இந்த வாரம் கலாரசிகன்

என் தாயாரின் மறைவுக்கு ஆறுதல் சொன்ன அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி!
இந்த வாரம் கலாரசிகன்

என் தாயாரின் மறைவுக்கு ஆறுதல் சொன்ன அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி! இழப்பின் நிதர்சனத்திலிருந்தும், துக்கத்தின் பிடியிலிருந்தும் நான் இன்னும் மீளவில்லைதான். அதே நேரத்தில், இறுதிச் சடங்குகள் நீண்டு நிற்பது, ஒரு விதத்தில் நமது கவனத்தை திசை திருப்பி சோகத்தின் அழுத்தத்தை சற்று குறைக்கத்தான் செய்கிறது. அதை உணர்கிறேன்.


தாயாரின் மறைவுச் செய்தி கேட்டு, தில்லியிலிருந்து உச்சநீதிமன்ற நீதிபதி வெ.இராமசுப்பிரமணியன் அழைத்திருந்தார். நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது அவர் சொன்ன ஒரு கருத்தை உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். என்னை நானே தேற்றிக் கொள்ள உதவிய அந்தக் கருத்து, ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு கட்டத்தில் தேவைப்படும்.

""நமது பெற்றோர்கள் எத்தனை காலம் வாழ்ந்தாலும் நமக்குப் போதாது. அவர்கள் தங்களது தினசரி செயல்பாடுகளை மற்றவர்களின் உதவியின்றி செய்துவருவது வரை அவர்களுக்குப் பிரச்னை இல்லை. ஆனால், செயல்பட இயலாத நிலையில் அவர்கள் தளர்ந்து விடும்போது, அவர்கள் உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் அனுபவிக்கும் சித்திரவதை கொஞ்ச நஞ்சமல்ல. வயோதிகத்தால் தளர்ந்து இயல்பு வாழ்வு தடம் புரளும்போது, அதிகம் சிரமப்படாமல் அவர்களின் கடைத்தேற்றம் நிகழ நாம் வேண்டிக்கொள்வதுதான் அறிவுபூர்வமானதாக இருக்கும்'' என்பதுதான் நீதிபதி வெ.இராமசுப்பிரமணியன் தெரிவித்த கருத்து. அதென்னவோ உண்மைதான். ஆனால், பாழாய்ப்போன மனது ஒத்துக்கொள்வதில்லையே. அந்தப் பக்குவம்எல்லோருக்கும் வாய்த்துவிடுமா என்ன?


முற்றும் துறந்த முனிவர்களேயாயினும் தாய்ப்பாசம் அவர்களுக்கு விதிவிலக்கு. துறவறம் மேற்கொண்டாலும் தாய்ப்பாசம் மட்டும் அனுமதிக்கப்படும் என்பதற்கு ஆதிசங்கரரும், பட்டினத்தடிகளும் முன்னுதாரணம். இது பற்றியும் நானும் நீதிபதியும் நிறைய நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.

எங்கோ இருந்த ஆதிசங்கரருக்குத் தன் தாயின் இறுதி நெருங்குவது ஞானதிருஷ்டியினால் தெரிகிறது. "இறுதிக் காலத்தில் அருகில் இருக்கிறேன்' என்று அம்மா ஆர்யாம்பாளிடம் வாக்குறுதி அளித்தது நினைவுக்கு வருகிறது. தூர இடைவெளி அந்த மகானுக்கு ஒரு பொருட்டேயல்ல. அஷ்டமாசித்திகளில் ஒன்றான "லகிமா' என்பது சூட்சும உடலாக மாறி, அணுக்கூறுகள் மூலம் காற்றில் மிதந்து சென்று மீண்டும் பழைய உடலைப் பெறும் அற்புத சக்தி.

தாயை சந்தித்த ஆதிசங்கரரை அங்கிருந்த வைதிக பிராமணர்கள் "துறவறம் மேற்கொண்ட நிலையில் தாயாரைப் பார்க்கக்கூடாது' என்று தடுக்கிறார்கள். அதையும் மீறி அவர் ஆர்யாம்பாளிடம் கொடுத்த வாக்குப்படி, அவரை சந்திக்கிறார். "அத்வைதம்' என்கிற உலகின் தலைசிறந்த வேதாந்தத் தத்துவத்தை போதித்த ஆதிசங்கரர், தன் தாயின் கரங்களைப் பற்றிக்கொண்டு குழந்தைபோல, தேம்பித் தேம்பி அழுகிறார். காவி உடையை அகற்றி எறித்து வெள்ளை உடை அணிந்து தாயாரின் காலடியில் அமர்கிறார்.

தனது இறுதி நெருங்கிய நிலையில், தாயார் ஆர்யாம்பாள் மகனிடம் ஒரு கோரிக்கை வைக்கிறார். ""உருவமோ, பெயரோ இல்லாமல் எங்கும் நிறைந்திருக்கும், எக்காலத்திலும் நிலைத்திருக்கும் அனைத்தையும் கடந்த அந்த பிரம்மத்தை (பிரம்மாவை அல்ல, "பிரம்மம்' என்றால் எங்கும் நிறைந்தது என்று பொருள்) எனக்கு உணர்த்துவாயா?'' என்பதுதான் அந்தக் கோரிக்கை.

