இந்த வாரம் கலாரசிகன்

தனது முகநூல் பதிவு மூலம் சுப.வீரபாண்டியனும், கட்செவி அஞ்சல் தகவல் மூலம்  பிரியன் ஸ்ரீநிவாசனும், செ.திவான் எழுதிய  "ஜாலியன்வாலா பாக்' புத்தகம் குறித்த எனது கடந்த வாரப் பதிவில் காணப்படும்
இந்த வாரம் கலாரசிகன்

தனது முகநூல் பதிவு மூலம் சுப.வீரபாண்டியனும், கட்செவி அஞ்சல் தகவல் மூலம்  பிரியன் ஸ்ரீநிவாசனும், செ.திவான் எழுதிய  "ஜாலியன்வாலா பாக்' புத்தகம் குறித்த எனது கடந்த வாரப் பதிவில் காணப்படும் தவறைச் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். 1919-இல் ஜாலியன்வாலா பாக் படுகொலை நடந்தது என்பதையும், 1920 நவம்பர் மாதம் தேர்தல் நடந்து டிசம்பர் 17-ஆம் தேதிதான் சுப்பராயலு ரெட்டியார் தலைமையில் நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்தது என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

அவர்கள் கூறியிருப்பதுதான் சரி. எனது பதிவில் தவறு வந்திருக்கிறது என்பதை ஒத்துக் கொள்கிறேன். "ஜர்னல் ஆப் கிரிடிகல் ரெவ்யூ' என்கிற ஆராய்ச்சி இதழில் டாக்டர் சின்னத்தம்பி என்பவர் எழுதியிருக்கும் கட்டுரையின் அடிப்படையில் நான் அந்தப் பதிவைச் செய்தது தவறாகிவிட்டது. யானைக்கே அடி சறுக்கும் என்பார்கள். அடியேன் எம்மாத்திரம்? நண்பர் செ.திவான் மன்னிப்பாராக!


இரண்டு வாரங்களுக்கு முன்னால்,  நான் மதுரை சென்றிருந்தது  தெரிந்த நண்பர் மாலன் எனக்கொரு குறுஞ்செய்தித் தகவல் அனுப்பி இருந்தார்.

""மதுரையில் இருந்தால் ஒரு யோசனை. செப்டம்பர் 21, 1921-இல் காந்தியடிகள் மதுரையில் வேட்டிக்கு மாறியதன் நூற்றாண்டு வருகிறது. அந்த மாற்றம் அவரது வெளித்தோற்றத்தில் மட்டுமல்ல, உள்ளத்திலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அந்த நாளில் மதுரையில் நடந்த அந்த நிகழ்வைப் பற்றி யாரையாவது எழுதச் சொல்லுங்களேன். இதையெல்லாம் அடுத்த தலைமுறைக்கு "தினமணி' சொல்லவில்லை என்றால் வேறு யார் சொல்வார்கள்?'' என்பதுதான் அந்தக் குறுஞ்செய்தித் தகவல்.

மதுரை "தினமணி' அலுவலகத்தில்,  நண்பர் மாலன் அனுப்பியிருந்த செய்தியைப் படித்து முடித்து, சில நிமிஷங்கள்தான் கடந்திருக்கும். "நிமித்தம்' என்று சொல்வார்களே, அதுபோல என்னை சந்திக்க நேதாஜி தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் "நேதாஜி' வே.சுவாமிநாதன் வந்தார். எப்போது யாரை சந்திக்கும்போதும், விடைபெறும்போதும் விரைப்பாக நிமிர்ந்து நின்று "ஜெய்ஹிந்த்' என்கிற முழக்கத்துடன் அவர் சல்யூட் அடிக்கும்போது, நாடி நரம்புகளில் மின்சாரம் பாய்வதுபோன்ற  உத்வேகம் ஏற்படும்.

அவர் எனக்கு "காந்தி - எ குளோபல் பெர்ஸ்பெக்டிவ்' என்கிற டாக்டர் ஷோபனா நெலாஸ்கோ எழுதிய புத்தகத்தை அன்பளிப்பாகத் தந்தார்.  மதுரையில் காந்தியடிகள் தனது ஆடையணிதலில் மாற்றம் ஏற்படுத்திக்கொண்ட நூற்றாண்டைப் போற்றும் வகையில் நூறு ஆளுமைகள் எழுதியிருக்கும் கட்டுரைகளின் தொகுப்புதான் அந்தப் புத்தகம். டாக்டர் ஷோபனா  நெலாஸ்கோ  என்றதும் அவர் வடநாட்டவர் என்றோ, வெளிநாடு வாழ் இந்தியர் என்றோ கருதிவிட வேண்டாம். மதுரை பாத்திமா கல்லூரியில் பொருளாதாரப் பேராசிரியராக இருப்பவர். 

