காரைக்கால் அம்மையும் ராக்கெட் ஏவுதளமும்!

விண்வெளி விஞ்ஞானத்திற்கும், காரைக்கால் அம்மைக்கும் என்ன தொடர்பு என்று எண்ணத் தோன்றுகிறது அல்லவா?
காரைக்கால் அம்மையும் ராக்கெட் ஏவுதளமும்!

விண்வெளி விஞ்ஞானத்திற்கும், காரைக்கால் அம்மைக்கும் என்ன தொடர்பு என்று எண்ணத் தோன்றுகிறது அல்லவா? நம் புராணங்களும், அறிவியலும் வெறும் கற்பனை அன்று; அவை ஒன்றோடொன்று தொடர்புடையவை என்பதற்கு எண்ணற்றச் சான்றுகள் தொடர்ந்து கிடைத்தவண்ணம் உள்ளன. 

அனுமன் உதவியால் இலங்கைத் தீவுக்கு ராமர் பாலம் அமைத்தார் என்பது ராமாயணம் கூறும் கதை. அதை, இன்றைய "சாட்டிலைட்' விஞ்ஞானம் "ஆடம்ஸ் பிரிட்ஜ்' என மெய்ப்பித்துள்ளது. அதுபோல, காரைக்கால் அம்மையாரின் வரலாறும் இன்றைய வானியல் விஞ்ஞானத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அறுபத்து மூன்று நாயன்மார்களில் பெண் அடியார்கள் மூவரில் முதன்மையானவர் காரைக்கால் அம்மையார். பெரியபுராணம் இவரது வரலாற்றை விரித்துரைக்கிறது.  "தன் கணவனுக்கு உதவாத இந்த உடம்பின் இளமை இனி எதற்கு' என்ற முடிவுக்கு வந்து, குலசேகரன்பட்டினம் என்ற அத்தலத்திலேயே சிவபெருமானை வேண்டிப் பேயுருவம் பெறுகின்றார். அதுமுதல் காரைக்காலம்மையார் ஆகின்றார். அங்கேயே "அற்புதத்திருவந்தாதி' பாடி, அப்பட்டினத்தில் இருந்து கயிலை நோக்கிச் புறப்படுகிறார்.  இனி, இந்த வரலாறு நிகழ்ந்த பட்டினம் குலசேகரப்பட்டினம்தான் என்பதற்கான சான்றுகள் வருமாறு:  

சேக்கிழார்,  பரமதத்தன் சென்ற இடத்தை, "கன்னி நாட்டோர் பட்டினம் மருங்கு சேர்ந்தான்', "பாண்டி நாட்டுப் பட்டினம்' என்றும் குறிப்பிடுகின்றார். பாண்டிய நாட்டுக்குக் "கன்னி நாடு' என்ற பெயர் உண்டு. பட்டினம் என்ற சொல்லுக்குக் கடற்கரை நகரம் என்பது பொருள். காரைக்கால் அம்மையார் அந்தத் தலத்தில் கால் வைத்த பிறகு "அந்த ஊரை புனிதப்படுத்தும் விதமாக, மற்றொரு பாடலில்,  "மருங்கு மாநகர் வந்து' என்ற வரியால் சேக்கிழார் குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது.

பாண்டியர் ஆட்சிக் காலத்தில் கொற்கை, காயல்பட்டினம் பாண்டிய மன்னன் பெயர் கொண்ட குலசேகரன்பட்டினம் என மூன்று துறைமுகங்கள் செயல்பட்டு வந்ததை வரலாறு எடுத்துக்காட்டுகின்றது.

குலசேகரன்பட்டினம் துறைமுகம் வாயிலாக யவனர்களும், சீனர்களும் வணிகம் செய்ததையும், இங்கே பாண்டிய மன்னனுக்குத் தனியே ஓய்வு இல்லம் இருந்ததையும் வரலாற்றுச் சான்றுகள் மூலமும் சங்க இலக்கியங்கள் வாயிலாகவும் அறிய முடிகின்றது. 

இவ்வூரில் உள்ள பழம் பெரும் சிவாலயமான அறம் வளர்த்த நாயகி உடனாய பாண்டீஸ்வரர் கோயிலுக்குக் காஞ்சி விஜயகச்சி கொண்ட பாண்டீஸ்வரர் என்ற பெயர் கல்வெட்டில் உள்ளது.

