நிறங்கள் ஓர் ஐந்துடையான்

நிறங்கள் ஓர் ஐந்துடையான்

பரம்பொருள் ஐந்து நிறங்களோடு தொடர்புடையது. சிவபெருமானை மணிவாசகர், "நிறங்கள் ஓர் ஐந்துடையாய்' (1.49) என்று அழைக்கிறார்.

பரம்பொருள் ஐந்து நிறங்களோடு தொடர்புடையது. சிவபெருமானை மணிவாசகர், "நிறங்கள் ஓர் ஐந்துடையாய்' (1.49) என்று அழைக்கிறார். அந்த ஐந்து நிறங்கள் எவை என்பதில் அறிஞர்களிடையே பல கருத்துகள் நிலவுகின்றன.

(1) மறைமலையடிகள் "ஐந்து நிறங்கள் என்பது ஐந்து பூதங்களின் நிறங்களைக் குறித்தது' என்றார். மேலும் அது சுத்தவித்தை, ஈசுரம், சாதாக்கியம், சக்தி, சிவம் என்ற ஐந்தையும் குறித்திருக்கலாம்' என்றும் அவர் கருதுவார்.

ஐந்து பூதங்களின் நிறங்கள், "பொன்மை (மண்), வெண்மை (நீர்), செம்மை (தீ), கருமை (காற்று), நீலம் (ஆகாயம்) என்பன. சிவனை "வெளியாய் கரியாய் பச்சையனே செய்ய மேனியனே' (6.31) என்று மணிவாசகர் அழைக்கிறார். அப்பாடலில் ஐந்து பூதங்களிலும் இறைவன் இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே, இறைவனது ஐந்து நிறங்கள், ஐந்து பூதங்களாகஇருக்கலாம்.

(2) சிவனுக்கு ஐந்து முகங்கள் உண்டு. திருவாசகத்தில்,

"மாவேட்டாகிய ஆகமம் வாங்கியும்
மற்றவை தம்மை மகேந்தி ரத்திருந்து
உற்றஐம் முகங்க ளால்பணித் தருளியும்'
(2.18-20)

என்ற பகுதியில் சிவனுக்கு ஐந்து முகம் உண்டு என்ற செய்தி காணக்கிடைக்கிறது. ஆனால், அவற்றின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. "ஐந்து நிறங்கள் என்பது சிவனது ஐந்து முகங்களின் நிறங்களாக இருக்கலாம்' என்பார் தண்டபாணி தேசிகர். அவற்றை பின்வருமாறு குறிக்கலாம். சிவனது முகங்களின் நிறங்கள் இவ்வாறு சிவனது ஐந்து நிறங்கள் ஆகலாம்.

(3) அடுத்து "மாதொரு பாகன்' திருக்கோலத்தில் ஐந்து நிறங்களைக் காட்டுவார் சிவலிங்கனார்.

உமை : பசுமை
கழுத்து : நீலம் (கருமை)
இறைவன் : செம்மை
மார்பில் கொன்றை : பொன்மை
திருநீறு : வெண்மை
இவ்வாறு திருவாசகத்தில் சிவனுக்குரிய ஐந்து நிறங்கள் பற்றி மூன்றுவித கருத்துகள் நிலவுகின்றன.

1. ஐந்து பூதங்களின் நிறங்கள்;
2. சிவனது ஐந்து முகங்களின் நிறங்கள்;
3.மாதொரு பாகன் கோலத்தில் காணப்படும் நிறங்கள்.

முகம் நோக்கும் திசை            பெயர் நிறம்       எழுத்து

1            உச்சி          ஈசானம்                படிகம்                  சி
2            கிழக்கு      தத்புருடம்            குங்குமம்            வ
3            தெற்கு      அகோரம்              நீலம்                      ய
4            வடக்கு      வாமதேவம்         செவ்வரத்தம்    ந
5            மேற்கு       சத்தியோஜாதம் பால்                     ம

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com