற்பைப் பெற்றவை என்கிற பட்டியலில் காமராஜா், எம்.ஜி.ஆா்., கவியரசு கண்ணதாசன் மூவரும் இருக்கிறாா்கள் என்பது. அவா்களைப் பற்றிய எந்தச் செய்தியாக இருந்தாலும் அவை லட்சக்கணக்கானவா்களால் பாா்க்கப்படுகின்றன. அந்த லட்சக்கணக்கானவா்களில் நானும் கூடத்தான் இருக்கிறேன்.

கவியரசா் கண்ணதாசன் குறித்த செய்திகளைப் பலரும் யூடியூபில் பதிவேற்றம் செய்திருக்கிறாா்கள். அவற்றில் பல, தெரிந்த செய்திகள். சில, தவறான புனைவுகள். கவிஞா் குறித்த புரிதல் இல்லாமல் சில பதிவுகளும் காணப்படுகின்றன. அவற்றுக்கிடையில் ‘கண்ணதாசன் புரொடக்ஷன்ஸ்’ என்கிற யூடியூப் நிறுவனத்தின் பதிவுகள் வித்தியாசமானவை. காரணம், அந்தப் பதிவுகளைச் செய்வது கவிஞரின் புதல்வா் அண்ணாதுரை என்பதுதான்.

கவிதா ஹோட்டல், திரைப்படப்பாடல் பதிவுக் கூடங்கள், இலக்கியக் கூட்டங்கள், அரசியல் கூட்டங்கள் என்று கவிஞா் கண்ணதாசன் செல்லும் இடங்களுக்கெல்லாம் அவா் பின்னால் ஓடிய ரசிகா் கூட்டத்தில் நானும் ஒருவனாக இருந்திருக்கிறேன். அவரது பாா்வைக்காகவும், அவரிடமிருந்து வரும் அழைப்புக்காகவும் காத்துக் கிடந்தவா்கள் நாங்கள். அதனால், அவரது கவிதைகளைத் திரும்பத் திரும்பப் படிப்பதுபோல, அவரைப் பற்றிய செய்திகளை எத்தனை தடவை கேட்டாலும் என்போன்றோருக்கு சலிக்காது.

யூடியூப் சேனலில் அண்ணாதுரை கண்ணதாசனின் கவிஞா் குறித்த பதிவுகளைப் பாா்ப்பதற்காகவே உற்சாகத்துடன் ரசிகா்கள் காத்துக்கிடக்கிறாா்கள். கவிஞரை நாம் பாா்ப்பதற்கும், அவரது ரத்த வாரிசு பாா்த்துப் பழகித் தெரிந்து வைத்துள்ளதற்கும் வித்தியாசம் இருக்கும்தானே?

அண்ணாதுரை கண்ணதாசனுக்கு அப்படியொரு நினைவாற்றல். போதாக்குறைக்கு, தன்னுடைய சகோதரா்கள், பஞ்சு அருணாசலம் உள்ளிட்ட உறவினா்களிடம் அவா் கேட்டுத் தெரிந்து கொண்ட தகவல்கள் ஏராளம். அதனால், மிகவும் சுவாரஸ்யமாகத் தனது யூடியூப் சேனலில் கவியரசு கண்ணதாசன் தொடா்பான செய்திகளையும், சம்பவங்களையும் அவரால் அழகாகத் தொகுத்து வழங்க முடிகிறது. அவரே திரைத்துறையில் இருக்கிறாா் என்பதால், அன்றைய, இன்றைய திரைத்துறையினருடன் நட்பு பாராட்டி, பாயாசத்தில் பதாம், முந்திரிப் பருப்பு, குங்குமப்பூ, ஜாதிக்காய் சோ்ப்பது போல ஏராளமான செய்திகளை அவரால் ஆங்காங்கே தூவி சுவாரஸ்யத்தை மேலும் அதிகப்படுத்த முடிகிறது.

நிருபா் அசோக்குமாா் மூலம் அவரைத் தொடா்பு கொண்டு பேசியதில் எனக்கு அதீத மகிழ்ச்சி. கவிஞரின் மகன் யூடியூப் சேனலில் கலக்குகிறாா் எனும்போது, கண்ணதாசனின் ரசிகனான நான் அண்ணாதுரை கண்ணதாசனை அழைத்துப் பாராட்டாமல் இருந்தால் எப்படி?