இது காஞ்சியில் பாண்டிய மன்னன் கொண்ட வெற்றியைக் குறிக்கும் வகையில் சூட்டப்பட்ட பெயராகும். இவை தவிர, இந்தக் கோயிலில் உள்ள பிற கல்வெட்டுகளின் விவரங்கள் இன்னும் வெளிச்சத்துக்கு வரவில்லை. 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தொட்டிக்கலை சுப்பிரமணியர் இயற்றிய "குலசை மாலை' நூலில், "சீனத்தவர், மலையாளத்தவர் பலர் சிலர் வரு சாலைகளில்...' என்ற செய்யுள் வரிகள், சீனர்கள், மலையாள  நாட்டினர் வணிகம் செய்ததை உணர்த்துகின்றன. மேலும், பாண்டீஸ்வரர் கோயிலில் காரைக்கால் அம்மையாரின் இளம் பருவமும், பேயுருவம் கொண்ட சிலைகளும் அமைந்துள்ளன.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக, சேக்கிழாரின் பெரியபுராணத்தை ஆய்வு செய்து உரை எழுதிய சி.கே. சுப்பிரமணிய முதலியாரின் நூலும் (1940) சுப்பராய நாயகர் விளக்க நூலும் (1893) சான்றாகத் திகழ்கின்றன. மேலும் அம்மையார், குலசேகரன்பட்டினத்தின் ஊர் நடுவில் பாடல்களைப் பாடினார் எனக் கூறப்படுகின்றது.

இக்கோயிலில் ஆடலரசப் பிள்ளையார், சுதை வடிவ நடராஜர்,  சிவகாமி அம்மையின் வடிவம் காட்சி தர, நடராஜர் காலடியில் காரைக்கால் அம்மையின் தவயோகி வடிவம் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலின் அருகில், 2004-இல் திறந்து வைக்கப்பட்ட நினைவுத்தூணும் அமைந்துள்ளது.

இதுபோன்ற வரலாற்றை உறுதி செய்யும் சான்றுகள் பிற பாண்டிய நாட்டுப் பட்டினங்களான கொற்கையிலும், காயல்பட்டினத்திலும் அறியப்படவில்லை. எனவே, காரைக்கால் அம்மையார் தொடர்புடைய பட்டினம் இன்றைய குலசேகரன்பட்டினமே என்பது உறுதி செய்யப்படுகின்றது.

பேய் உருவம் வேண்டிப் பெற்ற காரைக்கால் அம்மையார், குலசேகரன்பட்டினத்தில் இருந்து கயிலை சென்ற பயணத்தை சேக்கிழார் பெருமான், "வடதிசை தேசமெல்லாம் மனத்தினும் கடிது சென்று' என்ற ஒரே வரியில் தெரிவித்துவிடுகிறார். ஆனால், திருநாவுக்கரசர் நடைப்பயணமாகவே கயிலை சென்ற காட்சிகளைப் பத்துப் பாடல்களில் விளக்கமாகத் தருகின்றார். அவர் எந்தெந்தத் தலங்களையெல்லாம் இடைவழியில் வழிபட்டார் என்றும் சேக்கிழார் தெரிவிக்கின்றார். ஆனால், அம்மையாருக்கு அப்படி விளக்கம் ஏதும் தெரிவிக்கவில்லை.

எனவே, காரைக்கால் அம்மையார் குலசேகரன்பட்டினத்திலிருந்து நேரடியாகக் கயிலைக்கு வடதிசை தேசங்களை எல்லாம், மனோ வேகத்தைவிட வேகமாகக் கடந்து சென்றிருக்கிறார் என்பதை நம்மால் அறிய முடிகிறது.

காரைக்கால் அம்மையார் வேண்டிப் பெற்ற பேய் வடிவம் எலும்பும் தோலும் கொண்ட  வாயு வடிவம் என்பதாலும், மனோ வேகத்தினும் கடிது சென்றார் என்பதாலும், இப்பயணத்தின் இடை நிகழ்வுகள் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.

