இந்த வாரம் கலாரசிகன் - !19-12-21)

தமிழக அரசு புலவர் வே.பதுமனாருக்குத் "தூய தமிழ்ப் பற்றாளர்' விருது வழங்கி கெளரவித்திருக்கிறது.
இந்த வாரம் கலாரசிகன் - !19-12-21)

தமிழக அரசு புலவர் வே.பதுமனாருக்குத் "தூய தமிழ்ப் பற்றாளர்' விருது வழங்கி கெளரவித்திருக்கிறது. அவருடைய மாணவப் பருவ நண்பரான வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமையில் வேலூரில் அவருக்கு மிகப்பெரிய அளவில் பாராட்டுக் கூட்டம் நடந்தது. அதில் கலந்துகொள்ள முடியாதது எனக்கு வருத்தம்தான்.

குழந்தைகளுக்குத் தமிழில் பெயர் சூட்டுவதற்காக 54,000 தூய தமிழ்ப் பெயர்கள் கொண்ட நூலைத் தொகுத்திருக்கிறார் புலவர் வே.பதுமனார். "பிற மொழிகளை நேசியுங்கள், ஆனால் தாய்மொழியை சுவாசியுங்கள்' என்பது புலவர் பதுமனாரின் கொள்கை. இயன்றவரை தமிழில் பேசுவது என்பதை வழக்கமாகவே கொண்டிருக்கும் அந்தப் பெருந்தகை, "தமிழியக்கம்' அமைப்புக்கு அடித்தளமிட்டவர்களில் ஒருவர்.

புலவர் வே.பதுமனார், குடியாத்தம் நகரில் "குடியேற்றம் முத்தமிழ்ச் சுவைச் சுற்றம்' என்கிற இலக்கிய அமைப்பை நிறுவி இருக்கிறார். கடந்த கால் நூற்றாண்டாகத் தமிழ்ச்சேவை செய்து கொண்டிருக்கும் அந்த அமைப்பின் மூலம் இலக்கியக் கூட்டங்கள், கருத்தரங்குகள், வழக்காடு மன்றங்கள் எனப் பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள் அவரும், தமிழார் வலர்களான அவருடைய நண்பர்களும்.

வரும் பிப்ரவரி மாதம் "குடியேற்றம் முத்தமிழ்ச் சுவைச் சுற்றம்' வெள்ளி விழா காண இருக்கிறது. அதற்கான முனைப்பில் இருக்கிறார் புலவர் வே.பதுமனார். இதுபோன்று கால் நூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழ்ப் பணியாற்றும் இலக்கிய அமைப்புகள் அனைத்தும் அரசால் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் தொடர்ந்து செயல்படுவதற்கு ஏதுவாக மானியம் அளிக்கப்படுதல் 
அவசியம். 

-----------------------------------------------------------------

நெல்லை மாவட்டம்   கீழப்பாவூரில் பிறந்த கணேசன், தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் வளர்ந்ததும்,  விமானப்படையில் சேர்ந்து பணியாற்றியதும், நாடகங்களில் நடிக்கத் தொடங்கியதும், இயக்குநர் கே.பாலசந்தரால் "பட்டினப் பிரவேசம்' திரைப்படம் மூலம் அறிமுகமாகி, டெல்லி கணேஷ் என்கிற பெயரில் சினிமா நடிகராக வலம் வந்து கொண்டிருப்பதும் சுவாரசியமான வாழ்க்கைப் 
பயணம். அதன் தொடக்கம்,  தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு.

"மத்யமர்' என்கிற இணையத்தில் நடிகர் டெல்லி கணேஷ் எழுதிவந்த "பிள்ளையார் சுழி' என்கிற தொடர் இப்போது புத்தக வடிவம் பெற்றிருக்கிறது. தனது கடந்தகால வாழ்க்கையிலிருந்து தொடங்கி, படிப்படியாக நகர்ந்து அல்லது விதி வகுத்துத் தந்த வழியில் நடந்து, எப்படி தமிழ் சினிமாவின் முன்னணி குணச்சித்திர நடிகர்களில் ஒருவராக டெல்லி கணேஷ் உயர்ந்தார் என்கிற வாழ்க்கைப் பயணம்தான் "பிள்ளையார் சுழி'.