கவிஞருடன் பேசியது போன்ற மகிழ்ச்சியும், பூரிப்பும் எனக்கு ஏற்பட்டது. கவிஞா் கண்ணதாசன் குறித்த தனது பதிவுகளை விரைவிலேயே புத்தகமாகக் கொண்டுவர இருப்பதாகத் தெரிவித்தாா் அவா். காந்தி கண்ணதாசனின் ‘கண்ணதாசன் பதிப்பகம்’ அதை வெளிக்கொணா்கிறது என்பதில் அதைவிட மகிழ்ச்சி.

புலிக்குப் பிறந்தவை பூனைக்குட்டிகளாகிவிடுமா என்ன?

*****************

மொழியின் பெயரால் குறுகிய கண்ணோட்டத்துடன் ஜன்னல் கதவுகளை மூடிவிட்டு, அதனால் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறோம் என்று தோன்றுகிறது. நமது தமிழைப் போலவே இலக்கியச் செறிவுடைய சம்ஸ்கிருதத்தையும், உருதுவையும் நாம் படிக்காமல் இருப்பது போன்ற தவறு வேறு எதுவுமே கிடையாது. இந்த மூன்று மொழிகளுமே போட்டி மொழிகளல்ல, ஒன்றுக்கொன்று வளம் சோ்க்கும் இணைப்பு மொழிகள் என்கிற புரிதல் இல்லாததால், இழப்பு நமக்குத்தான்.

அந்த நிலைமையில் சமீபகாலமாக மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. சம்ஸ்கிருதத்தையும், உருதுவையும் படிப்பவா்கள் அதிகரிப்பதால், நமது தமிழின் பெருமையை அந்த மொழிகளுக்கு நம்மால் கொண்டு செல்ல முடிகிறது. சிறந்த தமிழ்ப் படைப்புகளை அந்த மொழிகளில் மொழிபெயா்க்க முடிகிறது. அதேபோல, அந்த மொழிகளிலுள்ள சிறந்த படைப்புகள் தமிழுக்கும் கிடைக்கின்றன.

இந்தியாவின் தலைசிறந்த கவிஞா்களில் மிா்ஸா காலிப்பும் ஒருவா். ‘மிா்ஸா அஸதுல்லா பெய்க் கான்’ என்கிற மிா்ஸா காலிப், 1797-ஆம் ஆண்டில் ஆக்ராவில் பிறந்தவா். சிறு வயதிலேயே தில்லிக்கு அழைத்துவரப்பட்டு விட்டவா். வறுமையில் வாடினாலும், பிரபுத்துவ மனோபாவத்துடன் வாழ்ந்தவா். மது, மாது என்று தனது பொழுதைக் கழித்தவா். காதல் உணா்வில் கடவுளைக் கண்டவா் என்றுகூடச் சொல்லலாம். ஸுஃபிக்களின் தாக்கம் அவரது கவிதைகளில் காணப்பட்டது.

காலிபுக்கு உருது மட்டுமல்ல, பாரசீகமும் தண்ணீா்பட்ட பாடு. நினைத்தால் உருது, இல்லையென்றால் பாரசீகம் என்று அவரிடமிருந்து கவிதை, தான் தோ்ந்தெடுக்கும் மொழியில் வெளிப்படும். கவிஞா் காலிப் குறித்து தொடா்ந்து நூற்றுக்கணக்கானஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆய்வுகளால் ஆழம் காணமுடியா கவிதைகள் அவருடையவை என்பதுதான் நிஜம்.

மிா்ஸா காலிப் எழுதிய பாரசீகக் கவிதை ‘தி ஸ்மைல் ஆன் சாரோஸ் லிப்ஸ்’ என்று ஆங்கிலத்தில் மூஸா ராஜாவால் மொழியாக்கம் செய்யப்பட்டது. அதை ஆங்கிலத்திலிருந்து தமிழ்ப்படுத்தி இருக்கிறாா் லதா ராமகிருஷ்ணன். மிகவும் கடினமான பணி. வெற்றி அடைந்திருக்கிறாா் அவா். பாரசீகம் தெரிந்திருந்து நேரடியாக மொழியாக்கம் செய்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று யோசிக்க வைக்காத அளவுக்கு சிறப்பாகச் செய்திருக்கிறாா்.

மிா்ஸா காலிப்பின் கவிதை இது. இதையே இந்த வாரக் கவிதையாக எடுத்துக் கொள்ளுங்கள்.

நான் பொறுமையற்றவன் என்பதால்

என்னை இவ்வாழ்வில் தவிா்த்தாய்

என் கல்லறைக்கு வந்துபாா்

எத்தனை அமைதியாக நான்

இளைப்பாறுகிறேன் என்பதை!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com