இதனை சேக்கிழார் பெருமானின்,
"வடதிசைத் தேசம் எல்லாம் 
மனத்தினும் கடிதிற் சென்று
தொடையவிழ் இதழி மாலைச்
சூலபா ணியனார் மேவும்
படரொளிக் கயிலை வெற்பிற்
பாங்கணைந் தாங்குக் காலின்
நடையினைத் தவிர்த்து பார்மேல்
தலையினால் நடந்து சென்றார்'

என்ற செய்யுள் வரிகள் உறுதி செய்கின்றன. எனவே, காரைக்கால் அம்மையார் பேயுருவம் கொண்டு வான்வெளிப் பயணமாகவே கயிலை சென்றிருக்க வேண்டும் எனக் கருதலாம். இனி, ராக்கெட் ஏவுதளம் குறித்து பார்ப்போம்.

இந்தியாவில் தற்போது ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் மட்டுமே இரண்டு ராக்கெட் ஏவுதளங்கள் அமைந்துள்ளன. இதில் தமிழக அரசின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு எடுத்துள்ள முடிவின்படி மூன்றாவது ராக்கெட் ஏவுதளம் தமிழ்நாட்டில்  உள்ள குலசேகரன்பட்டினத்தில் அமைய உள்ளது. இதற்கான பூர்வாங்கப் பணிகள் தற்போது விரைந்து நடந்து வருகின்றன. 

இதற்கான தொழில்நுட்பக் காரணம் முக்கியமானது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும்போது, அது பூமியின் நடுக்கோடான, பூமத்திய ரேகையில் இருந்து 13.43 டிகிரி வட அட்ச ரேகையில் உள்ளது. இதனால், இலங்கை நாட்டின் வான்பரப்பான தென்கிழக்கில் ஏவப்பட்டு, பிறகு கிழக்கு நோக்கி திருப்பப்படுகின்றது.

இதனால் அதிக எரிபொருளும், கூடுதல் நேரமும் செலவாகின்றது. ஆனால், குலசேகரன்பட்டினம் பூமத்திய ரேகையில் இருந்து 8 டிகிரி வட அட்சரேகையில் அமைந்துள்ளது. இதன் பயனால், நமது ராக்கெட்டை எந்த அயல் நாட்டின் வான்பரப்பின் மீதும் பறக்காமல், தெற்கு திசையில், நேர்க்கோட்டில் எளிதாக விண்ணில் செலுத்த முடியும். இதில், பயண தூரம் குறைவதோடு, எரிபொருளும், பயண நேரமும் கணிசமாக மிச்சமாகின்றன. இத்தகைய அறிவியல் காரணங்களால் தற்போது மத்திய அரசு, ராக்கெட் ஏவுதளத்தினை குலசேகரன்பட்டினத்தில் அமைத்து வருகின்றது.

இப்போது நாம் காரைக்கால் அம்மையார் கதைக்கு வருவோம். விஞ்ஞான வளர்ச்சியோ, அறிவியல் ஞானமோ, தொழில்நுட்பமோ அக்காலத்தில் இல்லை என்று நாம் நினைத்த காலகட்டத்தில், காரைக்கால் அம்மையார் குலசேகரன்பட்டினத்தில் இருந்து மனவேகத்தில் திருக்கயிலை சென்றார் என்பது தெய்வப்புலவர் சேக்கிழாரின் திருவாக்கு ஆகும். 

பூமியின் பூமத்திய ரேகையில் அமைந்துள்ள பகுதியைத் தேர்வு செய்தது அறிவியல் ஞானத்தால் உண்டான நிகழ்வு என்பது நமக்குப் புலப்படுகின்றது. இதன்மூலம் அறிவியலும், ஆன்மிகமும் கட்டுக் கதைகளல்ல என்பதும் நன்கு புலப்படுகின்றது.

இவ்வளவு சிறப்புவாய்ந்த தலத்தில் அமையவுள்ள, குலசேகரன்பட்டினத்தின் ஏவுதளத்திற்கு, "காரைக்கால் அம்மையார் ராக்கெட் ஏவுதளம்' என்ற பெயர் வைப்பது வரலாற்றுப் பொருத்தமான செயலாக அமையும். 

இவ்வரலாற்று உண்மைகளுக்கு மதிப்பளித்து காரைக்கால் அம்மையின் பெருமைக்கு சிறப்பு சேர்க்க வேண்டும் என்பதே தமிழன்பர்கள் பலருடைய வேண்டுகோள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com