""வல்லநாடு கணேசனை மதுரை கணேசனாக மாற்றியது டி.வி.எஸ். மதுரை கணேசனை கார்ப்போரல் கணேசனாக மாற்றியது இந்திய விமானப்படை. ஏர்ஃபோர்ஸ்காரனை நாடகக்காரனாக மாற்றியது டெல்லியின் தக்ஷிண பாரத நாடக சபை. நாடகக்காரனை "டெல்லி கணேஷ்' என்று நாமகரணம் சூட்டி சினிமாக்காரனாக மாற்றியது திரு. கே. பாலசந்தர்'' என்று தனது வாழ்க்கைப் பயணத்தை ரத்தினச் சுருக்கமாக சில வரிகளில் அடக்கிவிடுகிறார் டெல்லி கணேஷ். அதன் விரிவாக்கம்தான் "பிள்ளையார் சுழி' புத்தகம்.

பல சுவாரசியமான சம்பவங்கள். படிக்கத் தொடங்கினால் சிரிப்பும், திகைப்பும், வியப்புமாக சரவெடியைக் கொளுத்திப் போட்டாற்போல படபடவென்று டெல்லி கணேஷின் வாழ்க்கைப் பயணம் உருண்டோடி, கடைசி பக்கத்தில், "எல்லாம் அந்த வல்லநாடு கணேசனின் அருள்' என்கிற பதிவுடன் முடிகிறது. நடிப்பதைப் போலவே டெல்லி கணேஷுக்கு எழுத்தும் இயல்பாகவே வருகிறது.


சாகித்திய அகாதெமியின் "இந்திய இலக்கியச் சிற்பிகள்' வரிசையில் வெளியாகி இருக்கிறது உஷா மகாதேவன் எழுதித் தொகுத்த "பண்டித ம.கோபாலகிருஷ்ண ஐயர்' பற்றிய புத்தகம். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ் மொழிக்கும் அதன் வளர்ச்சிக்கும் அருந்தொண்டாற்றிய தமிழறிஞர் ம.கோ. நான்காம் தமிழ்ச் சங்கம் நிறுவியதில் அவரது பங்கு குறிப்பிடத்தக்கது.

ம.கோ. இல்லையென்றால் மகாகவி பாரதி தமிழுலகுக்கு அறிமுகமாகி இருப்பாரா என்று கேட்கக்கூடாது என்றாலும்கூட, அதை முற்றிலும் மறுத்துவிடவும் முடியாது. எட்டயபுரத்திலிருந்து மதுரைக்கு வந்த சுப்பிரமணிய பாரதியை ஆதரித்தவர் ம.கோ. தான். அவருடைய உதவியால்தான் பாரதி மதுரை சேதுபதி பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்தார். "சுதேசமித்திரன்' பத்திரிகை அதிபர் ஜி. சுப்பிரமணிய ஐயரிடம் பாரதியாரை உதவி ஆசிரியர் பணிக்குப் பரிந்துரைத்தவரும் ம.கோ.தான்.

பாரதியார், வ.உ.சி.,  சுப்பிரமணிய சிவா முதலிய விடுதலைப் போராட்ட வீரர்களுடன் நெருக்கமான தொடர்பில் இருந்த பண்டித ம.கோபாலகிருஷ்ண ஐயர் ஆற்றியிருக்கும் தமிழ்ப்பணி சாமானியமானதல்ல. அதைப் பதிவு செய்திருப்பது அவருடைய மகன் வயிற்றுப் பெயர்த்தி உஷா மகாதேவன். அவருக்கு நாம் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்.

-----------------------------------------------------------------

சென்னையிலுள்ள  தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் தேனி மாவட்டம், சின்ன மனூரைச் சேர்ந்த விஜயானந்தலட்சுமியின் முதல் கவிதைத் தொகுப்பு "உடன்பாட்டு வெயில்' புத்தக விமர்சனத்துக்கு வந்திருந்தது. 

எதார்த்தமும், எளிமையும் வார்த்தைகளுடன் குழைந்து நெளிந்து கவிதை வரிகளாகும் அதிசயத்தை இவரது ஒவ்வொரு கவிதையிலும் காணமுடிகிறது. அந்தத் தொகுப்பிலிருந்த ஒரு கவிதை -

இடுப்பில் கால்போட்டுத் தூங்கும்
குழந்தையை
அசங்காமல் தள்ளி வைத்துவிட்டு
வயிற்றில் உலையோடு 
வருபவனுக்கு
பொங்கிப்போடும்
இரட்டை அன்புநிலை
ஆரம்பமான இடத்தில்
சுவர்களுக்குள்ளும் சாத்தியமாகிறது பறத்தல்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com