அப்போது தன் தாயாருக்காக ஆதிசங்கரர் இயற்றியவைதான் சிவ புஜங்கமும், விஷ்ணு புஜங்கமும். ஆனால் அவை இரண்டையும்விட அனைவரையும் உலுக்கிவிடுவது, தன் தாயார் உயிர் நீத்தபோது தனது சோகத்தை அடக்கிக்கொள்ள முடியாமல் ஆதிசங்கரர் இயற்றிய "மாத்ருகா பஞ்சகம்'. "பிரம்மம்' என்கிற இறைப்பரம் பொருளையோ, "அத்வைதம்' என்கிற தனது சித்தாந்தத்தையோ பாடாமல், ஆதிசங்கரர் இயற்றிய ஸ்லோகங்கள்தான் (பாடல்கள்) "மாத்ருகா பஞ்சகம்'.

மாத்ருகா பஞ்சகத்தின் ஐந்து பாடல்களும் அன்னையின் பாசத்தையும், அவள் பொழிந்த அன்பினையும், தாயாரின் தியாகத்தையும் எடுத்தியம்பும் உன்னதமான இலக்கியப் படைப்பு. ஆன்மிகவாதியான ஆதிசங்கரரை அகற்றி நிறுத்தி, சாதாரண சங்கரர் தன் தாயார் மீது இயற்றிய பாசப் பொழிவு.

தாயாரின் இறுதிக் கட்டத்தில் ஆதிசங்கரர், பட்டினத்தார் இருவரது அனுபவமும் ஏறத்தாழ ஒன்றிப் போகின்றன. ஆனால், அவர்கள் இருவருமே படைத்திருக்கும் பாடல்கள் வெவ்வேறு கோணத்திலானவை. சிதையூட்டும் நேரத்தில் பட்டினத்தார் பாடும் பத்து பாடல்களும், துக்கத்தின் வெளிப்பாடல்ல, ஞானச்சித்தன் கூற்று. "மாத்ருகா பஞ்சகம்' ஆதிசங்கரர் மகனாக மாறியபோது பீரிட்டெழுந்த பாசக் குமுறல்!

கடந்த ஒரு வாரமாகப் புத்தகம் படிக்கும் மனநிலையில் நான் இல்லை. அதற்கு கவனக்குவிப்பு தேவைப்படுகிறது. நுனிப்புல் மேயும் வாசிப்புப் பழக்கம் எனக்குக் கிடையவும் கிடையாது. அதனால், இந்த வாரத்துக் குறிப்புகள் அனைத்துமே நினைவுப் பதிவுகளாக அமைகின்றன.

சூஃபி ஞானி ஒருவரைத் தேடிவந்தாள் வயதான பெண்மணி. தன்னை நாடி வரும் ஏழைகளுக்கு வாரி வழங்குவதில் அந்த சூஃபி ஞானி என்றைக்குமே தயக்கம் காட்டியதில்லை. என்ன வேண்டும் என்று கேட்ட சூஃபி ஞானியிடம் அந்த வயதான பெண்மணி முன்வைத்த கோரிக்கை இது - ""இளம் வயதிலிலேயே கணவனை இழந்துவிட்டேன். எனது ஒரே மகனும் எங்கேயோ காணாமல் போய்விட்டான். தனியாக வாழும் எனது சிறிய தோட்டத்தில் விளையும் காய்கறிகளை சந்தைக்குக் கொண்டு செல்ல என்னிடமிருந்த ஒட்டகம் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டது. சிரமப்படுகிறேன். எனக்கு சொந்தமாக ஒரு ஒட்டகம் கொடுத்து உதவவேண்டும்''

அதைக் கேட்ட சூஃபி ஞானி சிரித்தபடியே, ""என்னிடம் ஒரே ஒரு ஒட்டகக் குட்டிதான் இருக்கிறது. அதை உங்களுக்குத் தருகிறேன்'' என்றபடி அந்த ஒட்டகக் குட்டியைக் கொண்டுவர பணியாளுக்குக் கட்டளையிட்டார்.

"ஒட்டகக் குட்டி சுமை தாங்காதே, அதை வைத்துக்கொண்டு நான் என்ன செய்வது?' என்று திகைத்துப்போய் அந்த வயதான மூதாட்டி திரும்ப இருந்த நிலையில், பணியாள் ஒரு பெரிய ஒட்டகத்துடன் வந்து நின்றார்.

""இது பெரிய ஒட்டகமல்லவா? இதைப்போய் ஒட்டகக் குட்டி என்கிறீர்களே'' என்றாள் அந்த மூதாட்டி. சூஃபி ஞானி சொன்னார், ""தாயே! ஒவ்வொரு ஒட்டகமும் அதன் தாய்க்குக் குட்டியாகத்தானே இருந்திருக்கும்!''


தஞ்சை மாவட்டம் மேல அம்மாசத்திரத்தைச் சேர்ந்த கவிஞர் தேவரசிகன் ஒரு மாமாங்க காலத்துக்கு முன்னால் வெளியிட்ட கவிதைத் தொகுப்பு "மயில் நிலையம்'. அதில் "நானும் வண்ணத்துப் பூச்சிகளும்' என்கிற கவிதையிலிருந்து எடுக்கப்பட்ட வரிகள் இவை - இறைவன் அவசரப்பட்டு எழுதிய கவிதை
ஆண்கள்
அவசியப்பட்டு எழுதிய கவிதை
பெண்கள்
இயற்கையுடன்
வசியப்பட்டு எழுதிய கவிதை
வண்ணத்துப் பூச்சிகளும் பறவைகளும்
உற்சாகத்தின் குறியீடு
வண்ணத்துப் பூச்சிகள் என்றால்
விடுதலையின் குறியீடு
பறவைகள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com