காந்திஜியின் பெயர்த்தி டாக்டர் இலா காந்தியின் அணிந்துரையுடன் வெளிவந்திருக்கும் அந்தப் புத்தகத்தில் இந்தியாவிலும், வெளிநாட்டிலும் வாழும் பல காந்திய சிந்தனையாளர்களும், அறிஞர்களும் காந்தியின் உடைமாற்றம் குறித்தும், மனமாற்றம் குறித்தும் மட்டுமல்லாமல், அந்த மகாத்மா சர்வதேச அளவில் ஏற்படுத்தி இருக்கும் தாக்கம் குறித்தும் தங்களது கருத்துகளைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

ஆங்கிலப் புத்தகம் குறித்து எழுதுவானேன் என்று சிலர் கேட்கக்கூடும். அதற்குக் காரணம் இருக்கிறது. இந்தப் புத்தகம் தமிழில் உடனடியாக மொழியாக்கம் செய்யப்பட வேண்டும். செப்டம்பர் 21 அன்று அது வெளியிடப்பட வேண்டும். காந்தி அருங்காட்சியகம் அமைந்திருக்கும் மாநகர் மதுரையில், மகாத்மாவின் அதிரடி மாற்றம் நிகழ்ந்த மண்ணில், டாக்டர் ஷோபனா நெலாஸ்கோ தமிழ் மொழியாக்கத்தை வெளியிட வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.

தினமணி வாசகர்களுக்கு, குறிப்பாக "தினமணி கதிர்' வாசகர்களுக்கு கே. இளந்தீபன் மிகவும் பரிச்சயமானவர். கதை, கவிதை, கட்டுரைகள், பேட்டிகள், துணுக்குகள் என்று இவரது பேனா சலிக்காமல் எழுதித் தள்ளிக்கொண்டே இருந்து வருகிறது. தினமணி கதிரில் 120  வாரங்கள் ஆலயங்கள் குறித்து இவர் தொடர்ந்து எழுதிவந்த கட்டுரைகள் பற்றி இப்போதும் பேசாதவர்கள் இல்லை.

இளந்தீபன் எழுதிய சிறுகதைத் தொகுப்புகள் ஏற்கெனவே வெளிவந்திருக்கின்றன. அவரது ஆலய தரிசனம்,  வியர்வையின் தோழர்கள், மலரும் நினைவுகளில் மக்கள் தலைவர், தஞ்சை மண்ணின் தமிழ்ச் சான்றோர்கள், வணக்கம் வாலி முதலிய புத்தகங்களின் வரிசையில், இப்போது வெளிவந்திருக்கிறது "எண்ணங்கள் வடிவங்கள்' புத்தகம்.  அச்சான சூட்டோடு உரிமையுடன் புத்தக விமர்சனத்துக்கு அனுப்பி இருந்தார்.

இளந்தீபனின் எழுத்தை முதன்முறையாக அச்சுவாகனத்தில் ஏற்ற வழிகோலிய "கையிலே பூ! நெஞ்சிலே சோகம்' கட்டுரையில் தொடங்கி, தினமணி கதிர், ஜனசக்தி, தாய் வார இதழ் என்று பல்வேறு தினசரிகளிலும், பருவ இதழ்களிலும் எழுதிய கட்டுரைகளின் தொகுப்புதான் "எண்ணங்கள் வடிவங்கள்'. தனது முதல் கட்டுரை அச்சுவடிவம் பெறும்போது கிடைக்கும் ஆனந்தம் அலாதியானது. அதை இளந்தீபன் பதிவு செய்திருப்பது சுவாரசியமானது.

கே. இளந்தீபனின் " எண்ணங்கள் வடிவங்கள்' வெறும் கட்டுரைத் தொகுப்பு என்று நினைத்துவிடாதீர்கள். ஒரு வகையில் இது ஒரு தகவல் களஞ்சியம். 1999 முதல் 2009 வரையிலான அவரது கட்டுரைகள், பேட்டிகள், தகவல்கள் ஆகியவற்றின் ஜனரஞ்சகமான தொகுப்பு.

கட்செவி அஞ்சலில் கவிதைகளைப் பகிர்ந்து கொள்ளும் நண்பர்களுக்கும், கவிதை ரசிகர்களுக்கும் ஓர் அன்பு வேண்டுகோள். நீங்கள் பகிர்ந்து கொள்ளும் கவிதை யாருடையது, எந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறது என்கிற தகவலையும் தயவுசெய்து குறிப்பிடுங்கள். உங்கள் கவிதையாக இருந்தால் அதைத் தெளிவாகத் தெரிவியுங்கள். நல்ல கவிதைகளைப் பெயரில்லாத அநாதையாக்கி, அவமானப்படுத்தாதீர்கள்.

கட்செவிக் குழுவில் பகிர்ந்து கொள்ளப்பட்ட கவிதை இது. யார் எழுதியதாக இருந்தாலும்,  தன்னம்பிக்கையை ஊட்டும் நல்ல கவிதை.

கண்கள் விரித்துக் காத்திருக்கிறது
வலை
மூக்கும் நீட்டிக் காத்திருக்கிறது
நாரை
கொக்கி முனையுடன் காத்திருக்கிறது
தூண்டில்
கால் கடுக்கக் காத்திருக்கிறது
கொக்கு
இவற்றில் ஏதாவது ஒன்றில்
சிக்கத்தான் செய்கிறது மீன்
இவை அனைத்துக்கும் தப்பி
வாழத்தான் செய்கிறது மீன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com